கற்பித்தல் என்னும் கலை

நன்றி குங்குமம் தோழி

கற்பிப்பவர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு என்பது, மிகவும் ஆழமானது. சமயங்களில் அவர்களின் விருப்பு, வெறுப்பு பற்றி ஆசிரியர்களுக்கு நிறையவே தெரிந்திருக்கலாம். நன்கு படிக்கிறானா, நல்ல மதிப்பெண் எடுக்கிறானா போன்ற விஷயங்கள் பெற்றோருக்குத் தெரியும். அவனுக்கு எந்தப்பாடம் மிகவும் விருப்பம், எதில் அக்கறை காட்டுகிறான் போன்ற விஷயங்கள் வகுப்பறையில் நடைபெறும் நிகழ்வுகள் மூலம் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். சிறிய வகுப்புகளில் பெரும்பாலும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் ஒரே ஆசிரியர்கூட இருக்கலாம். அதன்மூலம் பிள்ளைகளுடன் மிக அதிகமான நெருக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.

 வளர்ந்து பெரிய வகுப்புகளுக்குச் செல்ல, செல்ல பாடப்பிரிவுகளுக்கு ஏற்றவாறு தனித்தனி ஆசிரியர்கள் கற்பிக்க வருவார்கள். அப்பொழுதுதான் அவர்களுக்கு ஒவ்வொரு பாடப்பிரிவின் முக்கியத்துவம் தெரிய வரும். கற்பிப்பவரை மிகவும் பிள்ளைகளுக்குப் பிடித்துவிட்டால், அந்த குறிப்பிட்ட பாடத்தில் அவர்கள் கவனம் அதிகம் செலுத்தப்படும். அவர்கள் அனைவரும் குருவை விரும்ப வேண்டுமானால், கற்பிப்பவர் தன் பக்கம் காணப்படும் திறமைகள் மூலம் பிள்ளைகள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.

எப்பொழுதும் கோபமாக பேசிக்கொண்டிருந்தால், பலருக்கும் பிடிக்காத வகையில் அமைந்துவிடும். கற்பிப்பவரின் நடை, உடை, பாவனை வைத்தே பிள்ளைகள், தங்கள் மனதில் ஆசிரியர்பால் மதிப்பும், மரியாதையும் காட்ட ஆரம்பித்து விடுவார்கள். நம்முடைய தகுதிக்கு சரியாக பிள்ளைகளிடம் எதிர்பார்க்கக் கூடாது.

பொதுவாக, நாம் வேலை பார்க்கும் இடங்களில், நமக்குச் சரியாக-இணையாக இருப்பவர்களுடன் பழகும் வாய்ப்புதான் அதிகம். வயது வித்தியாசம் வேண்டுமானால் காணப்படலாம். தகுதிகள் ஓரளவு சம அளவில் இருக்கும்.

ஆனால் ‘கற்பித்தல்’ என்னும் சேவையில் நாம் பெற்றோராக இருந்து, எதிர்கால இளைஞர்களை உருவாக்கச் செய்கிறோம். அடித்தளம் நன்கு அமைந்த ‘கட்டடம்’தான் பல ஆண்டுகள் ஆனாலும், உறுதியுடன் காணப்படும். அதேதான் இத்தகைய சேவைத் தொழிலிலும். இளமையில் எப்படி வளர்க்கப்படுகிறார்களோ, அதைப்பொறுத்துத்தான் அவர்களின் எதிர்காலம் அமைகிறது. மேலும், இது மனநிலை நோகாதவாறு, புரிந்து செயல்படக்கூடிய சேவையுமாகும். உதாரணத்திற்கு, ஒரு மாணவன் கணிதத்தை, ஆசிரியர் சொல்லாத வேறு முறையில் கணக்கிட்டிருந்தான். விடை என்னவோ மிகவும் சரிதான்.

அவனும் புரிந்துதான் செய்திருந்தான். அவன் வீட்டில் படித்தவர் யாரோ வேறு முறையில் கற்றுத் தந்திருக்கிறார்கள். அது அவனுக்கு சுலபமாகப் பட்டதால், செய்திருக்கிறான். அதற்காக, தன் முறையை பின்பற்றவில்லையென்று, அவனைக் கோபிக்கத் தேவையில்லை; சரியான முறையை மட்டும் அவன் புரிந்துகொள்ளும்படி விளக்கினால் போதும். செய்யும் முறை சரியான விதத்தில் இருந்தால் போதும். ஒவ்வொன்றிலும், அணுகுமுறைதான் முக்கியம். யாருக்கும் மனது பாதிக்கக்கூடாது.

மிகவும் சுறுசுறுப்பான ஒரு மாணவன். யார் படித்தாலும் அவன் எளிதாக புரிந்துகொண்டு விடுவான். அவனுடன் விசேஷ வகுப்பில் பயின்ற வேறு வகுப்பு பிள்ளைகளும் இருந்தனர். அனைத்தையும் மளமளவென முடித்துவிட்டு, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தான். ஆசிரியை ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார். பின்னர் சில கேள்விகள் கேட்டார். அவன் பதிலளிக்கவில்லை. மேலே குறிப்பிட்ட சிறுவன் ஆறாம் வகுப்புதான். அவன் ஒன்பதாம் வகுப்பு மாணவனிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னான்.

 ஒரு நிமிடம் அனைவருமே ஆச்சரியப்பட்டோம். பிறருக்கு சொல்லித்தரும்பொழுது அவன் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது என்றால், அவன் எவ்வளவு திறமை பெற்றிருப்பான் என்று யோசிக்க வேண்டியுள்ளது. அதேசமயம் ‘வாய்ப்பாடுகள் படி’ என்றால் அதில் அவன் மனம் லயிக்காது. தப்புத்தப்பாகச் சொல்லுவான். சிறுவயதில் படிக்கும் பெருக்கல் வாய்ப்பாடுகள் நன்கு தெரிந்தால்தான், பெரிய வகுப்பில் கணக்குகள் நன்கு செய்ய முடியும் என்று நிறைய வலியுறுத்தியும், அவன் கண்டுகொள்ளவில்லை.

இவ்வளவு புத்திசாலியாக இருந்தும், ஏன் அதைப்படிக்க மறுக்கிறான் என்று யோசிக்க ஆரம்பித்தோம். ஒருசில நாட்களிலேயே அவன் அதை வெறுக்கும் காரணம் தெரிய ஆரம்பித்தது. அவன் அனைத்தையும் விளையாட்டுப் போக்கில் செய்யவே விரும்பினான். மனம் வைத்து படிப்பதிலோ, எழுதுவதிலோ கவனம் வைக்கவில்லை. கொஞ்சமும் சிரமப்படாமல் எதையும் செய்ய நினைக்கிறான் என்பது புரிந்தது. ரொம்பவும் விளையாட்டுப்புத்தி. பல வருடங்கள் கழித்துப் பிறந்த பிள்ளை என்பதால், வீட்டில் அனைவருக்கும் செல்லம்.

பாடங்களை தன் காதால் கேட்ட மாத்திரத்தில் புரிந்துகொள்ளும் புத்திசாலித்தனம் நிறைய இருந்தது. அதை ஞாபகத்திலும் எளிதாக வைத்துக்கொண்டு வெகு சீக்கிரத்தில் விடைகள் தந்து முடித்து விடுவான். ‘கணக்கு’ பாடத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதால், அவன் மனம் விரும்பவில்லை. மற்றபடி அவன் நினைத்தால், அதையும் சாதிக்க முடியும். ஆனால் இதெல்லாம் சிறுவயதில்தான், இந்த விளையாட்டுத்தனம் என்பது. எப்பொழுது அவன் திறமை தெரிந்துவிட்டதோ, அவனைப்பற்றிய கவலை வேண்டாம் என்று முடிவுக்கு வந்தோம். அவன் வளர வளர மனம் வைத்து செய்ய ஆரம்பித்து விட்டால் அனைத்தும் சாத்தியம்.

இதற்கு மாறாக, சில பிள்ளைகளைப் பார்த்தால் கணக்கு அற்புதமாகச் செய்வார்கள். குறிப்பிட்ட நேரத்தில் மனம் லயித்து, தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் உற்சாகமாகக் காணப்படுவார்கள். இதர பாடங்கள், நிறைய படிக்க வேண்டு மென்பதால் அவர்கள் அதை பாரமாகக்கூட நினைக்கக் கூடும். கணக்கில், செய்முறை தெரிந்துவிட்டால் சொந்தமாக ஆசையுடன் பயிற்சி செய்வார்கள். இவர்களுக்கும் கணக்கில் விருப்பம் இருப்பதால், அனைத்துப் பாடங்களையும் நல்லமுறையில் படிக்கும் ஆற்றலும், திறனும் அவசியம் இருக்கும்.

அவர்கள் மனதை கற்பிப்பவர் புரிந்துகொண்டால் போதும். காலம் அனைத்தையும் உணர்த்தி விடும். சில சமயங்களில், சில பிள்ளைகளின் திறமை வெளிப்பட, சில காலங்கள்கூட ஆகலாம். பெற்றோரும் அதைப்புரிந்துகொண்டால் போதும். பிறருடன் ஒப்பிடாமல், நேரம் வரும்பொழுது, சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம், உற்சாகப்படுத்தியும், ஆர்வத்தை வளர்த்தாலும் போதும். கையில் விரல்களே வெவ்வேறு உருவங்களில் இருக்கும்பொழுது, பிள்ளைகள் அனைவரும் எப்படி ஒன்றுபோல் இருப்பர்?

எனக்குத்தெரிந்த ஒரு குடும்பத்தில், பெண் பெரியவள்-பையன் இரண்டு வயது சிறியவன். அந்தப் பெண் ‘துறுதுறு’வென்று அனைத்திலும் சுட்டியாகத் திகழ்ந்தாள். சிறு வயதிலிருந்து அனைத்துப் போட்டிகளிலும் பங்கெடுத்து முதல் பரிசை பெற்றுக்கொண்டு வெற்றியுடன் திரும்புவாள். பையன் மிகவும் பாவம். சாது. எந்த வம்புக்கும் போக மாட்டான். சிறிது யாரேனும் மிரட்டினால்கூட பயந்து ஓடுவான். படிப்பிலும் சுமார்தான். அப்பா எப்பொழுதும் இரு பிள்ளைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து அங்கலாய்ப்பார். ‘‘என் பெண்ணைப்பார் அனைத்திலும் ஜெயிக்கிறாள். வகுப்பிலும் முதல் மதிப்பெண்தான். நீயோ, ஆண்பிள்ளை இப்படி மந்தமாக இருக்கிறாயே! என்னதான் சாதிக்கப் போறீயோ? எண்பது மதிப்பெண்கூட உன்னால் எடுக்க முடியவில்லையே!’’ என்பார்.

முதலில் ஒப்பிட்டுப்பார்ப்பதே நல்லதல்ல; அதிலும் பத்துப் பன்னிரெண்டு வயது என்பது பருவமடையா மனப்பக்குவம்தான். அப்பா தன்னை மட்டமாகப் பேசுகிறார் என்பது மட்டுமே புரியும். மேலும் நினைத்து மனதிற்குள் ஏங்கத் தெரியும். ஆனால் யார் செய்த மாயமோ, இல்லை கடவுள் அருளோ, நல்ல காலம்தான் அவனுக்குத் தொடங்கியதோ தெரியவில்லை. புத்தருக்கு ‘ஞானம்’ வந்ததுபோல ஏழாம் வகுப்பு வந்தது முதல் அவன் வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ ஆரம்பித்தான். அனைத்திலும் நூற்றுக்கு நூறு. ஒரு கணக்கை ஆசிரியர் நடத்தி முடிப்பதற்குள், அடுத்த கணக்கை போட்டு முடித்து, சரியான விடையைச் சொல்லி முடித்தானாம்.

அவனைப்பற்றி ஆசிரியர் ரொம்பப் பெருமை பேசுவதாகவும் கேள்விப்பட்டோம். வகுப்புத்தலைவனாக்கி, பல பொறுப்புக்களும் அவனுக்குத் தரப்பட்டன. ஒவ்வொரு வகுப்பிலும் மிகச்சிறந்த மாணவருக்கான ‘விருது’ம் கிடைத்துக் கொண்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, பதினோராம் வகுப்பில் பள்ளி முதல் மதிப்பெண் எடுத்து அனைவரையும் அசத்தினான். அப்பொழுதெல் லாம் பத்தாம் வகுப்புக்கு அரசுத்தேர்வு கிடையாது. பதினொன்றாம் வகுப்புதான் பள்ளி இறுதியாண்டாக இருந்தது.

பெண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்த அப்பாவின் மனநிலை அப்பொழுது எவ்வளவு சங்கடப்பட்டிருக்கும்? மேலும் அவர் எதிர்பார்த்தபடி பெண் அவ்வளவாக சாதிக்க முடியவில்லை. எட்டு, ஒன்பதாம் வகுப்பு என்று செல்லச் செல்ல அவள் அதிகமாக வீட்டு வேலைகளில் தலைகாட்ட ஆரம்பித்தாள். வீட்டுப் பராமரிப்பு, தோட்டம் வளர்த்தல் போன்றவற்றில் அவளுக்கு நாட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. நன்கு படித்தாள். ஆனால் தம்பியை ஜெயிக்க முடியவில்லை. அப்பாவின் எதிர்பார்ப்பு மாறியது.

இதுதான் நிறைய இடங்களில் நடைபெறும் யதார்த்தம் என்பது. அப்பாவுக்கு வாழ்க்கையின் யதார்த்தம் நன்றாகத் தெரிந்தது. ஆனாலும் எந்த வெளிப்படையான கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ள அவர் விரும்பவில்லை. அதனால் இரு பிள்ளைகளையும் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்திக்கொண்டேயிருந்தார். இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் தந்தை தன்னை அக்காவுடன் ஒப்பிட்டுப் பேசியதால் பையன் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. காரணம் அந்தச் சிறுவயதில் அத்தகைய மனோபாவம் அவனுக்குப் புரியவில்லை.

இதே அவன் வாலிப வயதில் ஏற்பட்டிருந்தால், அவன் வேறு மனஅழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பான். தந்தையின் நல்ல நேரமும், அவரை விளையாட்டுத்தனம் போலவே பேச வைத்தது. ஆனாலும் அவரின் உள்மனம், தான் மகளுடன் மகனை ஒப்பிட்டது தவறு என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தது. பிராயச்சித்தமாக, இருவரிடமும் அதிகமான பரிவைக் காட்ட ஆரம்பித்தார்.

எனவேதான் சிறுவயதில், அவர்களின் கல்வித்தரத்தை வைத்து எடை போடக்கூடாது. நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கும் பிள்ளைகள் தொழிற்கல்வியில், பல பேப்பர்களை முடிக்க முடியாமல் திணறுவதுண்டு. பள்ளி வரை விளையாட்டுத்தனமாக இருந்த எத்தனையோ பிள்ளைகள் இன்று சாதனைகளைப் படைத்து, தலைவர்கள் பட்டியலில் இடம் பிடிப்பதுமுண்டு.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

Related Stories: