×

ஊர்வசி மேம் மாதிரி நடிப்பில் பெயர் வாங்கணும்…!

நன்றி குங்குமம் தோழி

நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமான அகல்யா வெங்கடேசன், ஆதித்யா அலைவரிசையில் ‘மாமோய் நீங்க எங்க இருக்கீங்க’, ‘நீங்க சொல்லுங்க dude’ போன்ற நிகழ்ச்சிகளில் தனது குறும்புத்தனமான நகைச்சுவை கலந்த பேச்சினால் குறுகிய காலத்தில் ஏராளமான நேயர்களை கவர்ந்திழுத்தவர். இப்போது திரைப்படங்களிலும் தனி முத்திரை பதித்து வருகிறார்.

‘‘நான் அதிகமா பேசுவேன். அதுக்கு ஏற்றமாதிரியே ஆங்கரிங் பண்றது ரொம்ப பிடிக்கும். படிப்புக்கும் நமக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம். எக்ஸாம் முன்னாடி நாள் தான் உட்கார்ந்து படிக்கவே செய்வேன். ஆனா, வீட்டுல அம்மா டீச்சர். தங்கச்சி ரொம்ப நல்லா படிப்பா. அப்பா டிராவல்ஸ் வச்சு இருக்காங்க. சொந்த ஊர் மன்னார்குடி. என்னுடைய சின்ன தாத்தா ஆனா ரூனா அருணாச்சலம், ஸ்டூடன்ட் ஜெராக்ஸ் கடை உரிமையாளர். அவருக்கு தமிழ் மேல ஈடுபாடு அதிகம்.

தமிழ் சங்கத்தில் எல்லாம் அவர் பணியாற்றியுள்ளார். அவருடைய தாக்கம் தான் எனக்கும் தமிழ் மேல ஈடுபாடு ஏற்பட காரணம்ன்னு சொல்லலாம். அதே மாதிரி செஸ் பிளேயர் அதிபன் பாஸ்கர் என்னுடைய மாமா பையன். தாத்தா மன்னார்குடியில் இருந்த வரை நாங்க அங்க விவசாயம் தான் பார்த்து வந்தோம். அவர் எப்ப சென்னைக்கு வந்தாரோ... நாங்களும் அவருடன் சேர்ந்து சென்னையில் வந்து செட்டிலாயிட்டோம். அவர் சென்னைக்கு வந்த பிறகு தான் நான் பிறந்தேன். அதனால் நான் படிச்சது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான்.

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு விஸ்காமில் சேர்ந்தேன். நான் ஏற்கனவே சொன்னது போல் எனக்கு ஊடகத்தில் வேலைப் பார்க்கணும்ன்னு விருப்பம். அதனாலே நான் விஸ்காம் தேர்வு செய்து படிச்சேன். கல்லூரி வாழ்க்கை எல்லா பெண்களை போல் எனக்கும் நன்றாகவே போனது. அந்த சமயத்தில் தான் எங்க கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நான் பங்கெடுத்தேன். நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொலைக்காட்சி சேனல் ஒன்று நான் மேடையில் பேசுவதைப் பார்த்து, எனக்கு அவங்க சேனலில் ஆங்கரிங் வாய்ப்பு கொடுத்தாங்க. ஒரு பக்கம் காலேஜ் மறுபக்கம் ஆங்கரிங்ன்னு ஜாலியா நகர்ந்து கொண்டு இருந்தது.

அந்த சமயத்தில் தான் எனக்கு சன் குழுமத்தில் இருந்து அழைப்பு வந்தது. நான் அங்கு ஏற்கனவே பல முறை ஆடிஷனுக்காக சென்று இருந்தேன். அதைப் பார்த்து தான் எனக்கு அங்கிருந்து அழைப்பு வந்தது. வந்த வாய்ப்பை விடக்கூடாதுன்னு உடனடியாக சேர்ந்தேன்’’ என்றவர் ஆதித்யா டிவியில் ‘வாலு பசங்க’ நிகழ்ச்சியை லைவாகவும், ‘மாமோய் நீங்க எங்க இருக்கீங்க’ போன்ற நிகழ்ச்சிகளை டவுட் செந்திலோடு இணைந்து செய்துள்ளார். ‘‘கணவன் - மனைவிக்கிடையே நிகழும் ஊடல் கூடலை சொல்லும் நிகழ்ச்சி தான் ‘மாமோய் நீங்க எங்க இருக்கீங்க’.

ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு பிரச்னை, அதை காமெடி கலந்து அழகாக அதற்கான தீர்வு சொன்னது மக்களிடத்தில் ஒரு நல்ல பெயரை வாங்கி தந்தது. இதற்கடுத்து ‘நீங்க சொல்லுங்க dude’ நிகழ்ச்சி. இதில் கல்லூரி மாணவர்களிடையே சில கேள்விகள் கேட்ேபாம். அதன் மூலம் அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதை பிரதிபலிக்கும் நிகழ்ச்சி தான் இது’’ என்ற அகல்யா, திரைப்படங்களில் நடித்த அனுபவங்களை பகிர்ந்தார்.   ‘‘மாமோய் நீங்க எங்க இருக்கீங்க நிகழ்ச்சியை பார்த்த முத்தையா சார் ‘தேவராட்டம்’ படத்தில் ஒரு வாய்ப்பு கொடுத்தார்.

இதுதான் என் முதல் படம். ஜோதிகா மேம்மோட ‘ராட்சசி’ படத்தில் அவங்க கூடவே வருவேன். இதற்கடுத்து ‘சங்கத்தமிழன்’ போன்ற படங்களோடு சேர்த்து ஆறு படம் நடிச்சிருக்கேன். நடிச்ச எல்லா படமும் ரிலீசும் ஆனது ரொம்ப சந்தோஷமா இருக்கு.  சங்கத் தமிழன் படம் நடிச்சுட்டு இருக்கையில், முதல் முறையாக விஜய் சேதுபதி  சாரை பார்க்கும் போது, ‘ஹேய் நீ தானே நீங்க சொல்லுங்க டியூட்-ல வர பொண்ணு’னு கேட்டார். அதே போல சிவகார்த்திகேயன் அண்ணாவும் என்னை அடையாளம் கண்டு கேட்டார். இவங்க என்னை அடையாளம் கண்டு சொல்லும் போது ரொம்ப சந்தோஷமா இருந்தது.

நடிக்கிறது, நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது என எல்லாம் தாண்டி ரொம்ப பிடிச்சது பெட்ஸ் வளர்க்குறது. எட்டு நாய்குட்டி வளர்க்கிறேன். செல்லப்பிராணிகள் எங்க குடும்பத்துக்கே பிடிக்கும். அதனால் நான் எங்க  வெளியே வரும் போது, அங்கு ஒரு நாயைப் பார்த்தேனா உடனே பிஸ்கெட் வாங்கி போட்டுடுவேன். எனக்கு பசிக்குதுனா உங்கக்கிட்ட கேட்பேன். ஆனால் அவங்களுக்கு கேட்கவும் தெரியாது. இந்த ஒரு விஷயம் மைண்ட்ல எப்போதும் ஓடிட்டே இருக்கும். இது போக லாங் டிரைவ் ரொம்ப பிடிக்கும். சிம்பிளா சொல்லணும்னா எப்போதும் கல கலன்னு இருக்கணும்’’ என்றவர் சினிமாவில் தன் எதிர்காலம் பற்றி கூறினார்.

‘‘படங்களில் கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் நிற்கிற மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. சமீபத்தில் மூக்குத்தி அம்மன், சூரரைப் போற்று படங்களில் நடித்த ஊர்வசி மேம் மாதிரி பேர் வாங்கணும். இரண்டு படங்களிலும் வித்தியாசம் காட்டி ரொம்ப நல்லா நடிச்சிருப்பாங்க. அவங்கள போல ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு மாதிரி நடிக்கணும். அவ்ளோதாங்க…! நாம ரொம்ப யோசிக்காம நமக்கான வேலையை பார்த்தாலே போதும்... எல்லாமே சரியா போகும்” என்றார் அகல்யா வெங்கடேசன்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Urvasi Mem ,
× RELATED நிர்வாகத் துறையிலுருந்து சினிமா வரை…