வீட்டிலேயே மழலையர் பள்ளி...

மழலையர் பள்ளி மூன்று முதல் ஆறு வயதில் இருந்து துவங்கும். குழந்தைகளுக்கு பள்ளி பற்றிய முதல் அத்தியாயம் இங்கிருந்து தான் துவங்கும். அடிப்படை பாடங்களை சொல்லித் தருவது மட்டுமில்லாமல், ஒழுக்க முறைகள், கவனிக்கும் திறன் மற்றும் உடன் படிக்கும் சக மாணவர்களுடன் எவ்வாறு தோழமையோட பழக வேண்டும் போன்ற பல விஷயங்களை இவர்கள் கற்றுக் கொள்வார்கள். கடந்த வருடம் முழுதும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாத நிலையில் வீட்டில் இருந்தபடியே பெற்றோர்கள் எளிய முறையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.

பாடங்களை வடிவமையுங்கள்

இவர்களுக்கு என குறிப்பிட்ட பாடங்கள் கிடையாது. அதனால் நீங்களே அவர்களுக்கான பாடங்களை வடிவமிக்கலாம். இதன் மூலம் உங்க குழந்தைகள் ஒவ்வொன்றையும் முறையாக கற்றுக் கொள்ள உதவும். நீங்கள் எந்த பாடத்திட்டத்தில் உங்க குழந்தைகயை சேர்க்க விரும்புகிறீர்கள் என்று திட்டமிட்ட பிறகு அதற்கேற்ப இவர்களின் பாடங்களை வடிவமைக்கலாம். நம்முடைய முக்கிய நோக்கம் அடிப்படை பாடங்களை எவ்வாறு எழுத படிக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு புரிய வைப்பது தான்.

அடிப்படையில் இருந்து ஆரம்பியுங்கள்

முதலில் ஆங்கில எழுத்துக்கள் மற்றும் ஒன்று முதல் நூறு வரை உள்ள எண்களை ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுங்கள். அதன் பிறகு அதனை எவ்வாறு எழுத வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள். அடுத்து வட்டம், முக்கோணம், சதுரம் போன்ற வடிவங்கள். இரண்டு எழுத்துக்கள் it, an, am... கொண்ட ஆங்கில வார்த்தையை உச்சரிக்க சொல்லிக் கொடுங்கள். இவை அனைத்தும் செயல்வழி முறையில் கற்றுக் கொடுக்கும் போது அவர்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள். இதற்கான ரைம்ஸ், சார்ட்கள் என பல உள்ளன.

ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானவர்கள். சில குழந்தைகள் ஒரு முறை சொல்லிக் கொடுத்தாலே புரிந்து கொள்வார்கள். சில குழந்தைகள் கொஞ்சம் மெதுவாக தான் புரிந்துகொள்வார்கள். எழுத்து வடிவமாக சொல்லித்தருவதை விட செயல்திறன் மூலம் கற்றுக் கொடுக்கும் போது, அவர்களுக்கு எளிதாக புரியும். இணையத்தில் இது குறித்து பல வீடியோக்கள் உள்ளன. அதை பார்த்தும் உங்கள் குழந்தைக்கு பயிற்சி அளிக்கலாம்.

ஒரு அட்டவணையை பின்பற்றுங்கள்

பள்ளியில் அரை மணி நேரத்திற்கு ஒரு பாடம் என்று குறிப்பிட்ட அட்டவணையை பின்பற்றுவார்கள். அதே போல் நீங்களும் வீட்டில் சொல்லித் தரும் போது, பின்பற்றுவதை வழக்கமாக கொள்ளுங்கள். காலையில் அவர்களின் கிரகிக்கும் திறன் நன்றாக இருக்கும் என்பதால் இரண்டு மணி நேரம் அவர்களை எவ்வாறு ஈடுபடுத்தலாம் என்று திட்டமிடுங்கள். ஒவ்வொரு பாடத்திற்கு பிறகு 20 நிமிடம் இடைவேளை கொடுங்கள். அதே போல் மாலையில் கலரிங் செய்வது, சின்ன சின்ன கிராப்ட் ேவலைகளை செய்வது, வீட்டிற்குள்ளே அமர்ந்து விளையாடுவது போன்றவற்றில் அவர்களை ஈடுபடுத்துங்கள். இதன் மூலம் படிப்பு மட்டுமே இல்லாமல் மற்ற விஷயங்களையும் அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

>