சாதி மறுப்பு திருமணத்தால் உயிருக்கு அச்சுறுத்தல் காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, கீழ்சீசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் மகள் நித்தியா(21), பிஎஸ்சி பட்டதாரி. இவர், பள்ளியில் படிக்கும்போது, அவருடன் படித்த மருதாடு கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார்(24) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

எனவே, இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். அதன்படி, வீட்டை வீட்டு வெளியேறிய நித்தியா, கடந்த 10ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் சதீஷ்குமாரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், நித்தியா கடத்தப்பட்டதாக அவரது பெற்றோர் கடந்த வாரம் வந்தவாசி போலீசில் புகார் அளித்துள்ளனர். எனவே, போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்தியாவை தேடி வந்த நிலையில், காதல் திருமணம் செய்து கொண்ட நித்தியா, அவரது கணவர் சதீஷ்குமாருடன் நேற்று திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்.

அப்போது, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், தங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு அளிக்குமாறு புகார் மனு அளித்தார். எஸ்பி அலுவலகத்தில் நித்தியா அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

பள்ளியில் படிக்கும்போது சதீஷ்குமாருடன் காதல் ஏற்பட்டது. இந்த தகவல் எனது பெற்றோருக்கு தெரிந்ததால், அடித்து துன்புறுத்தினர். மேலும், கட்டாயப்படுத்தி வேறொருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். எனவே, வீட்டைவிட்டு வெளியேறி, சதீஷ்குமாரை சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டேன். இதனால் எங்கள் திருமணத்தை எதிர்க்கின்றனர். எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: