கோவை கொடிசியா வளாகத்தில் சைமா டெக்ஸ்பேர் கண்காட்சி துவங்கியது

பீளமேடு :  தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்களின் கண்காட்சியை நடத்தி வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான 13-வது டெக்ஸ்பேர் கண்காட்சி கொடிசியா நிரந்தர கண்காட்சி வளாகத்தில் நேற்று காலை தொடங்கியது. இதில், சைமா தலைவர் ரவிசாம், உதவி தலைவர் துரை பழனிசாமி, துணைத்தலைவர் எஸ்.கே.சுந்தரராமன், பொதுச்செயலாளர் செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கொடிசியாவின் ஏ, பி ஹால்களில் டெக்ஸ் பேர் கண்காட்சிக்காக 295 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு, குஜராத், மராட்டியம், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், மேற்கு வங்காளம், உத்தரகாண்ட், கர்நாடகா, டாமன் டையூ மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த சுவிட்சர்லாந்து, இத்தாலி  மற்றும் பெல்ஜியம் மற்றும் ஜப்பான், சீன நாடுகளின் ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு  வைத்துள்ளனர்.

இந்த கண்காட்சியை பார்வையிட ஏராளமான பார்வையாளர்கள் வந்து தங்களுக்கு தேவையான இயந்திரங்களின்  செயல்பாடுகள், சிறப்பு- அம்சங்கள் பற்றி கேட்டறிந்தனர். ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களை வாங்க வந்திருந்தவர்கள் மற்றும் மில் பிரதிநிதிகள் என ஒவ்வொரு அரங்கிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

இதுகுறித்து சைமா தலைவர் ரவிசாம் கூறியதாவது:  சைமா சார்பில் சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் கண்காட்சி தொடங்கி உள்ளது. கண்காட்சியை மத்திய- ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் பார்வையிடுகிறார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய தகவல் மற்றும் ஒலி பரப்புத்துறை இணை அமைச்சர் முருகன், மாநில மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

கோவை மாநகரம், நாட்டின் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தியில் 70 சதவீதத்தை தன்னகத்தே  கொண்டுள்ளது. உலகளவில் கோவை ஜவுளித் தொழிலின் உற்பத்தி மையமாக திகழ்வதால், “டெக்ஸ் பேர்” கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு நல்ல வர்த்தகம் நடக்கும். ஜவுளி ஆலைகள் ஒவ்வொரு வருடமும் ஆண்டு மொத்த  விற்பனையில் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை உதிரிபாகங்கள் வாங்குவதற்கும், 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை  ஜவுளி இயந்திரங்களை புதுப்பிப்பதற்கும் செலவிடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: