வழிப்பறி கொள்ளையன் கைது

சென்னை: திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே பென்னாலூர்பேட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்டது சீத்தஞ்சேரி பஜார் பகுதி உள்ளது. இங்குள்ள, அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் பாரதி (50). இவர், அதே பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில், ஜெராக்ஸ் எடுப்பதற்காக கடந்த 16ம் தேதி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் பைக்கில் வேகமாக வந்துள்ளார். அருகில் வந்து பாரதி அணிந்திருந்த  தங்கதாலி சரடு 4.5  சவரன்  அறுத்துக் கொண்டு திருவள்ளூர் நோக்கி தப்பித்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து, பென்னலூர்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஓதப்பை வனப்பகுதியில் பென்னலூர் பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ராவ்பகதூர், செல்வராஜ், லோகநாதன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது, அந்த வழியாக பைக்கிள் வந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டு மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அந்த நபர் முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்துள்ளார்.

போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்று துருவித்துருவி நடத்திய விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் திம்மாபுரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (40) என தெரியவந்தது. அவர் ஓட்டி வந்த பைக்கை சோதனை செய்தபோது சீட்டுக்கு கீழ் ரூ2 லட்சம் மதிப்புள்ள தாலி சரடு இருந்தது. விசாரணையில், சீத்தஞ்சேரி பஜாரில் பெண்ணிடம் தாலி சரடு வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரை கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: