3 மாதத்தில் 17 சிசுக்கள் உயிரிழப்பு சிசு மரணங்களை தடுக்க மருத்துவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிசு மரணம் மற்றும் மகப்பேறு மரணம் தடுப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பிரசவங்கள் நடைபெறுகிறது. கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெற்ற 17 சிசு மரணம் மற்றும் ஒரு மகப்பேறு மரணம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. சிசு மரணம் நடைபெற்ற சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிசு மரணம் குறித்து ஆய்வறிக்கைகள் சமர்பித்தனர்.

இந்த ஆய்வறிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இனிவரும் காலங்களில் பிரசவத்தின்போது சிசு மரணம் ஏற்படாதவாறு மருத்துவர்கள் தேவையான அனைத்து மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி கவனமுடன் மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும் சிசு மரணத்தை தடுத்திட குழந்தைகளுக்கு கிருமி தொற்று ஏற்படாதவாறு தொடர் கண்காணிப்புகளை மருத்துவர்கள் மற்றும் தாய்மார்கள் மேற்கொள்ள வேண்டும். மகப்பேறு மருத்துவம் அனைத்தும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகளில் தரமாகவும் சிறப்பாகவும், இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகப்பேறுகளுக்கு அரசு மருத்துவமனைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் பொதுமக்கள் கருக்கலைப்புகளை சட்டப்பூர்வமற்ற இடங்களில் மேற்கொள்ளாமல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவரின் உரிய ஆலோசனையின்படி மேற்கொள்ள வேண்டும். அரசின் விதிமுறைகளை மீறி கருக்கலைப்புகளில் ஈடுபடும் மருந்தகங்கள், தனியார் மருத்துவமனைகள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் இணை இயக்குநர் பாலச்சந்தர், துணை இயக்குனர் பூங்கொடி, அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், நிலைய மருத்துவ அலுவலர்கள், தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: