×

வாழ்வென்பது பெருங்கனவு-கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!

நன்றி குங்குமம் தோழி

காம்கேர் கே.புவனேஸ்வரி

ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். கணினி அறிவியல் மற்றும் எம்.பி.ஏ வில் முதுகலைப் பட்டம் பெற்றவர். காம்கேர் சாஃப்ட்வேர் என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 28 ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறார்.

கடின உழைப்பு, நிறுவன வளர்ச்சியில் சமரசம் செய்து கொள்ளாத அர்ப்பணிப்பு, புதிதாக வரும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களை வசப்படுத்துதல் என்று ஓய்வின்றி உழைப்பவர் காம்கேர் புவனேஸ்வரி. தன்னை வளர்த்த சமூகத்துக்கு நன்றி செய்யும் வகையில் பதிப்பாளராக பல நூல்கள் வெளியிட்டுள்ளார். சாஃப்ட்வேர்கள், மொபைல் ஆப்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இ-புத்தகங்கள் என்று இவரின் வானத்தை விரித்துக் கொண்டே இருக்கிறது.

130-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும், உலக அளவிலும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத்திட்டமாக உள்ளன.

பிராஜெக்ட்டுகளுக்காக பலமுறை அமெரிக்கா சென்று வந்தவர். தமிழகத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உரை நிகழ்த்தி அவர்களின் உந்துசக்தியாகவும் விளங்குகிறார்.‘‘1992ல் - சாஃப்ட்வேர் துறை அவ்வளவாக நம்நாட்டில் அறிமுகமில்லாத காலத்தில் அந்தத் துறையில் தொழில் வாய்ப்புகளைத் தேடி, களம் இறங்கினேன். என் படிப்பு, உழைப்பு, திறமை இவற்றை மட்டுமே மூலதனமாக்கி எனக்கான பாதையை நானே தேர்ந்தெடுத்து வடிவமைத்தேன். 28 ஆண்டுக்கால கடும் உழைப்பில் படிப்படியான வளர்ச்சியில் ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற என் நிறுவனத்தின் பெயரே எனக்கு அடையாளமாகி ‘காம்கேர் புவனேஸ்வரி’ என்று ஐகானாகவும் மாறிவிட்டது.

கம்ப்யூட்டர் கேர் (Computer Care) என்பதன் சுருக்கமே காம்கேர் (Compcare). சாஃப்ட்வேர்கள் தயாரிப்பதே முதன்மைப் பணி என்பதால் ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்று பெயர் சூட்டினோம். நான் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கியபோது கம்ப்யூட்டர் நம் நாட்டில் அப்போதுதான் மெல்ல எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்ததால், மக்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தவே அஞ்சினர். படித்தவர்களுக்கும், பட்டம் பெற்றவர்களுக்கும், ஆங்கிலம் அறிந்தவர்களுக்குமே கம்ப்யூட்டர் என்ற தவறான நம்பிக்கைகள் கொண்டிருந்தனர்.

கம்ப்யூட்டரில் நம் தாய்மொழியை பயன்படுத்தும் வசதியும், கம்ப்யூட்டரின் விலை குறைப்பும் மட்டுமே தொழில்நுட்பத்தை மக்களுக்கு மிக அருகில் கொண்டு செல்லும் என்பதை என்னால் கணிக்க முடிந்தது.பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மளிகைக்கடைகள், வங்கிகள்.... என நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டு இருக்கும் அனைத்து தொழில்களிலும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினேன். இவர்களுக்கு குறைந்த விலையில் கம்ப்யூட்டரை அசெம்பிள் செய்து, பயன்படுத்த பயிற்சியும் அளித்தேன்.

அதன் பிறகு எங்க நிறுவனத்தில் தயாரிக்கும் சாஃப்ட்வேர்களை அவர்களுக்கு இலவசமாக பயன்படுத்த கொடுத்தோம். பிடித்திருந்தால், பின்னர் விலைகொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இப்படியாக நிறைய ஆராய்ச்சிகள் செய்து சாஃப்ட்வேர் தயாரிப்பில் எங்க நிறுவனம் ஒரு பிராண்டாக மாறியது. அதில் பார்வையற்றோர் மற்றவர்கள் உதவியின்றி தாங்களாகவே ‘ஸ்கிரீன் ரீடிங்’ தொழில்நுட்பம் மூலம் தேர்வு எழுத உதவும் ‘விசியோ எக்ஸாம்’ (Visio Exam) என்ற சாஃப்ட்வேர் ஒன்றையும் உருவாக்கினேன்’’ என்றவர் தன் எழுத்து மீது ஏற்பட்ட ஆர்வம் பற்றி பகிர்ந்தார். ‘‘நான் பிறந்தது கும்பகோணம். அப்பா பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் துணைக்கோட்ட பொறியாளராகவும், அம்மாவும் அதே துறையில் சீனியர் தொலைபேசி கண்காணிப்பாளராகவும் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள்.

இருவருமே தொலைபேசித் துறையில் பணிபுரிந்து வந்ததால் பணி இட மாற்றல் காரணமாக பல்வேறு ஊர்களில் வசிக்க வேண்டிய நிர்பந்தம். ஒரு தங்கை, தம்பி. இருவரும் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிகிறார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று இருந்தாலும், இந்த துறையில் ஒவ்வொரு நாளும் புது அப்டேட்கள் ஏற்படும் என்பதால் எப்போதுமே படித்துக் கொண்டு இருக்க வேண்டும். இன்றும் நான் ஒரு மாணவியாகவே இருக்கிறேன்.

அப்பாவுக்கு கணிதத்தில் அதீத ஆர்வம். கணிதம் சம்பந்தமாக நிறைய படிப்பார். என் அம்மா நிறைய புத்தகங்கள் படிப்பார். அம்மா தினமும் காலை எல்லா தினசரி பத்திரிகைகளையும் ஒன்றுவிடாமல் படித்துவிட்டு தான் சமையல் வேலைக்கே வருவார். அம்மா அவங்க படித்த புத்தகத்தை எல்லாம் பைண்ட் செய்து வைப்பாங்க. இதற்காக எங்க வீட்டில் மினி நூலகம் உள்ளது. புத்தகங்களுடன் வளர்ந்ததாலோ என்னவோ எனக்கு படிப்பது மற்றும் எழுதுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது. 12 வயதில் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற புத்தகத்தை எழுதினேன். அதன் பிறகு தினமும் விடியற்காலை நேரத்தை என்னுடைய கதை எழுதம் நேரமாக மாற்றிக் கொண்டேன்.

நான் கல்லூரி முடிக்கும் தருவாயில் 100க்கும் மேற்பட்ட நான் எழுதிய கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எல்லாம் பிரபல பத்திரிகைகளில் வெளியானது மட்டுமில்லாமல் சில படைப்புகளுக்கு பரிசும் விருதுகளும் கிடைத்தது’’ என்ற புவனேஸ்வரி தன் நிறுவனத்தின் செயல்பாட்டை பற்றி விவரித்தார்.

‘‘என் நிறுவனத்தில் சாஃப்ட்வேர்/ மொபைல் ஆப் தயாரிப்பு, அனிமேஷன் கார்ட்டூன் படைப்புகள் வடிவமைத்தல், ஆவணப் படங்கள் வெளியிடுதல், புத்தகங்கள் வெளியிடுதல் என நான்கு துறைகள் இயங்கி வருகிறது. இது தவிர யுடியூப் சேனலும் உள்ளது. சாஃப்ட்வேர் என்றாலே வெளிநாட்டு பிராஜக்ட் என்று தான் நம்முடைய மனதில் பதிந்துவிட்டது. நான் நிறுவனம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை நம் நாட்டுக்காகவே சாஃப்ட்வேர்களை தயாரித்து வருகிறேன் என்று நினைக்கும் போது ரொம்பவே பெருமையாக உள்ளது.

சாஃப்ட்வேர் தயாரிப்பை தொடர்ந்து, 2000-ம் வருடம் அனிமேஷன் துறையில் எங்க நிறுவனம் இணைந்தது. இதை அடுத்து ஆவணப்படங்கள் தயாரித்தல், வானொலி மற்றும் தொலைக்காட்சி வாயிலாக கம்ப்யூட்டர் சார்ந்த  கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில்முனைவோருக்கான நிகழ்ச்சிகள் தயாரிப்பது என எதையுமே விட்டு வைக்கவில்லை. மேலும் என் தொழில் சார்ந்த தொழில்நுட்ப அனுபவங்களை புத்தகமாகவும் எழுதி வெளியிட்டு வருகிறேன்.

அந்த புத்தகங்கள் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது’’ என்றவர் தன் பெற்றோரின்பெயரில் அறக்கட்டளை ஒன்று துவங்கி அதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித் தொகை மற்றும் வேலைவாய்ப்புக்கான உதவி செய்து வருகிறேன்’’ என்றார் புவனேஸ்வரி.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED நிர்வாகத் துறையிலுருந்து சினிமா வரை…