×

எல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து… வைட்டமின் N

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவர்கள் வழக்கமாக எழுதிக்கொடுக்கும் பிரிஸ்கிரிப்ஷனில் இனி வைட்டமின்-N-ம் கூடிய விரைவில் இடம் பெறப்போகிறது. வைட்டமின் ஏ,பி,சி,டி எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்... அது என்ன ‘வைட்டமின் -N’ என்ற குழப்பம் வருகிறதா? ‘இயற்கையோடு இணைந்திருங்கள்’ என்பதுதான் அந்தப் பரிந்துரைக்கப்பட்ட N ஊட்டச்சத்து. அதாவது Nature என்பதன் சுருக்கமே வைட்டமின் N. இன்றைய நவீன வாழ்வில் வைட்டமின் N எந்த அளவுக்கு அவசியம் என்பதை யோகா மற்றும் இயற்கை மருத்துவரான யோக மீனாட்சியிடம் கேட்டோம்...

‘‘இயற்கையான சூழலில் அதிக நேரம் செலவிடுவது நமது இயற்கை நியூரான்களின் செயல்பாட்டைத் தூண்டி, நமது இயற்கையான படைப்பாற்றலை வளர்ப்பதாக பல ஆய்வுகள் சொல்கிறது. இயற்கையுடன் ஒரு மணி நேரம் செலவழித்தால் மனிதனின் நினைவக செயல்திறன் மற்றும் கவனம் 20 சதவிகிதம் மேம்படுவதாக மெக்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இயற்கையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட பணியிடங்களில், ஊழியர்கள் அதிக உற்பத்தி மற்றும் குறைவான நோய்வாய்ப்படும் சாத்தியத்தையும் எடுத்துரைக்கின்றனர். இயற்கை அன்னை இயல்பாகவே தனது சொந்த குணமாக்கும் சக்தியைக் கொண்டுள்ளவள்.

இதை நிரூபிக்கும் வகையில், பென்சில்வேனியா ஆராய்ச்சியாளர்கள் மரக் காட்சிகளைக் கொண்ட அறைகளில் தங்கும் நோயாளிகள் குறுகிய காலம் மருத்துவமனையில் தங்குவதையும், வலி நிவாரணிகளின் தேவை குறைவாக இருப்பதையும், செவிலியர்களின் பார்வையில் மற்ற நோயாளிகளுடன் ஒப்பிடும்போது குறைவான எதிர்மறை கருத்துகளையும் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இதுபோன்ற அளவிற்கரிய ஆற்றலைக் கொண்ட  இயற்கையை, சிறு வயதில் வாழ்க்கையின் ஒரு பகுதியாக அனுபவித்து இருந்தாலும், இயற்கையோடு இணைவதை ஒரு பாக்கியமாக கருதும் நிலைக்கு இப்போது தள்ளப்பட்டிருக்கிறோம்.

எந்நேரமும் எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்பாடு, ஏசி அறை, வேலைச்சுமையால் மன அழுத்தம் இவையெல்லாம் நம் வாழ்வில் எல்லை மீறிவிட்டது. இதனால்தான் ‘விடுமுறை எடுத்துக் கொண்டு இயற்கைசூழ் இடங்களுக்கு சில நாட்கள் செல்லுங்கள்’ என்று மருத்துவர் ஆலோசனை வழங்கும் அளவிற்கு  நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இன்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி ஏராளமான நன்மைகள் கொடுத்திருந்தாலும், இயற்கைக்கு எதிரான நம் வாழ்வியல் முறையை தலைகீழாக மாற்றியிருப்பதன் மூலம், பல தீமைகளை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் இயற்கையோடு இயைந்திருப்பது முக்கியம். நம் முன்னோர்கள் வகுத்த வாழ்வியல் முறைகளை காலம் காலமாக பின்பற்றி வந்தவரை எந்த தொந்தரவும் இல்லாமல் இருந்தோம். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட தலைகீழ் மாற்றத்திற்கு உதாரணமாக நாம் தூங்கும் நேரத்தையே சொல்லலாம்.

தூங்க வேண்டிய நேரத்தில் தூங்குவதில்லை. காலை 4 மணி முதல் 6 மணிக்குள் தூங்கி எழுந்து அன்றைய நாளைத் தொடங்கிவிடவேண்டும். ஆனால், இன்று அப்படியா... அந்த நேரத்தில் தான் பலர் தூங்கவே செல்கிறார்கள். இப்படி இயற்கைக்கு எதிராக நாம் செயல்படுகிறோம். விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, மரங்கள் வெட்டப்பட்டு எல்லா இடங்களிலும் கான்கிரீட் கட்டடங்கள் ஆக்கிரமித்துவிட்டன. சுவாசிப்பதற்கு தூய காற்றும், குடிப்பதற்கு சுத்தமான நீரும் கிடைக்காமல் கஷ்டப்படுகிறோம்.  எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு, இயற்கையில் இலவசமாக கிடைத்த தண்ணீரையும், காற்றையும், காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. இப்போது இயற்கையைப் பார்க்கவே கூட நேரத்தை ஒதுக்கி, பணம் செலவு செய்து ரிசார்ட்டுக்கு போகலாமா? காடுகளுக்கு போகலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். நகரத்தின் தாக்கத்தால் கிராமங்களே கூட, இப்போது இயற்கையை இழந்து நிற்கிறது.

நம்மிடம் இயல்பாக இருந்ததையே இப்போது தேடும் நிலை வந்துவிட்டது. இயற்கையான காற்றை சுவாசிக்கும் நிலை இல்லாததால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, அடிக்கடி சளி பிடிப்பது, தொண்டைப்புண் மற்றும் நிறைய சுவாசக்கோளாறுகள் மற்றும் அல்சர், புற்றுநோய்கள் போன்றவை வருகின்றன. இயற்கை சார்ந்த தொழிலமைப்புகள் மாறி, உடலுழைப்பற்ற கம்ப்யூட்டர் வேலைகளால் மனிதனின் உடல் சீரழிந்ததோடு, இன்று பலருக்கும் மனப்பதற்றம், மன அழுத்தம் போன்ற மனநலக் கோளாறுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பெண்களுக்கு ஹார்மோனால் சமநிலைமையின்மைத் தன்மையால் வரக்கூடிய பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமுக்கு இயற்கைக்கு எதிரான செயலே காரணம் என்று கூறலாம்.

இயற்கை உணவுக் கலாச்சாரத்திலிருந்து விலகி, ஃபாஸ்ட் ஃபுட்டிற்கு மாறியதைக் குறிப்பிடலாம். காய்கறிகள், கனிகளிலும் நிறைய ரசாயன உரங்கள் கலப்பு, உணவுகளில் செயற்கை நிறமூட்டிகள் போன்றவை விதவிதமான புற்றுநோய்கள், சருமநலக்கோளாறுகள், மலட்டுத்தன்மை போன்ற நோய்களுக்கு காரணமாகின்றன. இதோடு பணிச்சுமையும் சேர்ந்துகொண்டு, மனநலக்கோளாறுகளை அனுபவிக்கிறார்கள். மனிதனின் வாழ்நாளே குறைந்துவிட்டது. மருந்து மாத்திரை இல்லாமல் ஒருவர் நீண்ட நாள் வாழ்வதே சாத்தியமில்லாமல் போய்விட்டது. மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியாலேயே வாழ்நாளை நீட்டித்துக் கொண்டிருக்கிறோம்.

சரி... இயற்கைக்கு எப்படி திரும்புவது?

ஆரோக்கியமான வாழ்வுக்கு மீண்டும் இயற்கைக்குத் திரும்பவதும், இயற்கையை பாதுகாப்பதும் நமக்கிருக்கும் ஒரே வழி. இருக்கும் இயற்கையை எந்த அளவிற்கு நிறைவாக உபயோகப் படுத்திக்கொள்ள வேண்டும் என்று யோசிக்க வேண்டும். வீட்டு மொட்டை மாடி அல்லது அருகிலுள்ள பூங்காக்களில் காலை வேளையில் ஒரு அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்யலாம். சென்னை போன்ற கடற்கரையோரங்களில் வாழும் மக்கள் வாரம் ஒரு முறையாவது கடற்கரைக்கு சென்று வரலாம். சில நகரங்களில் தற்போதும் இயற்கை சார்ந்த இடங்கள் நிறைய உள்ளன. உணவைப் பொருத்தவரை டப்பாவில் அடைத்த உணவுகள், துரித உணவுகளை தவிர்த்துவிட்டு, இயற்கை முறையில் விளைவித்த சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை வாங்கி சாப்பிட ஆரம்பிக்கலாம். முடிந்தவர்கள் மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டங்களில் தங்களுக்கு வேண்டிய காய்கறிகளை பயிரிடலாம்.

இரவு உணவை 8-9 மணிக்குள் முடித்துவிடவேண்டும். இரவு 11 மணிக்கு மேல்தான் வீட்டிற்கே திரும்பும் வேலையில் இருப்பவர்கள் மதிய உணவை நன்றாக சாப்பிட்டுவிட்டு, இரவு உணவை பழங்கள் சாப்பிடுவதோடு முடித்துக் கொள்வது மிக நல்லது. இல்லையெனில் நடுநிசியில் உண்ணும் பழக்கத்தால் பல செரிமானக் கோளாறுகளால் பாதிக்கப்பட நேரிடும். எப்படி இளைஞர்கள் Internet Access உள்ள இடத்தைத்தேடி கண்டுபிடிக்கிறார்களோ அதேபோல் இயற்கையை அணுகுவதற்கான வழியையும் தேடி கண்டுபிடித்து வாரத்திற்கு ஒருமுறையேனும் குழந்தைகளை கூட்டிச் செல்ல வேண்டும். உடற்பயிற்சிகள், மனநலத்திற்காக யோகா, மூச்சுப்பயிற்சி போன்ற இயற்கை சார்ந்த வாழ்வியல் நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் குறைந்தபட்சம் இயற்கைசார் வாழ்க்கைக்கு நிச்சயம் திரும்ப முடியும்!’’

தொகுப்பு: உஷா நாராயணன்

Tags :
× RELATED செயற்கை வைட்டமின்