வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

பாலசோர்: ஒடிசா மாநிலத்தில், வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட குறைந்த துார ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

 ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), தரையில் இருந்து வான் நோக்கி குறைந்த துாரம் செங்குத்தாக சென்று தாக்க கூடிய ஏவுகணையை தயாரித்துள்ளது. ஒடிசா மாநிலம், சண்டிப்பூர் கடல் பகுதியில், கடற்படை கப்பலில் இருந்து இந்த ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. கடல் பகுதிகளில் மிக அருகில் ஏற்படக் கூடிய பல்வேறு வான்வழி தாக்குதல்களை சமாளிக்க இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக வான் பரப்பில் தொலைதூரத்தில் அதிவேகமாக செல்லும் விமானம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, ஏவுகணையை இயக்கியவுடன் போர்கப்பலில் இருந்து பாய்ந்து சென்று குறிப்பிட்ட நேரத்தில் அந்த விமானத்தை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததால் இந்திய ராணுவத்தில் விரைவில் இந்த ஏவுகணை இணைக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘‘குறைந்த துார ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த டிஆர்டிஓ மற்றும் கடற்படையினருக்கு பாராட்டுக்கள். இந்த வெற்றி, வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக கடற்படை கப்பல்களின் பாதுகாப்பு திறனை மேலும் மேம்படுத்தும்’’ என்றார்.

Related Stories: