ஏர்வாடி தர்காவில் 848ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு

கீழக்கரை: ஏர்வாடியில் 848ம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நேற்று நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் 848ம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கடந்த 1ம் தேதி மவுலீதுடன் (புகழ்மாலை) தொடங்கியது. 11ம் தேதி மாலை கொடி ஏற்றப்பட்டது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா நேற்று முன்தினம் மாலை ஆரம்பமானது. ஏர்வாடி முஜாஹிர் நல்ல இப்ராஹிம் மஹாலில் இருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு காலை 6 மணியளவில் தர்காவை வந்தடைந்தது.

 

அதன்பின் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து உலமாக்கள் முன்னிலையில் உலக நன்மைக்காகவும் உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு சந்தனக்கூடு திருவிழா நிறைவடைந்தது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா,  ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள், அனைத்து சமுதாய மக்கள் கலந்து  கொண்டு நேர்ச்சைகளை நிறைவேற்றினர்.

Related Stories: