×

சில்லி பாய்ன்ட்...

* ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக நீச்சல் சாம்யன்ஷிப் போட்டி நடக்கிறது. அதன் இறுதிச்சுற்று ஒன்றில் நேற்று முன்தினம் இரவு பங்கேற்ற அமெரிக்க வீராங்கனை அனிதா அல்வேரெஸ் திடீரென மயங்கி தண்ணீருக்கடியில் சென்றார். அதை கவனித்த பயிற்சியாளர் ஆண்டிரியா ஃபியன்டஸ் சட்டென்று தண்ணீரில் குதித்து மீட்டார். சிகிச்சைக்கு பிறகு அனிதா நலமுடன் இருப்பதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது.
* இங்கிலாந்தின் லீட்சில் நடக்கும் கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்று நியூசிலாந்து களமிறங்கியது. ஆனால் இங்கிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசி திணறி வருகிறது.
* ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியின் 3 ஆட்டங்களிலும் இந்திய கால்பந்து அணி வென்றது. அதனால் உலக தரவரிசைப் பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 104வது இடத்தை பிடித்துள்ளது.
* இந்தியா-லீசெஸ்டர்ஷையர் அணிகளுக்கு இடையிலான 4 நாட்கள் பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. எதிரணியிலும் இந்திய வீரர்கள் புஜாரா, ரிஷப்,  பும்ரா, பிரசித் ஆகிய 4 வீரரகள் இடம் பெற்றுள்ளனர். டாஸ் வென்று களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தட்டு தடுமாறி ரன் சேர்த்தது. ஸ்ரேயாசை டக் அவுட்டாக்கினார் பிரசித்.
* அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், நீண்ட நாட்களுக்கு பிறகு  ஈஸ்ட்போர்ன் ஓபன் இரட்டையர் பிரிவில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபருடன் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய ஜோடி அரையிறுதி வரை முன்னேறியது. இந்த ஜோடி நேற்று ஆடாமல்அரையிறுதியில் இருந்து விலகியது. ஆன்சுக்கு வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் இந்த முடிவாம். அதனால் அலெக்சாண்ட்ரா க்ருணிச்(செர்பியா), மேக்டா லின்னெட்(போலாந்து) இணை எளிதில் பைனலுக்கு முன்னேறியது.
* இந்தியாவில் முதல்முறையாக ஃபிபா யு17 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இந்தாண்டு அக்.11 முதில் அக்.30ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆட்டத்துக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது. அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சி  இன்று மாலை 3.30 மணி முதல் ‘ஸ்போர்ட்ஸ் 18’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
* இந்தியா ரேசிங் லீக் மோட்டார் பந்தயம் இந்த ஆண்டு நவ.11ம் தேதி முதல்  டிச.10ம் தேதி வரை ஒவ்வொரு வார இறுதியிலும்  நொய்டா, ஐதராபாத், கோவை, சென்னை ஆகிய நகரங்களில் நடைபெறும். சென்னையில் உள்ள எம்எம்ஆர்டி வளாகத்தில் டிச.2, 3, 4 தேதிகளில் மோட்டார் பந்தயம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்தியாவின் ‘ரேசிங் புரோமோஷன்ஸ் பிரைவேட் லிட்’(ஆர்பிபிஎல்) அமைப்பு மேற்கொள்கிறது.
* அயர்லாந்தின் டப்ளின் நகரில் 5 நாடுகளுக்கு இடையிலான ‘யு23 மகளிர் ஹாக்கி போட்டி’ நடக்கிறது. இதில் இந்தியா-உக்ரைன் இடையிலான 3வது ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.
* சுவீடனின் ஸ்டாக்ஹோமில் 3 நாடுகளுக்கு இடையிலான யு23 மகளிர் கால்பந்துப் போட்டி நடக்கிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, சுவீடன் ஆகிய நாடுகளை் விளையாடுகின்றன. நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா சுவீடனை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. நாளைய ஆட்டத்தில் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

Tags : Chilli Point , Silly Point ...
× RELATED சில்லி பாய்ண்ட்...