ஒன்றிய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனைக் குழுவின் ஐந்தாவது கூட்டம்

டெல்லி: இன்று புதுடெல்லி, விஞ்ஞான் பவனில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒன்றிய அமைச்சகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய ஆலோசனைக் குழு கூட்டம் மாண்புமிகு ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர் குமார் அவர்கள் தலைமையில், மாண்புமிகு இணை அமைச்சர் குமாரி பிரதிமா பூமிகா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  

இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் தமிழக அரசின் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  மேலும் இக்கூட்டத்தில் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் முனைவர் ஆனந்த குமார், இ.ஆ.ப., மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் உரிமைகள் துறை அமைச்சர் பின்வருமாறு உரையாற்றினார். மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சிறப்பாக சேவை புரிந்தமைக்காக 2020ஆம் ஆண்டிற்கான “சிறந்த மாநிலம்” என்ற தேசிய விருதினை தமிழக அரசுக்கு வழங்கி கௌரவித்தமைக்கு ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்தார்.

ஒன்றிய அரசின் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கான பல்வேறு திட்டங்களான, மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை (UDID), மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 செயல்படுத்துவதற்கான திட்டம் Scheme for Implementation of the Rights of Persons with Disabilities Act, 2016 (SIPDA) தீன்தயாள் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வுத் திட்டம் (DDRS), மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களை வழங்குதல் (ADIP), தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NHFDC) ஆகியவற்றை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், சுயவேலைவாய்ப்புத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வந்தமைக்காக, தேசிய மற்றும் மாநில அளவிலான விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது எனவும், ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NHFDC) மூலம் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு தமிழக அரசு பெற்று  சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழக அரசு எப்போதும் முன்னணியில் இருப்பதாகவும், பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் சுமார் 2.1 லட்சம் பயனாளிகளுக்கு மாதம் ரூ.2000/- வீதம் வழங்குவதற்கு ரூ.416.77 கோடி திட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இது தவிர, மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வீதம் 4.2 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் விரும்பும் உதவி உபகரணங்களை தாங்களே தேர்வு செய்துகொள்ளும் வகையில் தேர்வு அடிப்படையிலான மாதிரி (Choice Based System) என்ற புதிய முன் முயற்சி மேற்கொண்டு, திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதையும் தெரிவித்தார்.

பராமரிப்பு உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள் பெறுவதற்காக மாநிலம் முழுவதும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்பெறும் வகையில்                    2021-2022ஆம் நிதியாண்டில் ரூ.70.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிதியின் கீழ் சுயதொழில் செய்வதற்காக மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் கடன் தொகையினை முறையாக திரும்ப செலுத்துபவர்களுக்கான வட்டி தொகையினை மாநில அரசு ஏற்றுக்கொள்வதாகவும், முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் இந்தியாவிலேயே, தமிழகத்தில் மட்டும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.  மேலும், நாட்டுக்கே முன்னுதாரணமாக தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் “அனைத்தும் சாத்தியம்” என்ற அருங்காட்சியகத்தினை தமிழக அரசு நிறுவியுள்ளதையும் தெரிவித்தார்.

ஒன்றிய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் அதிக நிதி ஒதுக்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அரசின் (GoI) மூலம் கிடைக்கும் அனைத்து திட்டங்களுக்கும் வருமான அளவுகோல்களை தளர்த்துதல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை விநியோகத்திற்கான முறை மற்றும் மொபைல் செயலியை உருவாக்குதல், இந்திரா காந்தி ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஒன்றிய அரசின் பங்கினை ரூ.300/- ஆக உயர்த்தி வழங்குதல் போன்றவற்றை செயல்படுத்த ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

மேலும், NIEPMD (National Institute for Empowerment of Persons with Multiple Disabilities) மாநிலத்திலேயே பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்களுக்காக சேவை செய்யும் ஒரே தேசிய நிறுவனம் சென்னையில் மட்டுமே உள்ளது. எனவே, NIEPMD-ன் தற்போதைய நிர்வாக அமைப்பு மற்றும் சுயாட்சியை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக அரசு சார்பாக மீண்டும் வலியுறுத்தினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், NIEPMD இன் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து, மாண்புமிகு சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், புதுதில்லி அவர்களிடம் ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளதை இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.   

Related Stories: