ஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது

அழகுப் பெட்டகம் 10

மருக்கள்

நமது சருமத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவ்வளவுதான். அது தன்னம்பிக்கையினையே குறைத்துவிடும். இந்த வாரம் சருமத்தில் தோன்றும் மருக்களை சரி செய்வது குறித்து விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஹேமலதா. HPV (Human Papilloma Virus) மூலமே நமது உடலில் மரு தோன்றுகிறது. சுருக்கமாக தோலில் சேரும் அழுக்கின் அதிகப்படியான வளர்ச்சியே மரு. மரு உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம். சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழ், முதுகு போன்ற பகுதிகளில் பரவி காணப்படும். சிலவகை மருக்கள் பார்ப்பதற்கு மச்சத்தைப் போல் தோன்றலாம். ஆனால் அவற்றால் எந்த ஒரு பிரச்சனையும் நமக்கு இருக்காது. ஆனால் சிலவகை மருக்கள் இளம் வயதினரின் அழகைக் கெடுப்பது போல் தோற்றமளிக்கும்.

மரு தோன்றுவதற்கான காரணங்கள்?

நமது தோலிற்கு எந்தவித பாதுகாப்பும் செய்யாமல் வெளியில் செல்லும்போது, தோலிற்கு ஏற்படும் பாதிப்புகள், தோலின் இரண்டு அடுக்கு லேயர்களுக்குள் நுழைந்து அங்கே நிரந்தரமாகச் சேருவதன் மூலமாகவும் மரு உருவாகுகிறது. உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாமை. தோலைத் தேய்த்துக் குளிக்காமல் இருத்தல் போன்றவையும் வேறு சில காரணங்கள். கழுத்தில் அழுத்தமான ஆபரணங்களை அணிபவர்களுக்கும், அதன் அழுத்தத்தால் தோல் பாதிப்படைந்து, கழுத்தில் தளும்புகள் உண்டாகி, அதன் வழியே அழுக்குகள் நுழைந்து, கொலோஜன் மற்றும் ரத்த நாளங்களில் கலந்து, கழுத்துப் பகுதியில் மரு தோன்றும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், தோலில் எண்ணெய்த் தன்மை அதிகம் உள்ளவர்களுக்கும் மரு வரலாம். பெற்றோர்கள் அல்லது குடும்பத்தில் யாருக்காவது மரு இருந்தால் குழந்தைகளுக்கு மரு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மருவில் இருந்து கசியும் நீரானது அதன் அருகே உள்ள இடங்களில் படும்போது நீர் கசிவு படுகிற இடங்களில் எல்லாம் பரவத் தொடங்குகிறது. மரு ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் தன்மை கொண்டது. எனவே மரு இருப்பவர்களின் டவல், சோப்பு, உடை போன்றவைகளைப் பயன்படுத்துதல் கூடாது.

சிலரது உடலில் தோன்றும் மருக்கள் ரத்தக் கசிவுடன், வலி, அரிப்பு, பரவுதல் போன்ற தன்மை உடையதாக இருக்கும். எனவே மருவை எந்தவித பாதுகாப்பும் இன்றி நாமாக நீக்க முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் மரு இருந்த இடத்திற்கு அருகிலேயே நூற்றுக் கணக்கில் பரவத் தொடங்கும். சிலர் தலை முடியினை மருவில் கட்டி வைத்தல், அல்லது பிளேடால் நறுக்கி எடுத்தல் போன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவர். இவை தவறான செயல். மரு உள்ளவர் சர்க்கரை நோயாளியாக இருந்தால் மிகப் பெரிய காயமாக மாறி, உடல் உபாதைகளை ஏற்படுத்துவதோடு, உயிரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் இதில் உண்டு.

மருவினை கூர்ந்து நோக்கினால் காளிப்ளவர் பூவைப் போன்ற வடிவில், அதன் மேல் கண்ணிற்குத் தெரியாத ரோமங்கள் படர்ந்திருக்கும். இதில் நான்கு பிரிவுகள் உள்ளது.

* சாதாரண வடிவில் வரும் மரு.

* படர்ந்து பரவும் மரு.

* கருப்பு நிறத்தில் பெரிதாக துருத்திக் கொண்டிருக்கும் மரு.

மருவின் ஆயுட் காலம் ஒரு வாரத்தில் துவங்கி ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாம். மரு உள்ள இடத்தில் ரத்த ஓட்டம் தடை பட்டால் அந்த மரு வலி தராது. ரத்த ஓட்டம் இருப்பின் அந்த மரு வலியினைத் தரத் துவங்கும். சிலவகை மருக்களை நாமே வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு நீக்க முடியும். ஆனால் எல்லா வகை மருக்களையும் அப்படிச் செய்ய இயலாது.

சிலவகை படர்ந்த மருக்கள் அல்லது ஆழமாக வேரோடிய மருக்கள், மிகப் பெரிய வடிவில் உள்ள மருக்களை, மருத்துவர்கள் அல்லது அதற்கென பயிற்சி பெற்ற அழகுக்கலை நிபுணர்களை அணுகி அவர்களின் அறிவுரையின் பேரில் நீக்கலாம். இவர்கள் மருவிற்கென உள்ள அல்ட்ராசோனிக் மெஷின் வழியாக, மின் அதிர்வினை ஊசி முனையில் மருவின் மேல் கொடுத்து சருமத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நீக்குவர்.

உதிரும் தன்மை கொண்ட, சிறிய வடிவ மருக்களை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சரி செய்யும் முறை..

* அம்மான் பச்சரிசி இலையில் வரும் பாலை காலை மாலை இரண்டு வேளையும், மருவின் மேல் வைப்பதன் மூலம், மரு காய்ந்து தானாகவே விழுந்துவிடும்.

* வெள்ளைப் பூண்டில் உள்ள என்சைம் மருவை அழிக்கும் வல்லமை உடையது. எனவே பூண்டை தோல் நீக்கி பேஸ்டாக்கி மருவில் தினமும் தட வேண்டும்.

வெங்காயத்தையும் பேஸ்டாக்கி தடவலாம்.

* உருளைக் கிழங்கை பேஸ்ட் செய்து மருவில் தடவுதல் மூலமும், பெருங்காயத் தூளையும் மருவின் மேல் தடவுவதன் மூலமும் மருக்கள் நீங்க வாய்ப்புண்டு.

* கற்பூர எண்ணெய், ஆப்பிள் சிடர் வினிகர் இவற்றில் ஏதாவது ஒன்றை பஞ்சில் நனைத்து மருவின் மேல் காலை மாலை இரண்டு வேளையும் வைக்க வேண்டும்.

* விட்டமின் இ டாப்லெட், ஆலுவேரா ஜெல், டீ ட்ரீ ஆயில் இவைகளும் மருவை உதிரச் செய்யும் தன்மை கொண்டது.

மேற்குறிப்பிட்ட வழி முறைகளில் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலமாக சிலவகை மருக்கள் அதன் தன்மையினைப் பொருத்து குறிப்பிட்டகால இடைவெளியில் உதிரத் துவங்கும்.

அடுத்த வாரம்…

* கண்களுக்குக் கீழ் தோன்றும் கரு வளையம்.

* உதட்டிற்கு கீழ் தோன்றும் கருமை நிறம்.

* உடலின் மறைவான பகுதிகளில் ஏற்படும் கருமை நிறத்தை சரி செய்யும் முறை.

(ஒப்பனைகள் தொடரும்…)

>