அரங்கிற்குள் நுழைந்த ஓபிஎஸ்: 'அதிமுகவின் வாரிசு, பொதுச் செயலாளர் எடப்பாடி வாழ்க'“ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ்” என ஆதரவாளர்கள் கோஷம்!!

சென்னை : பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் தொடங்கியது. ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களைத் தவிர, ஒற்றைத் தலைமை தொடர்பான தனித் தீர்மானத்தை நிறைவேற்ற ஐகோர்ட் தடை விதித்தது.

இந்த நிலையில் ஸ்ரீவாரு மண்டபத்திற்குள் ஓ பன்னீர் செல்வம் வரும் போது, பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று முழக்கமிட்டனர். கூட்ட அரங்கில் எழுந்து நின்று, அதிமுகவின் வாரிசு, எடப்பாடி வாழ்க, பொதுச் செயலாளர், ஒற்றைத் தலைமை எடப்பாடி , “ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ்” என எடப்பாடி ஆதரவாளர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக பொதுக்குழுவுக்கு ஓ பன்னீர் செல்வம் வந்த வாகனத்தை வெளியே எடுக்கச் சொல்லியும் எடப்பாடி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். இதனை கண்டித்து பேசிய ஈபிஎஸ் ஆதரவாக வளர்மதி, நீதிமன்ற ஆணைப்படி பொதுக்குழு நடைபெறுவதால் அமைதி காக்க வேண்டும். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,என்றார்.

தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவிற்கு வந்த பன்னீர்செல்வத்தை வாயிலில் அமர்ந்திருந்த வேலுமணி, சி.வி.சண்முகம் வரவேற்கவில்லை. எடப்பாடி ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வத்தை கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தனர். இதனிடையே அதிமுக பொதுக்குழு தொடங்குவதற்கு முன்பாகவே உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாறி மாறி முழக்கமிட்டதால் பொதுக்குழு அரங்கில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.  இதனை கண்டித்த அதிமுக மூத்த தலைவர் வைகைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது எனவும் வைகைச்செல்வன் கூறினார்.

Related Stories: