ஓபிஎஸ், இபிஎஸ்சின் பதவி காலாவதியாகி விட்டது: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது. ஓபிஎஸ் பொருளாளர் மட்டும்தான். எடப்பாடி தலைமை நிலைய செயலாளராக தான் நீடிப்பார் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

அதிமுக பொதுக்குழுவில் அவமானப்படுத்தப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நேற்று சென்னையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்  நிருபர்களிடம் கூறியதாவது:

 

அதிமுக பொதுக்குழு பற்றி முன்னாள் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சில கருத்துகளை சொல்லியிருக்கிறார். பொதுக்குழு கூட்டம் முறையாக கூட்டப்படவில்லை, இதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லை, பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து நடத்தப்படவில்லை, கூலி ஆட்களை வைத்தும், அடியாட்களை வைத்தும் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

பொதுக்குழுவை கூட்டுகின்ற அதிகாரம்  விதி 19ல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் அந்த பொதுக்குழுவை கூட்டலாம். மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு  கொடுத்தால் 30 நாட்களுக்குள்ளாக  பொதுக்குழுவை கூட்ட வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறி வந்தது யார் என்றால் வைத்திலிங்கம்தான். அவர் முறையாக இறங்கி தன்னுடைய அனுமதி சீட்டையும், அடையாள அட்டையையும் காட்டிதான் வந்திருக்க வேண்டும். அவர் ஓ.பன்னீர்செல்வம் காரில் சொகுசாக வந்து இறங்கிவிட்டார். ஆகவே இந்த கேள்விக்கு இடமில்லை.

அவைத்தலைவரை முறையாக தேர்வு செய்யவில்லை. அது செல்லாது என்று தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்துதான் அவைத்தலைவரை தேர்வு செய்ய முடியும் என்கிறார். முன்னாள் ஒருங்கிணைப்பாளர், இன்னாள் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு, முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டு முன்மொழிந்து தற்காலிக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் இருப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டும் பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவிற்கு தற்காலிக அவைத்தலைவரான தமிழ்மகன் உசேனை நான் வழிமொழிகிறேன் என்று சொன்னாரா இல்லையா. இதற்கு வைத்திலிங்கம் பதில் சொல்ல வேண்டும்.

 

நீதிமன்றம் பொதுக்குழுவை கூட்டுங்கள். 23 தீர்மானங்களை நீங்கள் நிறைவேற்றினாலும் சரி, நிறைவேற்றாவிட்டாலும் சரி. அதைப்பற்றி ஒன்றும் இல்லை. 23 தீர்மானங்களை நிராகரித்தது நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்லியிருக்கிறார். அந்த 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்றுதான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் பொதுக்குழுவின் உரிமை.

 

திருத்தப்பட்ட சட்ட விதிகளின்படி தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு நேற்று முன்தினம் நடந்த பொதுக்குழுவில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அந்த திருத்தத்தை நீங்கள் பொதுக்குழுவில் வைக்கவில்லை, அதனால் அது தானாகவே காலாவதியாகிவிட்டது. காலாவதி ஆகிவிட்டால் அதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட அந்த பொறுப்பும் நேற்று முன்தினத்துடன் முடிந்துவிட்டது.

அதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது. அவர்கள் தேர்வே இல்லை என்கின்றபோது அந்த விதியும் காலாவதி ஆகிவிட்டது. இனி அதிமுகவின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருப்பார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருப்பார். இதுதான் இன்றைய நிலை.

 

இப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு இந்த இயக்ககத்திலே இல்லை. தற்போது அதிமுகவின் உச்சபட்ச தலைவர் யார் என்றால் அவர் அவைத்தலைவர். அவரிடம் நாங்கள் 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மனு அளிக்கிறோம். அவரும் கோரிக்கையை ஏற்று அடுத்த மாதம் 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் எங்கும் தவறு இல்லை.

Related Stories: