தணிக்கை குழு ஒரு படத்தை நிராகரிச்சா... அதை வெளியிடவே முடியாது!

நன்றி குங்குமம் தோழி

தணிக்கை குழு சென்னை பிராந்திய அதிகாரி லீலா மீனாட்சி

மத்திய அரசின் செய்தி ஒளிபரப்பு அமைச்சரவையின் அங்கமான தணிக்கை குழு பாராளுமன்ற சட்டத்தின் படி அமைக்கப்பட்டது. ஒழுக்கம், அறநெறிகள் மீறாத வகையில் திரைப்படக் காட்சிகள், வசனங்கள், பாடல்கள், நடிப்பவர்களின் அசைவுகள் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டது. இதற்காக 1952ல் திரைப்படத் தணிக்கைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைமை அலுவலகம் மும்பையில் இருந்தாலும், மண்டல அலுவலகங்கள் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு சென்னையின் பிராந்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் லீலா மீனாட்சி. கடந்த மூன்று வருடமாக அதிகாரியாக பணியாற்றி வரும் லீலா மீனாட்சி தணிக்கை குழுவின் அமைப்பு மற்றும் செயல்பாடு குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் சேலம். அங்கதான் பிறந்தேன், வளர்ந்தேன், படிச்சேன். எம்.பி.ஏ முடிச்சிட்டு சொந்தமா ஓட்டல் சார்ந்த தொழில் செய்யலாம்ன்னு விரும்பினேன். அப்பாவுக்கோ நான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதணும்ன்னு விருப்பம். கல்லூரியிலும் சரி பள்ளியிலும் சரி நான் நன்றாக படிப்பேன். எப்படியும் தேர்ச்சி பெற்றுவிடுவேன்னு அப்பாக்கு நம்பிக்கை. நானும் டிரை செய்யலாம்ன்னு சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சிக்காக தில்லி பயணமானேன். அங்க போன பிறகு தான் தெரிந்தது எவ்வளவு கஷ்டம்ன்னு.

 முதல் முயற்சியில் பிரிலிமினரி தேர்வில் என்னால் பாஸ் செய்ய முடியல. அந்த தோல்வி என்னை ரொம்பவே பாதிச்சது. பள்ளி, கல்லூரி டாப்பர், பெயில் ஆயிட்டேன்னு நினைக்கும் போது ஏத்துக்கவே முடியல. எப்படியும் அடுத்த தேர்வில் பாசாகணும்ன்னு ரொம்ப சீரியசா படிக்க ஆரம்பிச்சேன். இரண்டாவது முயற்சியும் தோல்வி... இது எனக்கான களம் இல்லைன்னு முடிவு செய்து வேலையில் சேர்ந்தேன். மூன்று மாதங்கள் தான் என்னால் வேலைப் பார்க்க முடிந்தது. சிவில் சர்வீசில் அடைந்த தோல்வியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேலையை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் படிக்க துவங்கினேன்’’ என்றவர் ஆறாவது முயற்சியில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 2011ம் ஆண்டு இந்திய தகவல் சேவை துறையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

‘‘இந்த துறையை பொறுத்தவரை எப்போதும் ஊடகத்துடன் நாம தொடர்பில் இருக்கணும். முதலில் பத்திரிகை மற்றும் தகவல் தொடர்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் மூலம் ஒரு ஊடகத்துடன் இணைந்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். இந்த துறையை பொறுத்தவரை மந்திரிகள், பிரதம மந்திரி மற்றும் ஜனாதிபதி என அனைவரும் செய்தியாளர்களை சந்திப்பார்கள். அதை நாங்க தான் பார்த்துக்கணும். தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி நிலையம், பத்திரிகை தகவல் பணியகம் என அனைத்து அரசு சார்ந்த ஊடகங்களிலும் அமைச்சகம் சார்ந்த செய்திகள் பார்க்கணும். அதன் பிறகு வெளியீட்டுத் துறையில் மாற்றலானேன்.

அரசு வேலைவாய்ப்பு குறித்த செய்திகள். ஈ-காமர்ஸ் துறையை பார்த்துக் கொண்டேன். வெளியீட்டு துறையை ஆன்லைன் தளத்திற்கு என்னுடைய முயற்சியால் அடிக்கல் நாட்டினேன். எம்.பி.ஏ படிச்சிருந்ததால், எனக்கு அந்த தளத்தை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்தது. இதற்கிடையில் எனக்கு திருமணமானது.

என் கணவருக்கு துபாயில் வேலை. மூன்றரை வயசில் ஒரு குழந்தை இருக்கா. குழந்தையை பார்த்துக்க அங்க ஆள் இல்லை என்பதால், சென்னைக்கு மாற்றம் கேட்டு அமைச்சகத்தில் பதிவு செய்தேன். அந்த சமயத்தில் அனைத்து பிராந்தியத்தில் இருந்த அதிகாரிகளை அமைச்சகமே மாற்றம் செய்தது. அதில் டெபுடேஷனில் சென்னையின் தணிக்ைக குழு அதிகாரியாக (censor board)) 2017ல் மாற்றலாகி வந்தேன்’’ என்றவருக்கு சினிமா மற்றும் அதன் கலாச்சாரம் குறித்து புரிந்துகொள்ளவே ஒரு மாதம் மேலானதாம்.

‘‘சினிமா துறையில் பெரிய பின்னணி எல்லாம் கிடையாது. தில்லியில் படிக்கும் போது பெரும்பாலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி படங்கள் தான் பார்ப்பேன். தமிழ் படம் ரிலீசானாலும் பெரிய ஹீரோ படங்கள் தான் வரும். ஒரு வாரம் தான் இருக்கும். மேலும் எனக்கு சினிமா மேல் பெரிய அளவில் ஈடுபாடும் இல்லை.

அதைத்தாண்டி சினிமா பற்றிய எனக்கான புரிதல்னு சொன்னா நான் வேலைக்கு சேர்ந்த போது பூனே திரைப்பட நிறுவனத்தில் ஒரு சினிமா எப்படி தயாரிக்கப்படுகிறது, எடிட் செய்றது மற்றும் எவ்வாறு படமாக்கப்படுகிறது மற்றும் சினிமோட்டோகிராபி விதிகள் என இரண்டு மாசம் பயிற்சி தருவாங்க. நான் இந்த துறைக்கு மாற்றலாகி வந்த போது, இவ்வளவு நாள் தில்லியில் இருந்தேன். இப்ப சென்னையில் வேலை செய்யப் போறேன்னு தான் நினைச்சேன். ஆனா, இங்க அப்படி இல்லை.

இந்த துறையை பொறுத்தவரை எப்போதும் ஊடகத்தின் பார்வை நம் மீது இருந்து கொண்டே இருக்கும். தணிக்கை குழு என்றாலே பிரச்னைன்னு ஒரு கண்ணோட்டம் இருக்கு. அதை திறமையாக கையாளணும். ஒரு படத்திற்கு சான்றிதழ் தந்திருப்போம். படமும் தியேட்டரில் ரிலீசாகும். ஆனால் மக்கள் மற்றும் ஊடகத்தின் பார்வையில் படத்தை பற்றிய தவறான கருத்து வெளியாகும். அதனால் ஒவ்வொரு படத்தை நான் பார்க்கும் போதும் ரொம்பவே கவனமா இருப்பேன்.

டாப் ஸ்டார், பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் யாருடைய படமாக இருந்தாலும், படத்தில் பிரச்னைக்குரிய மற்றும் ஆபாசமான காட்சிகள், வசனங்கள் இருந்தால் அதை நீக்கிவிடுவோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு அரசியல் மற்றும் மதம் சார்ந்த விஷயங்களை சினிமாவில் வெளிப்படையாக காட்டும் போது அது கண்டிப்பா சமூகத்தில் சலசலப்பினை ஏற்படுத்தும். அதனால் மிகவும் கவனமாக தான் ஒவ்வொரு படத்திற்கும் சான்றிதழ் வழங்குவோம்’’ என்றவர் தணிக்கை குழுவின் செயல்பாட்டைப் பற்றி விவரித்தார்.

‘‘ஒரு அதிகாரியா இல்லாமல் சாதாரண குடிமக்கள் போல் தான் படம் பார்ப்பேன். படத்தை மட்டுமே பார்க்கக் கூடாது, ஹீரோ இன்ட்ரோ ஆகும் காட்சி... பாடல் காட்சி... சண்டைக்காட்சி... எந்தக் காட்சியாக இருந்தாலும், பின்னணியில் என்ன இருக்குன்னு பார்க்கணும். அரசியல் கட்சி மற்றும் மதம் சார்ந்த பேனர் உள்ளதா, நிறங்கள் என்ன மற்றும் யாரையும் கிண்டல் செய்வது குறிப்பிடுகிறதான்னு நுணுக்கமா பார்க்கணும்.

 ஒரு முறை தான் படம் பார்ப்போம். பார்க்கும் போதே நீக்கப்பட வேண்டிய காட்சிகள் மற்றும் வசனங்களை குறித்துக் கொள்வோம். என்னுடன் இரண்டு பெண்கள் மற்றும் ஆண்கள் இணைந்து பார்ப்பாங்க. இவர்கள் 25 பேர் கொண்ட குழுவினர். அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டவர்கள். இது சுழற்சி முறையில் நடைபெறும். இந்த குழுவினர் இரண்டு வருடம் இருப்பாங்க. அதன் பின் வேறு ஒரு புதிய குழுவினரை அமைச்சகம் நியமிக்கும். இவர்கள் எல்லாரும் பலதரப்பட்ட துறையை சார்ந்தவர்களாக இருப்பார்கள்.

பெண்களில் இல்லத்தரசிகள் கூட குழுவில் உண்டு. அவங்களுக்கு என்ன படம் பார்க்க போறாங்கன்னு சொல்ல மாட்டோம். படம் பார்க்கும் போது தான் தெரியும். காரணம் ஒரு படம் குறித்த செய்தி திரையிடப்படும் முன்பே வெளியாகிவிடக்கூடாது என்பதில் நான் ரொம்பவே ஸ்ட்ரிக்டா இருப்பேன். படத்தை பார்த்துவிட்டு எந்த காட்சியை நீக்கலாம் மாற்றம் செய்யலாம்ன்னு கலந்தாலோசிப்போம். ஒரு காட்சியை நீக்கும் போது அதற்கான முழுமையான காரணத்தை முன் வைக்க வேண்டும். அந்த காரணம் சரியாக இருந்தால் மட்டுமே நீக்கப்படும். அதன் பிறகு தான் சான்றிதழ் வழங்கப்படும்’’ என்றவரின் முடிவே கடைசி தீர்ப்பு இல்லையாம், தயாரிப்பாளர் மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாம்.

‘‘நான் ஒரு படம் பார்த்து ‘ஏ’ சான்றிதழ் கொடுத்து இருப்பேன். தயாரிப்பாளர்  யு/ஏ கேட்பார். ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் அவர் ரிவைசிங் குழுவிற்கு மறுமுறையீடு செய்யலாம். தமிழ்நாட்டுக்கென ஒரு குழு உறுப்பினர் இருப்பாங்க. இந்தியா முழுக்க இப்ப 12 பேர் இருக்காங்க. தமிழ்நாட்டுக்கு கவுதமி அவர்கள் தான் ரிவைசிங் குழு தலைவர். அவங்ககூட ஒன்பது பேர் கொண்ட குழு இந்த படத்தை ஃப்ரெஷ்ஷா பார்ப்பாங்க. அவங்களும் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தா அடுத்த உயர் குழுவிற்கு செல்லும். அது கிட்டத்தட்ட கோர்ட் மாதிரி. என்னுடைய கருத்து மற்றும் தயாரிப்பாளரின் கருத்து முன்வைக்கப்படும். அவங்க சொல்வது தான் கடைசி தீர்ப்பு.

யு சான்றிதழ் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். யு/ஏ 12 வயசுக்கு கீழ் உள்ள குழந்தைகள், பெற்றோர்களின் வழிகாட்டலில் பார்க்கலாம். ஏ என்றால் பெரியவர்கள் மட்டுமே பார்க்கலாம். அப்பறம் எஸ் இது ஸ்பெஷல் கேட்டகரி திரைப்படங்களுக்கு மட்டும். இந்த படங்கள் பொது பார்வையாளர்களுக்கு திரையிடப்படாது. சில சமயம் ஒரு படத்தை நாங்க திரையிடவே முடியாதுன்னு சான்றிதழ் வழங்கி இருப்போம்.

தயாரிப்பாளர் ரிவைசிங் குழுவிற்கு செல்வார். அவங்களும் மறுத்தால், இரண்டாவது ரிவைசிங் குழு, மும்பை ஐதராபாத் என வேறு பிராந்திய அதிகாரிகள் பார்ப்பாங்க. அங்கேயும் மறுக்கப்பட்டா, ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் வரைக்கூட போகலாம். அங்கேயும் நிராகரிக்கப்பட்டா அந்த படம் வெளியிடவே முடியாது’’ என்றவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது சில சட்டத்திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டுமாம்.

‘‘தொலைக்காட்சியை பொறுத்தவரை யு மற்றும் யு/ஏ சான்றிதழ் கொண்ட படங்களை நேரடியாக சாட்டிலைட் உரிமைகள் பெற்று வெளியிடலாம். ஏ சான்றிதழ் படங்களை யு/ஏவாக மாற்றி தான் வெளியிட முடியும். தியேட்டரில் திரைப்படம் மட்டுமில்ல விளம்பரம் மற்றும் செய்தி தொகுப்புகள் அனைத்தையும் நான் ஒப்புதல் அளித்தால் தான் வெளியிட முடியும். அதுவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது எங்களின் சான்றிதழ் பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் ஒப்புதல் அளிக்கும் ஒவ்வொரு படத்தை குறித்த அறிக்கையை தணிக்கை குழுவின் தலைவருக்கு அனுப்புவேன். பொதுவாக தணிக்கைகுழு தலைவர், அமைச்சகத்தால் நியமிக்கப்படுவார். தற்போது பிரசூன் ஜோஷி, பாடலாசிரியர் தலைவராக உள்ளார்’’ என்றவர் ஓ.டி.டி யில் வெளியாகும் படங்களை பற்றி கருத்து தெரிவித்தார்.

‘‘பொதுவாக சான்றிதழ் கொடுத்த படம் தியேட்டரில் ரிலீசான பிறகு நான் தியேட்டரில் பார்ப்பேன். காரணம் மக்களின் மனநிலை என்ன என்று தெரிந்து கொள்ள முடியும். அதே சமயம் நீக்கச் சொன்ன காட்சிகள் மற்றும் மாற்றங்கள் சரியாக உள்ளதான்னு கவனிப்பேன். காட்சி நீக்கப்படாமல் இருந்தால், தயாரிப்பாளரை அழைத்து விசாரிப்போம். சில சமயம் தவறுதலாக இருக்கும்.

ஆனால் அதுவே வலுக்கட்டாயமாக நீக்கப்படாமல் இருந்திருந்தால்... அந்த படத்தை நாங்க சொன்ன படி காட்சியை நீக்கி வெளியிடலாம் அல்லது அந்த படம் வெளியிடாமலே போகலாம். அதை அமைச்சகம் தான் முடிவு செய்யணும். சில படம் தணிக்கை சான்றிதழ் பெற்று ரிலீசாகிடும். மக்கள் மற்றும் ஊடகம் மூலமாக தவறான கருத்து வெளியாகும் போது, தயாரிப்பாளர் குறிப்பிட்ட காட்சியை மாற்றி அமைக்கவோ அல்லது நீக்க கோரிக்கை விடுப்பார். நீக்கப்பட்ட காட்சியினை மறுபடியும் பார்த்து தலைவரின் ஒப்புதலில் சில மாற்றங்களுடன் மீண்டும் திரையிடப்படும். காட்சியினை நீக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ முடியுமே தவிர படத்தினை டைட்டிலை மாற்ற முடியாது.

ஓ.டிடி பொறுத்தவரை அந்த துறை எங்களுக்கு கீழே வராது. நான் சான்றிதழ் கொடுத்த படங்கள் தான் அதில் ஒளிபரப்பாகணும்ன்னு என்றில்லை. ஆனால் இப்போது அதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அமைச்சகத்தில் ஆலோசித்து வருகிறார்கள்’’ என்றவர் இந்த மூன்று வருட காலத்தில் 1000த்தும் மேற்பட்ட படங்களை பார்த்து சான்றிதழ் வழங்கியுள்ளார்.

‘‘1980களில் வந்த படங்களில் இடம் பெற்ற காட்சிகள் வேறு... இப்ப வரும் காட்சிகள் முற்றிலும் மாறுபட்டு வருகிறது. காதல் காட்சிகளை இரண்டு மலர் இணைவது போல் சுட்டிக்காட்டி இருப்பாங்க. இப்போது வெளிப்படையாகவே முத்தக் காட்சிகளை காண்பிக்கிறார்கள். காரணம் சமூக மாற்றம். LGBT சமூகம், லிவ்விங் டு கெதர் லீகல்ன்னு சட்டம் இருக்கு.

நாமும் அதை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். அதை பிரதிபலிக்கும் காட்சிகளாக இருந்தால் ஏ அல்லது யு/ஏ சான்றிதழ் தருவோம். மக்களுக்கு எல்லாமே புரியும். அதே சமயம் மக்களுக்கு சென்சிடிவ்வா இருப்பதை காட்சியகப் படுத்தக்கூடாது என்பதில் ரொம்பவே உறுதியா இருக்கேன். நான் இந்த துறைக்கு வந்து மூணு வருஷமாச்சு. அடுத்த மாற்றத்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்’’ என்ற லீலா மீனாட்சி ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘ராட்சஷன்’ ரசித்து பார்த்த படங்களாம்.

செய்தி: ஷம்ரிதி

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

>