பாஜ கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு மனு தாக்கல்: மோடி, அமித்ஷா, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 500 பேர் முன்மொழிந்தனர்

புதுடெல்லி: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 500 பேர் முன்மொழிந்தும், வழி மொழிந்தும் உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்க உள்ளது. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பழங்குடி பிரிவைச் சேர்ந்த ஒடிசா பாஜ தலைவர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், பாஜ கூட்டணி வேட்பாளர் முர்மு நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஸ் கோயல், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் யோகி ஆதித்யநாத், சிவ்ராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார், பசவராஜ் பொம்மை, பூபேந்திர படேல், ஹிமந்தா பிஸ்வா சர்மா, புஷ்கர் சிங் தாமி, பிரமோத் சாவந்த் மற்றும் பைரன் சிங் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களுடன் நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் முர்மு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவர்களுடன் முர்முவுக்கு பெரும்பான்மை பலம் உள்ளதை காட்டும் வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் ஆகிய ஆதரவுக் கட்சிகளின் எம்பிக்களும் உடன் சென்றனர். ஜனாதிபதி வேட்பாளரின் வேட்புமனுவை வாக்களிக்க தகுதி பெற்ற மக்கள் பிரதிநிதிகளில் 50 பேர் முன்மொழிய வேண்டும், 50 பேர் வழிமொழிய வேண்டும். இதற்கான ஆவணங்களை பிரதமர் மோடி தனது கைப்பட தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார். முர்முவை  முன்மொழிந்தும், வழிமொழிந்தும் பிரதமர் மோடி உட்பட 500 பேர்  கையெழுத்திட்டு உள்ளனர். இதற்காக 4 பிரிவாக ஆணவங்களை தாக்கல் செய்துள்ளனர்.  முதல் பிரிவில் பிரதமர் மோடி முன்மொழிய, அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர்  வழிமொழிந்துள்ளனர். 2வது பிரிவை நிதின் கட்கரி முன்மொழிய, பல்வேறு மாநில  முதல்வர்கள் வழிமொழிந்துள்ளனர். இதுபோல, ஒவ்வொரு பிரிவுக்கும் 60 பேர்  முன்மொழிந்து, 60 பேர் வழிமொழிந்துள்ளனர்.

வேட்பு மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, உட்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவை கோரும் பணியில் முர்மு ஈடுபட்டார். அவர், தொலைபேசி வாயிலாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டினார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் 29ம் தேதி. எதிர்க்கட்சி பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்கா வரும் 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நடக்கும் பட்சத்தில், அதன் முடிவுகள் அடுத்த மாதம் 21ம் தேதி அறிவிக்கப்படும்.

Related Stories: