சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 கார்கள் சேதம்

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் விளையாட்டு மைதானச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 கார்கள் சேதமடைந்தது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அதன் அருகில் நிறுத்தப்பட்ட 3 கார்கள் அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. நேற்று இரவு திடீரென்று பெய்த பலத்த மழையின் காரணமாக புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான விளையாட்டுத் திடலின் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது. இதில் சுவற்றின் ஓரத்தில் பழுது பார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்ட கார்களின் கண்ணாடிகள் நொறுக்கியது.

இதனால் இப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு நடைபெற்ற இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. எனினும் விலையுயர்ந்த கார்கள் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்துள்ளது. இருந்தபோதிலும், நேற்று இரவு திடீரென பலத்த காற்று வீசியதால் புதுவண்ணாரப்பேட்டை, திருவெற்றியூர் பகுதியில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனையடுத்து, சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இடிந்த சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக, புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் மற்றும் துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

Related Stories: