சுகாதார அதிகாரிகள் பரபரப்பு குற்றச்சாட்டு: இங்கி.யில் போலியோ வைரஸ் பரவக் காரணம் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: இங்கிலாந்தில் 40 ஆண்டுக்குப் பிறகு போலியோ வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்தே இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் என சுகாதார அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இங்கிலாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட கழிவுநீர் சோதனையில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு போலியோ வைரஸ் தொற்று கிருமிகள் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் இதுவரை எந்த ஒரு குழந்தையும் போலியோவால் பாதிக்கப்படவில்லை.

இந்நிலையில், இங்கிலாந்தின் பொது சுகாதார பாதுகாப்பு அமைப்பு விடுத்த அறிக்கையில், போலியோ வைரஸ், வேறொரு நாட்டில் இருந்து இங்கிலாந்தில் பரவியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் இங்கிலாந்து அரசு முழுக்க முழுக்க பாகிஸ்தானையே சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது.

இதற்கு காரணம், உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகள் போலியோ வைரசை முற்றிலும் ஒழித்துள்ளன. கடந்த 2020ம் ஆண்டு நைஜீரியாவும் போலியோ இல்லாத நாடாக மாறியது.

ஆனால், பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மட்டுமே இந்த இலக்கை எட்டவில்லை. இதனால், பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்து வந்தவர்கள் மூலம் போலியோ வைரஸ் மீண்டும் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு பாகிஸ்தான் சுகாதார அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஒருவேளை, பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்துக்கு போலியோ வைரஸ் பரவியது நிரூபிக்கப்பட்டால், அது பாகிஸ்தானின் போலியோ ஒழிப்பு தடுப்பூசி திட்டம் குறித்து உலகளவில் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தும் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வேறு வைரஸ் வகை

பாகிஸ்தான் போலியோ ஒழிப்பு திட்ட தேசிய ஒருங்கிணைப்பாளர் ஷெஷாத் பைக் கூறுகையில், ‘‘பாகிஸ்தானில் காணப்படுவது டபிள்யுபிவி போலியோ  வைரசாகும். ஆனால், இங்கிலாந்தில் கண்டறியப்பட்டிருப்பது தடுப்பூசியால் உருமாறிய விடிபிவி வகை போலியோ வைரசாகும். இது 22 நாடுகளில் உள்ளது. எனவே, மரபணு வரிசைப்படுத்தல் ஆய்வு  முடிவுகள் வெளிவருவதற்குள் பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்துவது தவறானது. மேலும் பாகிஸ்தானில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு போலியோ தடுப்பூசி  கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாகிஸ்தானில் இருந்து போலியோ பரவியதாக  கூறுவது ஆதாரமற்றது’’ என்றார்.

Related Stories: