மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்-குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

ஈரோடு : மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமையில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார். இதையடுத்து, விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். இதில், கீழ்பவானி அணையில், காவிரி தீர்ப்புக்கு புறம்பான நீர் நிர்வாகத்தை நீர்வளத்துறை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இது திட்டமிட்டே நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். இதனால் 16 போக கடலை சாகுபடி, 8 போக நெல் சாகுபடியை இழந்துள்ளோம். எனவே, நீதிமன்ற உத்தரவின்படி நீர் நிர்வாகத்தை அமல்படுத்த வேண்டும்.

வழக்கம்போல மேட்டூர் வலதுகரைப் பாசனத்துக்கு ஆகஸ்ட் 1ம் தேதி தண்ணீர் திறக்கவேண்டும். அதற்கும்  முன்பாக வாய்க்காலில் உள்ள மதகுகள், கிளை வாய்க்கால்களை மராமத்து செய்ய வேண்டும். நவீன தொழிற்நுட்பங்களை மேம்படுத்தி விவசாயிகளின் பட்டா மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சொட்டு நீர் பாசனத்துக்கான மானியத் தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக விற்பனைக்கு வந்துள்ளதாக கூறப்படும் திரவ உரங்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய விளக்கமளிக்க வேண்டும்.

நீர் நிலை ஆக்கிரமிப்புகள் சம்பந்தமாக ஆய்வு மேற்கொள்ள அரசு குழு அமைத்து உத்தரவிட்டுள்ள நிலையில், 4 மாதங்களுக்கு மேலாகியும் ஈரோடு மாவட்டத்தில் அந்தக் குழு அமைக்கப்படவில்லை. விரைவில் குழு அமைத்து அரசு உத்தரவை அமல்படுத்த வேண்டும். தாசில்தார் அலுவலகங்களில் விவசாயிகள் அளிக்கும் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கான கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக ஒப்புகை சீட்டு வழங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும். வேளாண் பொறியியல் துறையில் இயந்திரங்களைப் பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க வேண்டும்.

மலைப்பகுதி மக்களுக்கும், மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களுக்கும் வனத்துறை சார்பில் குறை தீர் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சுண்டப்பூர் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் வனத்துறை அனுமதி தாமதம் காரணமாக அந்த நிதி தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதை மீண்டும் பெற்று சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பர்கூர், கடம்பூர் மலைப் பகுதிகளில் உள்ள மக்களின் நிலம் சட்டத்துக்கு விரோதமாக அபகரிக்கப்பட்டு வருவதை தடுக்க வேண்டும்.

உரங்கள் மீது விதிக்கப்படும் 5 சதவீத வரியையும், பூச்சி கொல்லி மருந்துகளின் மீது வதிக்கப்படும் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியையும் நீக்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரமும், நெல் ஒரு கிலோ ரூ.30க்கும் கொள்முதல் செய்ய வேண்டும். மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து குவிண்டால் ரூ.11,000க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.20 உயத்த வேண்டும். கீழ்பவானி வாய்க்காலைத் தூர்வார நடிவடிக்கை எடுக்க வேண்டும்.

சின்னப்புலியூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தனியார் எரிசாராய வடிப்பக ஆல்கஹால் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்குள்ள ஓடையின் வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாயம் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும், இந்த ஆலையில் எரிசாராயத்தை தயாரிக்க பல விஷத்தன்மை உள்ள கெமிக்கல் கலந்து தயாரிப்பதால் ஏற்படும் கடும் மாசு காரணமாக இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் மூச்சுத்திணறல், புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே அந்த எரிசாராய வடிப்பக ஆல்கஹால் தொழிற்சாலை இயக்க நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உயர்மின் அழுத்த திட்டம் பயன்பாட்டுக்கும் வந்தும், இன்னும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. அவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாகப் பால்கொள்முதல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. கூட்டுறவுத் துறை சார்பில் பால் கொள்முதல் செய்யும்போது பாலின் தரம் கணக்கிடப்பட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்பின், பால் குளிரூட்டும் நிலையத்தில் தரம் குறைவாக இருப்பதாக கூறி லிட்டருக்கு ரூ. 3 வரை விலையை குறைத்து விடுகின்றனர்.

இதனால் விவசாயிகளுக்கும், கூட்டுறவு துறை அலுவலர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது. எனவே இதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காயம், தக்காளி போன்றவற்றின் விலை வீழ்ச்சியைத் தடுக்க ஆங்காங்கே குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டைத்தை கைவிடவேண்டும் என விவசாயிகள், விவசாய சங்கப் பிரதி நிதிகள் வலியுறுத்தினர்.  விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

இக்கூட்டத்தில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் நல்லசாமி, மோகன், சுபி.தளபதி, வி.பி.குணசேகரன், சுதந்திர ராசு, முனுசாமி, துளசிமணி, ராமசாமி மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகேசன், செயற்பொறியாளர் விஸ்வநாதன், தோட்டக்கலைத் துணை இயக்குநர்கள் தமிழ்செல்வி, சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: