மாநிலம் முழுவதும் கைவரிசை: தாம்பரத்தை சேர்ந்தவர் உள்பட 3 கொள்ளையர் அதிரடி கைது: கார், 6 பைக்குகள், ஐம்பொன் சிலை பறிமுதல்

தென்காசி:மாநிலம் முழுவதும் கைவரிசை காட்டிய தாம்பரம் சேலையூரை சேர்ந்த வாலிபர் உள்பட 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், 6 பைக்குகள், ஒரு ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.தென்காசி மாவட்டம், கடையம் போலீசார் ராம்நகர் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கார் மற்றும் இரு பைக்குகளில் வந்த வாலிபர்கள் மூவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து மூவரையும் கடையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று தங்கள் பாணியில் விசாரித்தனர். அதில் அவர்கள் ராஜ்குமார் (31), வினோத் என்ற முகமது நசீர் (30), தாம்பரம் அருகே சேலையூரில் வசிக்கும் ரவி என்ற சமீர் (33) என்பது தெரியவந்தது.

இவர்கள் மூவரும் நெல்லை, தென்காசி, திருச்சி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பைக்குகளை திருடியது அம்பலமானது.மேலும் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் ஒரு வீட்டை உடைத்து 50 பவுன் நகையைத் திருடியது. பூலாங்குளம் தனியார் நிதிநிறுவனத்தில் உள்ள இரும்பு பெட்டியை காஸ் வெல்டிங் மூலம் உடைத்து திருடமுயன்றது. கடையம் அடுத்த லட்சுமியூர் தேவி சக்தி கோயிலில் கடந்த 1ம் தேதி இரவு ஐம்பொன் சிலையை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கார், 6 பைக்குகள்,  பழமைவாய்ந்த தேவி சக்தி ஐம்பொன் சிலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories: