தமிழகம் முழுவதும் நேரடி காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்துத்தேர்வு இன்று தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2022ம் ஆண்டிற்கான நேரடி காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு காவல்துறையில் 444 காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு இன்று காலை தொடங்கியது. இதையொட்டி அதிகாலையிலேயே தேர்வர்கள் தேர்வு மையங்களை நோக்கி படையெடுத்தனர். குறிப்பாக பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற நிலையில், 43 திருநங்கைகள் இத்தேர்வை எழுத வருகை தந்தனர். தமிழக காவல்துறையில் 444 காவல் உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 8ம் தேதி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டது.

இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முதல் கட்டமாக இன்று தமிழகம் முழுவதும் 39 மையங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது. சென்னையை பொறுத்தமட்டில், கோடம்பாக்கம், கே.கே.நகர், வேளச்சேரி என மொத்தம் 11 மையங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது. தமிழக காவல்துறையில் மொத்தம் 444 காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஆண்கள்,  பெண்கள் மற்றும் திருநங்கைகள் இடம் பெற்றுள்ளார்கள். தேர்வானது காலை 10 மணிக்கும் தொடங்கும் பொதுதேர்வில், தமிழ், ஆங்கிலம், கணிதம், உளவியல் ஆகிய பாடங்கள் இடம்பெறும்.

இத்தேர்வானது 2.30 மணி நேரம் நடைபெறும். பின்னர் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தேர்வு நடைபெறும் மையங்களில் செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் இத்தேர்வை எழுத உள்ளனர். தேர்வு நடைபெறும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தேர்வு எழுத வருபவர்கள் 8:30 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு வர வேண்டும் . தேர்வு எழுத வரும்போது பால் பாயின்ட் பென் , ஹால் டிக்கெட் , ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும்.

அதே சமயம் செல்போன், கால்குலேட்டர் ,லேப்டாப் போன்ற மின்னணு சாதன பொருட்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேர்வறைக்குள் செயல்படும் மேற்பார்வையாளர்களும் பல்வேறு உத்தரவுகளை காவல்துறை உயரதிகாரிகள் வழங்கியுள்ளனர். நாளை, காவல்துறையில் 5 வருடத்திற்கும் மேலாக பணியாற்றிய காவல்துறையினர் நேரடி உதவி ஆய்வாளர் தேர்வு எழுத உள்ளனர். தொடர்ந்து, இன்றும் நாளையும் நேரடி காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான தேர்வு நடைபெறுகிறது. 

Related Stories: