×

எஸ்.பி.பி. சாரோடு பாடினது எனது பாக்கியம்!

நன்றி குங்குமம் தோழி

மாலதி

‘திருடா திருடி’யில் ‘மன்மத ராசா’, ‘திருப்பாச்சி’யில் ‘கும்பிடப் போன தெய்வம்’, ‘அடிதடி’யில் ‘உம்மா உம்மா’, ‘கந்தசாமி’யில் ‘என் பேரு மீனாகுமாரி’ என துள்ளல் துடிப்பான பாடல்களை பாடியவர் மாலதி ல‌ஷ்மன்.  கே.பி.சுந்தரம்பாளின் பாடல்களை அவரை போலவே பாடுவது மாலதியின் சிறப்புகளுள் ஒன்று. ஒரு கட்டத்திற்கு பின் சினிமாவில் பாடுவதைக் குறைத்துக் கொண்டவர் தன் இசைப் பயணத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

‘‘தமிழ்  சினிமாவுலதான் நான் பாடிட்டு இருக்கேன். ஆனால் என்னால் பாடாமல் இருக்க முடியாது. தெலுங்கில் நிறைய பாடல் பாடுறேன். தமிழ்ல தான் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. இங்கே புதுசு புதுசா பாடகர்கள் வர ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு பாடகியாக என்னோட பயணம் ரொம்பவே சந்தோஷமான தருணம். திரும்ப திரும்ப அதே மாதிரி பாடல்கள் மற்றும் குரல்களை கேட்கும் போது எல்லோருக்கும் ஒரு மாதிரி இருக்கும். புதுசா கேட்க நினைப்பாங்க. அதனால் எனக்கு செட்டாகிற பாடல்களை மட்டும் பாடிக் கொண்டு இருக்கேன்.

‘திருடா திருடி’ படத்தில் நான் பாடிய மன்மத ராசா பாடல் எனக்கான ஒரு பெரிய அடையாளத்தை சினிமா துறையில் ஏற்படுத்தியது. அதன் பிறகு நிறைய பாடல்கள் பாட வாய்ப்பு வந்தது. கிட்டதட்ட ஆயிரம் பாடல்கள் மேல் பாடி இருக்கேன்’’ என்றவர் மேடைக்கச்சேரிகளில் தன் அனுபவத்தை பற்றி விவரித்தார்.

‘‘நான் செய்த ஒவ்வொரு மேடை நிகழ்ச்சிகளும் சந்தோஷமான தருணங்கள். இந்த நேரத்தில் பாடும் நிலா பாலு அங்கிளை மறந்திட முடியுமா என்ன? அவரைப் பத்தி  சொல்ல நிறைய இருக்கு. நான் தெலுங்கில் மட்டும் அவரோடு இரண்டு பாடல்கள் சேர்ந்தது பாடி இருக்கேன். தமிழ் சினிமாவில் அவரோடு பாடும் வாய்ப்பு சரியாக எனக்கு அமையல. ஆனால் அவரோடு ஏராளமான இசைக் கச்சேரியில் பாடியிருக்கிறேன். இசைக் குழுவினரிடம் மட்டுமல்லாமல் எல்லா கலைஞர்களிடமும், செம ஜாலியாக பேசக் கூடியவர். எஸ்பிபி அங்கிள் 54 வருஷமா சினிமாவில் தன்னுடைய எல்லா மொழி பேசும் ரசிகர்களை தன் குரலால் கட்டிப் போட்டவர். ஆன்மீகத்தில் பக்தி கொண்டவர், பேசுவதில் மென்மையானவர்.

ரொம்பவே தன்னடக்கமானவர். காரணம் ஒவ்வொரு முறை கச்சேரி செய்ய மேடையேறும் முன்னால் எல்லா இசைக் கலைஞர்களையும் வணங்கிட்டுதான் மைக்கை கையில் எடுப்பார். இசைக்குழுவில் யார் நல்லா பாடினாலும், வாசித்தாலும் உடனே மேடையிலேயே அவர் பேரை சொல்லி அழைத்து ரசிகர்களிடம் ஒரு கைத் தட்டல் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளுவார். ஒர்க்கில் ரொம்ப சின்சியர் ஆனவர். அந்த பாடலை பல முறை பாடி இருந்தாலும், கச்சேரியில் பாடும் முன்னால் ஒரு முறை ஒத்திகை பார்க்காமல் பாடமாட்டார்.

நகைச்சுவை உணர்வு கொண்டவர். எப்போதும் என்னைப் பார்த்து, மாலதி பாடினால் அவருக்கு மைக்கோ ஸ்பீக்கரோ தேவையில்ல. அந்தளவுக்கு வாய்ஸ் சவுண்டாயிருக்குன்னு கிண்டல் செய்வார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், துபாய் போன்ற எல்லா நாடுகளில் நடைபெற்ற கச்சேரியில் அவரோடு பாடி இருக்கேன். அப்படிப்பட்ட லெஜண்ட் இப்போது நம்முடன் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை. அவர் காற்றோடு கலந்து விட்டாலும் இசை மூலமாக நம்முடன் வாழ்ந்து கொண்டு இருப்பார். இனிமே அவரை பார்க்கவோ அவர் சிரிப்பை கேட்கவோ முடியாது, எனக்கு பிடித்த மனிதரோடு பாடக் கூடிய வாய்ப்பை கடவுள் கொடுத்ததிற்கு பெரிய பாக்கியமாக கருதுகிறேன்’’ என்றவர் மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

‘‘ஒரு முறை தெற்கு ஆப்ரிக்காவுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக போயிருந்தேன். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம்  என ஐந்து மொழிகளில் பாடினேன். அதில் ஒரு பாட்டு கே.பி சுந்தரம்மாள் அவர்கள் பாடிய பாட்டை பாடினேன். என்னென்னு தெரியல அந்தம்மாவே என் உடம்பில் வந்து பாடின மாதிரி இருந்தது. ரசிகர்கள் அந்தப் பாட்டை கேட்டுட்டு அழுதாங்கன்னா பாருங்க. அந்த சம்பவம் என்னால் மறக்கவே முடியாது.  எனக்கு ஆஸ்கார் அவார்டுக்கு மேல விருது கிடைச்ச மாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டது. அப்படி ஒரு மேடை இனிமேல் கிடைக்காது’’ என்றார் மாலதி.

Tags : SBP ,Charo ,
× RELATED எஸ்.பி.பி குரலை AI மூலம் பயன்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ்