×

நிச்சயமாக புற்றுநோயை வெல்லலாம்!

நன்றி குங்குமம் டாக்டர்

‘புற்றுநோய் என்பது அச்சுறுத்தக் கூடிய வார்த்தைதான். ஆனாலும், உரிய முறையில் சிகிச்சை அளித்தால் புற்றுநோயையும் குணப்படுத்தலாம்’ என்கிறார் கதிரியக்க சிகிச்சை நிபுணரான அய்யப்பன். புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த புரிதல் நமக்கு அவசியம் என்பதற்காக சிகிச்சைகள் குறித்து தொடர்ந்து விளக்குகிறார்.

புற்றுநோய்க்கு முழுவதும் அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட பகுதியை நீக்குவதற்கு Surgical Oncology என்று பெயர். இது ஒரு சிறந்த முறை. Surgical Oncology முடியாத பட்சத்தில் மருந்துகள் கொடுத்து புற்றுசெல்களை அழிப்பதற்கு கீமோதெரபி (Chemotherapy) கொடுக்கலாம். மருந்து கொடுத்து புற்று செல்களை அழிப்பதற்கு பதிலாக நம் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்து அதன் மூலம் புற்று செல்களை அழிக்கலாம். இதற்கு Immunotherapy என்று பெயர். இந்த இரண்டு முறைகளும் Medical Oncology-ன் கீழ் வருகிறது. கதிர்வீச்சினைப் பயன்படுத்தி மேற்கொள்கிற Radiotherapy சிகிச்சைகளை கொடுக்கலாம்.

ஒரு நபருக்கு புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்து உரிய சிகிச்சையளித்து சரியான தீர்வு காண்பதற்கு புற்றுநோயின் பல துறைகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்களின் கூட்டு முயற்சி அவசியம். Medical oncologist, Surgical oncologist, Radiation oncologist, Radiologist, Pathologist ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்டால் நிச்சயமாக புற்றுநோயை வெல்லலாம். புற்றுநோய் இருக்கும் நபருக்கு பயாப்ஸி (Biopsy) அல்லது பிற பரிசோதனைகளின் மூலம் எந்த இடத்தில் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை Pathologist சொல்வார். இதில் எப்படி, எந்த இடத்தில், எந்த அளவு அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்பதையும், அறுவை சிகிச்சை முடியாத பட்சத்தில் கீமோதெரபி அல்லது ரேடியோதெரபி கொடுக்கவும் பரிந்துரை செய்வார் Surgical oncologist. அந்த நபருக்கு எந்த மாதிரியான மருந்துகளை எப்படி, எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பதை Medical oncologist சொல்வார்.

அந்த நபருக்கு எந்த கோணத்தில், எப்படி கதிர்வீச்சினை செலுத்தி சிகிச்சை அளிக்கலாம் என்பதை Radio oncologist சொல்வார். இப்படி இவர்கள் அனைவரும் இணைந்து சரியான முறையில் செயல்பட்டால் புற்றுநோயை நாம் வெல்லலாம். ஸ்கேன் செய்யும்போது தேவையான இடத்திலிருந்து பயாப்ஸி மூலமாக திசுக்களை எடுத்து பரிசோதனை செய்வார்கள். சில சமயம் அறுவை சிகிச்சை செய்ய முடியாதபோது ஸ்கேன் மூலம் பாதிக்கப்பட்ட திசுக்களைக் கண்டறிந்து அதை ஒரு ஊசி மூலம் சூடு வைத்து அப்படியே எரித்து விடுவதுண்டு (RF/Laser Ablation). இதை செய்பவர்கள் Interventional radiologist என்று அழைக்கப்படுகிறார்கள்.

மருத்துவர்கள் குழுவாக இணைந்து சிகிச்சையளித்த பிறகு, மருத்துவர் அறிவுரைப்படி தேவையானபோது பரிசோதனைகளும் தொடர் சிகிச்சைகளும் மேற்கொள்ள வேண்டும். அதாவது சிகிச்சைக்குப் பிறகும் புற்றுநோயாளிகள் மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் இருப்பது அவசியம். இதன் மூலம் ஓரிடத்தில் ஏற்பட்ட புற்றுநோய் மற்ற இடங்களுக்கும் பரவாமல் தடுக்கலாம். ஒவ்வொரு புற்றுநோயும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு சில புற்றுநோய்களை சில பரிசோதனைகளில் கண்டுபிடிக்க முடியாது. எனவே இதற்கு புற்றுநோயின் பல துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களின் கூட்டு செயல்பாடே  நல்ல பலனளிக்கும்.

பொதுவாக எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் போன்றவற்றில் கதிர்வீச்சு வெளியிலிருக்கும் இயந்திரங்கள் மூலம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. ஆனால், Nuclear medicine-களை சாப்பிட்ட பிறகு அது உடலுக்குள் சென்ற பிறகு, அந்த மருந்திலிருந்தே கதிர்வீச்சு வெளிப்படும் அல்லது அந்த மருந்துகளை ஊசியின் மூலம் ரத்தத்தில் செலுத்திய பிறகு உள்ளே சென்று கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இதற்கு தைராய்டு புற்றுநோய்க்குப் பயன்படுத்தும் Radioactive Iodine Therapy மற்றும் PET Scan (Positron emission tomography) போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம். இந்த முறைகளில் எவ்வளவு கதிர்வீச்சு வெளிப்படுகிறது என்பதை வெளியே ஒரு காமா கதிர்வீச்சு கேமரா வைத்து அதன் மூலம் கண்டறியப்படுகிறது. சி.டி ஸ்கேன் மூலம் படமெடுத்து அதை வைத்து புற்றுநோய் பாதிப்புள்ள குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கதிர்வீச்சினை செலுத்தி சிகிச்சை அளிக்கலாம். இதை Image-guided radio therapy (IGRT) என்று சொல்கிறோம்.

இதேபோல Rapid Arc, Intensity modulated radiation therapy (IMRT), Stereo tactic radio therapy, Brachy therapy போன்ற பல சிகிச்சைமுறைகள் உள்ளது. மருத்துவத் துறையில் தற்போது பாதுகாப்பாக கதிர்வீச்சினைப் பயன்படுத்தும் நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. இந்த கதிர்வீச்சு மருத்துவ முறைகளுக்கு அடிப்படையாக இருந்தது X கதிர்களின் கண்டுபிடிப்பு. X-ray, CT Scan, DEXA Scan, Mammograms போன்றவற்றில் X கதிர்வீச்சு வெளிப்படுகிறது. Proton beam therapy, Beta radiation என்று தனியான கதிர்வீச்சு சிகிச்சை முறைகளும் உள்ளது. X-rays, Gamma rays போன்றவற்றின் கதிர்வீச்சு தூரம் அதிகம். இவை சிறிய தடுப்பு வைத்தால் அதைத் தாண்டி சென்றுவிடும். புரோட்டான், எலக்ட்ரான் போன்றவற்றின் கதிர்வீச்சு செல்கிற தூரம் குறைவு. இதை பயன்படுத்துவதன் மூலம் புற்றுசெல்களைச் சுற்றியுள்ள மற்ற சாதாரண செல்களில் பாதிப்பு ஏற்படுவதைக் குறைக்கலாம்.

தொகுப்பு: க.கதிரவன்

Tags :
× RELATED கால்நடை மருத்துவ படிப்பில் சேர இதுவரை 12,889 பேர் விண்ணப்பம்