இன்று 2வது மகளிர் டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா

தம்புல்லா:இலங்கை சென்றுள்ள இந்திய மகளிர் அணி அங்கு  டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 34 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது டி20 ஆட்டம்   அதே தம்புல்லாவில் இன்று  நடக்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றிப் பெற்றால் தொடரையும் கைப்பற்றும்.

அதனால் இன்றைய ஆட்டத்தில் வெல்ல இந்திய மகளிர் முனைப்புக் காட்டுவார்கள். கடந்த ஆட்டத்தில் தட்டு தடுமாறி வெற்றி கிடைத்தாலும் ஷபாலி, ஜெமீமா, தீப்தி, பூஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை மறுப்பதற்கில்லை. இன்றைய ஆட்டத்தில் ஹர்மன், மந்தானா ஆகியோரும் சிறப்பாக விளையாடினால் தொடர் இந்தியா வசமாகும். அதே நேரத்தில் இலங்கையும் வெற்றிக் கணக்கை தொடங்க போராடும்.

அந்த அணியின் கவிஷா முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகளை விட சிறப்பாக விளையாடினார். சமரி அட்டப்பட்டு தலைமையிலான மற்ற வீராங்கனைகளும் அவருக்கு கைகொடுத்தால் இலங்கை வெற்றி கணக்கை தொடங்கலாம். கூடவே இந்தியாவின் தொடர் வெற்றிக்கு சவாலாகவும் இருக்கலாம்.

Related Stories: