பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியரை பிடிக்க போலீசார் தீவிரம்

சேலம்: 5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி 11வது வார்டுக்குட்பட்ட சித்தன்பட்டி குட்டை பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்களில் அதே பகுதியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி, நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். மாலை அழுது கொண்டே வீடு திரும்பிய மாணவி, இனிமேல் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். அதனைக்கேட்டு அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர், மாணவியிடம் விசாரித்தபோது பள்ளி ஆசிரியரான செந்தாரப்பட்டியைச் சேர்ந்த அகஸ்டின்தங்கையா பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஊர் மக்களுடன் நேற்று காலை பள்ளிக்கு சென்று, ஆசிரியர் அகஸ்டின் தங்கையாவிடம் தட்டிக்கேட்டு அவரை தாக்கியுள்ளனர். மேலும், மாணவியின் பெற்றோர் கெங்கவல்லி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவியை பார்ப்பதற்காக பள்ளிக்கு சென்ற 13 வயது உறவுக்கார சிறுமிக்கும் ஆசிரியர் அகஸ்டின் தங்கையா பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, ஆசிரியர் அகஸ்டின் தங்கையாவை தேடியபோது அவர் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: