×

Medical Trends

நன்றி குங்குமம் டாக்டர்

தனிமையைத் தவிருங்கள்!

ஒருவரின் ஆயுளைக் குறைப்பதில் புகைப்பழக்கம், உடல்பருமனுக்கு ஈடாக தனிமையும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிகரித்து வரும் தனிமை தனிமனிதருக்கு மட்டும் சவாலாக இல்லை. அரசாங்கத்திற்கும் பொது மருத்துவ அச்சுறுத்தலாக மாறிவருகின்றது என்று கவலை தெரிவிக்கிறார்கள் உளவியலாளர்கள். குறிப்பாக, முதியோர்களின் தனிமையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறார்கள். எனவே, தனிமையை தவிர்த்து மற்றவரோடு இணைந்திருங்கள் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

கவலைப்பட்டால் முடி நரைக்கும்

கவலைப்படும் மனிதருக்கு சீக்கிரமே முடி நரைத்துவிடும் என்று பழங்காலத்தில் இருந்தே நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கையில் இருக்கும் உண்மையை இப்போது நிரூபித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். எலிகளில் மன அழுத்தம் நிறைந்த நிகழ்வுகள் கூந்தலில் நிறமியை உற்பத்தி செய்வதற்கு காரணமான ஸ்டெம் செல்களை சேதப்படுத்துவதை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது.

மனநலனை பாதிக்கும் காற்று மாசு

காற்று மாசு உடல்நலத்தை எந்த அளவில் பாதிக்கும் என்பது நாம் அறிந்ததுதான். இந்த காற்று மாசு மனநலனையும் பாதிக்கிறது என்கிறது வால்ட்ர்ஸ் க்ளூவரால் என்பவர் லிப்பின்காட் போர்ட்போலியோ பத்திரிகையில் அளித்த ஆய்வறிக்கை. காற்று மாசு சராசரியாக PM2.5 டீவியேஷனுக்கு மேல் அதிகரிக்கும் 1 புள்ளி கூட 6.67 சதவீத மனநோய் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது என்று எச்சரிக்கிறார் வால்ட்ர்ஸ்.

நாற்பது வயதில் நாய்க்குணம் ஏன்?

நமது வாழ்க்கையின் நடுப்பகுதியில் ஏற்படும் நெருக்கடிகள் குறித்த கோட்பாடுகள் உண்மையானது என்றும் இது 47 வயதுக்கு உட்பட்ட நபர்களைத் தாக்கும் என்றும் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார் David Blanchflower என்கிற ஆராய்ச்சியாளர். அதில் வாழ்வின் நெருக்கடிகள் அதிகமாகும் அதிகபட்ச வயது 47 என்றும் அவர் கண்டறிந்துள்ளார்.

பன்றிக்காய்ச்சல் அலர்ட்

தமிழகத்தில் ஒரே மாதத்தில் பன்றிக்காய்ச்சலால் 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்களாகிய நாமும் சுகாதார ரீதியாக நம் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வோம்!

108 ஆம்புலன்ஸில் புதிய வசதி

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிய தொழில்நுட்ப வசதிகளை கட்டமைத்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கின்றன என்பதை செல்லிடப்பேசி செயலி மூலமாக மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலான வசதிகள் செய்யப்பட உள்ளன. அதேபோன்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்றடைவதற்கு வழி ஏற்படுத்தும் வகையில் சாலைப் போக்குவரத்தையும், சிக்னல்களையும் ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள் வாழ...

கோபம் தவிர்த்து புன்னகையோடு இருந்தால் நீண்ட ஆயுளுடன் இருக்கலாம் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள உலகின் அதிக வயதான ஆண் கிதேச்சு வதனாபே அறிவுரை வழங்கியுள்ளார். ஜப்பானின் நிகாட்டா பகுதியில் வசிக்கும் கிதேச்சு வதனாபே என்பவர், உலகின் அதிக வயதான ஆண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கடந்த 1907-ம் ஆண்டு பிறந்து, 112 ஆண்டுகள், 344 நாட்களாக நலமுடன் வாழ்ந்து வரும் அவர், கோபம் அடைய வேண்டாம், புன்னகையுடன் இருங்கள் என்று அறிவுரையை எல்லோருக்கும்
வழங்கியிருக்கிறார்.

இதயத்தைப் பாதுகாக்க...


கிட்னி பீன்ஸில் அதிகளவு உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவுகிறது. இதய நோய்களுக்கான ஆபத்துக்களை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் புற்றுநோய்க்குரிய ஆபத்துக்களை தடுக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் தாதுச்சத்துக்கள் எலும்புகளின் வலுவிற்கு உதவுகிறது.

தங்கம் விலையிலும் எதிரொலித்த கொரோனா

வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை, சவரன் 31 ஆயிரத்து, 720 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு, ‘கொரோனா’ வைரஸ் காரணம் என கூறப்படுகிறது. அமெரிக்கா, ஈரான் இடையில் நிலவிய போர் பதற்றத்தால், 2020-ம் ஆண்டு துவங்கியதில் இருந்து, சர்வதேச அளவில், தங்கம் விலை அதிகரித்தது. சமீபத்தில் ஒரே நாளில், தங்கம் கிராமுக்கு, 39 ரூபாய் உயர்ந்து, 3,965 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பல நாடுகள், ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் ஈடுபடவில்லை. கப்பல்களில் அனுப்பப்பட்ட சரக்குகள் நடுக்கடலில் உள்ளன. இந்த பாதிப்பால் சர்வதேச முதலீட்டாளர்கள், தொழில்துறைகளில் முதலீடு செய்யாமல், தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று காரணமும் சொல்கிறார்கள்.

தொகுப்பு: குங்குமம் டாக்டர் டீம்

Tags :
× RELATED காரிமங்கலம், பாலக்கோட்டில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தல்