இரட்டைத் தலைமையை ரத்து செய்ய கோரி 2,190 உறுப்பினர்கள் கடிதம்... கடுப்பான ஓபிஎஸ்.. பொதுக்குழு மேடையில் இருந்து வெளியேறினார்!!

சென்னை : அதிமுக பொதுக்குழுவை புறக்கணித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார்.பரபரப்பான சூழ்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பொதுக்குழு தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டார்கள்.ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அனைத்து தீர்மானங்களும் அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும். ஜூலை 11ல் பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார்,என்றார். இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மறைந்த உறுப்பினர்களுக்கு பொதுக்குழுவில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த தீர்மானத்தை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிய ஜெயக்குமார் வழிமொழிந்தார். தற்காலிக அவைத்தலைவராக உள்ள தமிழ்மகன் உசேனை கட்சியின் அவைத்தலைவராக பொதுக்குழு தேர்வு செய்தது. பின்னர் பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசைனிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கடிதத்தை வாசித்த சண்முகம்,அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை அவைத் தலைவரிடம் வழங்குகிறேன். ஒற்றைத் தலைமை குறித்து அதிமுக பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டும். இரட்டைத் தலைமை காரணமாக பிரதான எதிர்க்கட்சியாக அதிமுகவால் திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு இல்லாததால் அதிமுகவினரிடையே சோர்வு ஏற்பட்டுள்ளது. இரட்டைத் தலைமையை ரத்து செய்து ஒற்றைத் தலைமை கொண்டு வருவது குறித்து இந்த பொதுக்குழுவிலேயே விவாதித்து முடிவு செய்ய வேண்டும்,என்றார்.

இதையடுத்து அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி காலை 9.15 மணிக்கு நடக்கும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இதனை ஏற்காமல் அதிமுக பொதுக்குழுவை புறக்கணித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார். பொதுக்குழு கூட்டத்தில் இருந்து தனது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோருடன் ஓ.பி.எஸ். வெளிநடப்பு செய்தார். வெளியேறிய பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக பொதுக்குழுவை புறக்கணித்து வெளியேறுவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார். மேலும் அதிமுகவை அழிவுப்பாதைக்கு சதிகாரர்கள் கொண்டு செல்வதாக குற்றம்சாட்டினார். ஓபிஎஸ் கையெழுத்து போட்டால்தான் அடுத்த பொதுக்குழு செல்லும். என்றும் ஜூலை 11ல் அறிவிக்கப்பட்ட புதிய பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் வைத்திலிங்கம் தெரிவித்தார். பின்னர் பொதுக்குழுவில் எடப்பாடிக்கு வெள்ளி கிரீடமும் வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டது. தொண்டர்களை நோக்கி இரட்டை இலை சின்னத்தை காட்டி பழனிசாமி கையை அசைத்தார். இறுதியாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் நிறைவு பெற்றது அதிமுக பொதுக்குழு.

Related Stories: