ஓபிஎஸ் அவசரமாக டெல்லி சென்றுள்ள நிலையில் சென்னையில் ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை: பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற தீவிரம்

சென்னை: பொதுக்குழுவில் அவமானப்படுத்தப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு அவசரமாக டெல்லி சென்றார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, வருகிற 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில், பொதுச்செயலாளர் பதவியை எப்படியும் கைப்பற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் தற்போதுள்ள இரட்டை தலைமைக்கு (ஓபிஎஸ் - இபிஎஸ்) பதில், ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்துகொண்ட 2,700 பொதுக்குழு நிர்வாகிகளில் 2,600 பேர் ஒற்றைத் தலைமை வர வேண்டும் என்றும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பதவி ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். பொதுக்குழுவுக்கு வந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, எடப்பாடி ஆதரவாளர்கள், ‘திரும்பி போ, ஒழிக’ என்று கோஷம் எழுப்பி எதிர்ப்பை காட்டினர். ஒருகட்டத்தில் மேடையில் அமர்ந்திருந்த ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில், பேப்பர் போன்றவைகளை வீசி எரிந்து அவமானப்படுத்தினர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதுடன், மீண்டும் பொதுக்குழு வருகிற ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்ட ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக பொதுக்குழுவில் அவமானப்படுத்தப்பட்ட நிலையில், ஓபிஎஸ் நேற்று முன்தினம் இரவு அவசரமாக டெல்லி சென்றார். நேற்று ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார். தொடர்ந்து பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட சில தலைவர்களை தனியாக சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார்.

இதனால் உஷார் அடைந்த எடப்பாடி ஆதரவாளர்களான மூத்த நிர்வாகிகள் நேற்று காலை 11 மணிக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர். இதில் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி,  ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வளர்மதி, சி.விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.அன்பழகன், தளவாய்சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனையின்போது, “நேற்று முன்தினம் அறிவித்தபடி ஜூலை 11ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கண்டிப்பாக நடத்த வேண்டும். அதில் ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, அன்றைய தினமே பொதுச்செயலாளர் பதவி கொண்டு வந்து அதில் எடப்பாடி பழனிசாமியை நியமிக்க வேண்டும்” என்று மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், பொதுக்குழு நடைபெறாமல் தடுக்க ஓ.பன்னீர்செல்வம் எடுத்துவரும் நடவடிக்கைகளை சட்டரீதியாக தடுப்பது என்றும் நேற்று நடந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் உள்ள இருபெரும் தலைவர்களில் ஒருவர் (ஓபிஎஸ்) டெல்லி சென்று பொதுக்குழுவை தடுப்பது குறித்து சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருவதுடன், பாஜ தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதும், மற்றொரு தலைவர் (எடப்பாடி) மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பொதுக்குழுவை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருவதும் அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் இனி வரும் 15 நாட்கள் அதிமுகவில் பல எதிர்பார்க்காத திருப்பங்கள் ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Related Stories: