கல்லணை தொடக்கப்பள்ளியின் 4, 5ம் வகுப்புகள் வேறு பள்ளிக்கு மாற்றம் நெல்லை டவுனில் பொதுமக்கள் திடீர் மறியல்-45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு

நெல்லை : நெல்லை டவுன் கல்லணை தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் இடமாற்றத்திற்கு தீர்வு கிடைக்காததை கண்டித்து பெற்றோர்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் கல்லணை பள்ளி சாலையில் நேற்று திடீர் மறியல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நெல்லை டவுன் கல்லணை தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் புதிதாக அதிகளவில் மாணவர்கள் சேர்ந்ததால் இடநெருக்கடி ஏற்பட்டது.

அதாவது 400 மாணவ, மாணவிகள் படிக்கும் இடத்தில் 570 மாணவ, மாணவிகள் தற்போது பயின்று வருகின்றனர். இதனால் அப்பள்ளியில் மாணவர்களை அமர வைக்க இடவசதிகள் இல்லை. இதையடுத்து கல்லணை தொடக்க பள்ளி நிர்வாகம் பள்ளியில் உள்ள 4 மற்றும் 5ம் வகுப்புகளை டவுன் பாரதியார் உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றினர். இதனால் அதிருப்தியடைந்த பெற்றோர்கள் கடந்த 21ம் தேதி டவுன் கல்லணை பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தை இரு தினங்களுக்குள் கூட்டுவதாகவும், 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு போதிய இடவசதி செய்து தருவதாகவும் உறுதியளித்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கை எதுவும் இல்லை. இதையடுத்து நேற்று பள்ளி முன்பு திரண்ட பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு உடனடி தீர்வு வேண்டும் என்று கூறி, பள்ளி சாலையான பெருமாள் கீழ ரதவீதியில் திடீர் மறியல் நடத்தினர். பாரதியார் பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள், கை கழுவ வெளியே செல்ல வேண்டியுள்ளது உள்ளிட்ட காரணங்களை தெரிவித்து தங்களுக்கு அருகிலேயே இடவசதி செய்து தருமாறு கோரிக்கையை முன் வைத்தனர்.

 இதையடுத்து நெல்லை டவுன் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் இளவரசன், மாநகராட்சி உதவி கமிஷனர் (பொறுப்பு) பைஜூ உள்ளிட்டோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அடுத்த இரு தினங்களுக்கு கல்லணை தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளை அமர வைக்கவும், வரும் திங்களன்று பெற்றோர் ஆசிரியர் கழகத்தை கூட்டவும் முடிவு செய்யப்பட்டது. தங்களின் குழந்தைகளின் படிப்புக்கு விரைவில் வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்த பெற்றோர், அதன் பின்னர் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 45 நிமிடங்கள் பெருமாள் கீழ ரதவீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆட்டோவில் சத்துணவு

டவுன் கல்லணை தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பாரதியார் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதால் சத்துணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 4,5ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்லணை பள்ளியில் சமைத்து பாரதியார் பள்ளிக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. அதாவது சத்துணவை எடுத்துச் செல்ல ஊழியர்கள் வராதபோது, மாணவர்களுக்கு சத்துணவு கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தி, கல்லணையில் சமைத்த சத்துணவை பாரதியார் பள்ளிக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: