மறுகட்டுமானம் செய்யப்பட உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 1476 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி: அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (24.6.2022) தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 1476 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.3.54 கோடி காசோலைகளை வழங்கினர்.

அமைச்சர் .தா.மோ.அன்பரசன் அவர்கள் பேசுகையில்: குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் கான்கீரிட் வீடுகளில் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வாரியம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.  

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் 1970 ஆம் ஆண்டு முதல் 1974 வரை 213 சதுர அடி பரப்பளவில் 1476 அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வாரிய பராமரிப்பில் இருந்து வந்தது..  தற்பொழுது இதனை இடித்து விட்டு 420 ச.அடி பரப்பளவில்  புதிய குடியிருப்புகள்  கட்டுவதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

ஒவ்வொரு குடியிருப்புகளும் பல்நோக்கு அறை, உறங்கும் அறை, சமையலறை, தனித்தனியே குளியலறை மற்றும் கழிப்பறை , மேல் நிலையத்தொட்டியிலுந்து தண்ணீர் வசதி ஆகிய வசதிகளுடன் அமைய உள்ளது.  மேலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு, கீழ் நிலை நீர் தொட்டி, சாலைகள் , பார்க்குகள் , ஒவ்வொரு பிளாக்குகளிலும் பயணிகள் லிப்ட் மற்றும் ஸ்ட்ரெச்சர் லிப்ட்  போன்ற வசதிகளுடன் இக்குடியிருப்பு அமைக்கப்படவுள்ளது.

சென்னையில் மட்டும் 27,500 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகளை கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும்,   நடப்பாண்டு ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும் ஆக மொத்தம் ரூ.2400 கோடி மதிப்பீட்டில் 15000 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சென்னையில் இதுவரை குயில்தோட்டம் , திருவொற்றியூர், சுபேதார் கார்டன் கொய்யாதோப்பு , காக்ஸ் காலனி மற்றும் ஜமாலியா லேன்  திட்டப்பகுதிகளில் மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 1437 குடியிருப்புதாரர்களுக்கும், இன்று  கோட்டூர்புரம் திட்டப்பகுதிகளில் வழங்கப்படவுள்ள 1476 குடியிருப்புதாரர்களையும் சேர்த்து மொத்தம்  2913 குடியிருப்புதாரர்களுக்கு   கருணைத் தொகையாக ரூபாய் 6 கோடியே 99 லட்சத்து 12 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.   

இக்குடியிருப்புதாரர்களுக்கு மறுகட்டுமான காலங்களில் வெளியே வாடகையில் தங்குவதற்காக கடந்த கால ஆட்சியில் ரூ.8000 வழங்கப்பட்டு வந்த  கருணைத் தொகையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  உயர்த்தி ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000 வழங்க  உத்தரவிட்டுள்ளார்கள்.  அதனடிப்படையில் இன்றைய தினம் 1476 குடும்பங்களுக்கு தலா ரூ.24,000 வீதம் ரூபாய் 3 கோடியே 54 லட்சத்து 24 ஆயிரம் காசோலையாக வழங்கப்படவுள்ளது.  

அதனடிப்படையில் குடியிருப்புதாராகிய நீங்கள் அனைவரும் விரைவில் இக்குடியிருப்புகளை காலி செய்யும் பட்சத்தில் புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் . 15 முதல் 20  ஆண்டுகள் முன் கட்டப்பட்ட குடியிருப்புகளில் புனரமைப்பு பணிகளுக்காக  மேற்கொள்ள  இதுவரை ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . கடந்த கால ஆட்சியில்  குடியிருப்புகள் தரமில்லாமல் கட்டப்பட்டது, தற்போது கட்டப்படும் கட்டடம் தனியாருக்கு நிகராக இருக்கும்.

கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய தனியார் தொழில்நுட்ப வல்லூநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.  மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டுமான பணிகளின் தரத்தை குறித்து ஆய்வுக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் .  தற்போது கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் 50 வருட காலத்திற்கு நீடித்து நிலைத்து நிற்கும். குடியிருப்பு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள “நம் குடியிருப்பு நம் பொறுப்பு” திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

குடியிருப்போர் நலச் சங்கங்களின் 50%  பங்களிப்புடன், வாரியத்தின் 50% நிதியும் சேர்த்து, இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இத்திட்டத்திற்கு  ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  369 குடியிருப்பு நலச் சங்கங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் இக்குடியிருப்பு சங்கங்களை உருவாக்க பொது மக்களுடன் இணைந்து முனைப்புடன் செயல்பட வேண்டும். என்று கூறினார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்:

மறுகட்டுமானம் செய்யும் திட்டம் கோட்டூர்புரம் திட்டப்பகுதியால் தான் உருவானது.  2005 - ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது கோட்டூர்புர பகுதியை பார்வையிட வந்தார்  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அப்பொழுது முதல்  மாடி அளவிற்கு வெள்ள நீர் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது 2வது மாடி 3 வது மாடியில் பொதுமக்கள் நின்றுகொண்டிருப்பதை பார்த்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இக்குடியிருப்புகள் கட்டப்பட்டு 30 ஆண்டிற்கு மேல் இருக்கும்.

எனவே குடியிருப்புகளில் இருக்கும் மக்களை வேறு இடத்திற்கு பத்திரமாக அழைத்து செல்லுமாறு எங்களுக்கெல்லாம்  உத்தரவிட்டார்.   2006  தி.மு.க தேர்தல் அறிக்கையில் 30 ஆண்டுகளுக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு  புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் வாரியத்தின் சார்பில்  கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டது.  வெள்ளப் பாதிப்பின் போது கோட்டூர்புரத் திட்டப்பகுதியை பார்வையிட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்  எண்ணத்தில் உதயமானது தான் மறுகட்டுமான திட்டம்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு 2006 -ல்  தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் கோட்டூர்புரம், வியாசர்பாடி , ராணி அண்ணாநகர் போன்ற பல்வேறு பகுதிகளில்  30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது.  கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் 8 பிளாக்குகள் கட்டப்பட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மறுகட்டுமான திட்டத்திற்காக ரூபாய் 2400 கோடி ஒதுக்கீடு செய்து 15 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது.

இத்திட்டப்பகுதியை  முன்மாதிரி திட்டப்பகுதியாக மாற்ற வேண்டும்    இக்குடியிருப்புதாரர்கள் ஒரு மாதத்தில் குடியிருப்புகளை காலி செய்யும் பட்சத்தில்  18 மாதத்திற்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து குடியிருப்புகள் தயார் நிலையில் இருக்கும்.  கட்டுமான பணிகள் நிறைவடைந்தவுடன்  இத்திட்டப்பகுதியின் முகப்பை எழில் மிகு தோற்றமாக அமைப்பதற்காகவும் , 2 வழி பாதையை உருவாக்குவதற்கும் எனது தொகுதி  மேம்பாட்டு நிதியிலிருந்து 3 கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  தமிழ்நாடு  நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் இ.ஆ.ப., தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த ரமேஷ், அடையார் மண்டல குழு தலைவர் ஆர்.துரைராஜ், மாமன்ற உறுப்பினர் கே.ஆர் கதிர்முருகன், வாரிய  தலைமை பொறியாளர் திரு.ஆர்.எம்.மோகன் மற்றும் வாரிய பொறியாளர்கள் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Related Stories: