முட்புதர்களாக காட்சியளிக்கிறது அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வரும் நீர் வழித்தடங்கள்

சேலம் : ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் நீர்வழித்தடங்களின் அளவு நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை நல்லமுறையில் கைகொடுத்துள்ளது. இதன் காரணமாக இன்றும் 50 சதவீத ஏரி, குளம், அணைகளில் தண்ணீர் காணப்படுகிறது.

அதேபோல் கிணறு, போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டமும் குறையாமல் உள்ளது. இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு கோடையில் நல்ல மழை கை கொடுத்தது. இதன் காரணமாக சுமார் 50 ஆண்டுகளுக்கு பின், கோடையில் மேட்டூர் அணை 110 அடிக்கு மேல் சென்றது. எப்போதும் மேட்டூர் அணையில் இருந்து கோடையில் டெல்டா மாவட்டங்களுக்கு நீர்திறப்பு இருக்காது. நடப்பாண்டு நீர்வரத்து அதிகரிப்பால், டெல்டா மாவட்டங்களுக்கு வழக்கமான ஜூன் 12ம்தேதிக்கு முன்பே நீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, சமீப காலமாக நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் நடந்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளின் அளவு சுருங்கி, சிறிய மழைக்கே மழைநீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது.

மேலும், பல இடங்களில் நீர் வழித்தடங்கள் ஆண்டுக்கணக்கில் தூர்வாரப்படாமல் உள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் பருவமழைக்கு முன்பே நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து நீர்வள ஆர்வலர்கள் கூறியதாவது: சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளம், அணைகள் உள்ளன. இதில் சேலம் குமரகிரி ஏரிக்கு இரு வழித்தடங்களில் மழைநீர் ஏரிக்கு வருகிறது.

ஜருகுமலையில் பெய்யும் மழைநீரானது கந்தாஸ்ரமம், அம்மாப்பேட்டை காலனி, ராமநாதபுரம் வழியாகவும், நாமமலையில் பெய்யும் மழைநீரானது தெற்கு அம்மாப்பேட்டை, ராமநாதபுரம் வழியாகவும் ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இந்த இரு நீர்வழித்தடங்களில், தற்போது சாக்கடை கழிவுநீர் தான் ஓடுகிறது. மேலும், நீர்வழித்தடத்தில் செடிகள், கொடிகள் வளர்ந்து முட்புதராக காட்சியளிக்கிறது. இந்த ஏரிக்கு நீர் வழித்தடங்களில் கரை 20 முதல் 30 அடியாக இருந்தது. இவை நாளுக்கு நாள் சுருங்கி ஒரு சில பகுதியில் 5 அடியாகவும், 10 அடியாகவும் உள்ளது. ஏராளமான இடத்தில் கரைகள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது.

ஊத்துமலையில் பெய்யும் மழைநீரானது, கால்வாய் வழியாக குருவிபனை ஏரிக்கு வருகிறது. இந்த ஏரிக்கு வரும் நீர்வழித்தடம், தற்போது 2 அடி முதல் 3 அடியாக சுருங்கிவிட்டது. ஏரியின் பரப்பளவு நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. இந்த ஏரியையொட்டி கட்டப்பட்டுள்ள கோயில்களில் சாப்பிட்டு விட்டு தூக்கி எறியப்படும் கழிவுகள் ஏரியில் தான் கொட்டப்படுகிறது. ஏரிக்கு வரும் நீர்வழிப்பாதையிலும், நீர் வெளியேறும் பாதையில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன. மலையில் இருந்து வழிந்தோடும் தண்ணீரால், ஏரி நிரம்ப வழிவகை இல்லை. தொடர் மழை பெய்தால் மட்டுமே ஏரி நிரம்ப வாய்ப்புள்ளது.

அதே போல், ஏற்காடு மலைப்பாதையில் வழிந்தோடும் மழைநீரானது அடிவாரத்தில் உள்ள புது ஏரிக்கு வருகிறது. அங்கிருந்து மூக்கனேரிக்கும், பின்னர் திருமணிமுத்தாற்றில் கலக்கிறது. இதில் மூக்கனேரியில் இருந்து மன்னார்பாளையம் வழியாக அணைமேடு வரை திருமணிமுத்தாற்றின் நீர்வழித்தடத்தில் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்களாக காட்சியளிக்கிறது. பொன்னம்மாப்பேட்டை பகுதியில், சாக்கடை கழிவுநீர் எல்லாம் திருமணிமுத்தாற்றில் தான் விடப்படுகிறது.

ஒரு காலத்தில் 100 அடியாக இருந்து கரையின் அளவு நாளுக்கு நாள் சுருங்கி கொண்டே வருகிறது. ஜருகுமலையின் மறுபுறத்தில் வழிந்தோடும் மழைநீரானது சன்னியாசிகுண்டு வழியாக எருமாபாளையம் ஏரிக்கு செல்கிறது. சன்னியாசிகுண்டில் கடந்த 2010ம் ஆண்டு ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையை சுற்றி முட்புதர்களாக காட்சியளிக்கிறது.

பல ஆண்டாக நீர்வழித்தடம் தூர்வாரப்படாததால் நீர்வழித்தடத்தின் ஆழம் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக நீர்வழிடத்தடத்தில் மழைநீர் தேங்காமல் விரைவில் வறண்டு போய்விடுகிறது. எனவே, இது போன்ற நீர்நிலைகள் அனைத்தையும் தூர்வாரி சீரமைக்க வேண்டும். இவ்வாறு நீர்வள ஆர்வலர்கள் கூறினர்.

Related Stories: