×

காயங்களுடன் சாக்கில் வைத்து புதைக்கப்பட்ட பெண் சடலம் - போலீசார் தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சி: சாக்கில் வைத்து புதைக்கப்பட்ட பெண் சடலம் யார்? அவர் எதற்காக கொல்லப்பட்டார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு அருகே புதூர் ஏரியில் சுடுகாடு உள்ளது. இங்கு பள்ளம் தோண்டி மூடப்பட்டதற்கான அடையாளம் காணப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், யாரையோ கொன்று அங்கு புதைத்திருப்பதாக கருதி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தாசில்தார் நேரில் வந்து ஆய்வுசெய்த பிறகே குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க முடியும் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் 4 நாட்கள் ஆகியும் தாசில்தார் வராததால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 3 மணியளவில் சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மூத்த உதவி பேராசிரியர் ராம்குமார் மற்றும் வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் புதூர் சுடுகாட்டுக்கு வந்தனர். இதையடுத்து தாசில்தார் பாண்டியன் முன்னிலையில் சந்தேகத்துக்குரிய இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அதில் சாக்குமூட்டை ஒன்று இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, அதற்குள் தலையில் படுகாயங்களுடன் 45-வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்தது.

அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், டாக்டர்கள் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். இந்நிலையில், மீண்டும் அதே பள்ளத்தில் அந்த பெண்ணின் உடல் புதைக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து போலீசார் கூறுகையில், யாரோ மர்மநபர்கள் அந்த பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் உடலை கட்டி, இங்கு கொண்டு வந்து புதைத்திருக்கலாம்.

ஆனால், அந்த பெண்ணை பற்றியும், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்த நபர்கள் யார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : The body of a woman buried in a sack with injuries - police intensive investigation
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...