நீ எங்க ஊரு ராஜா பொண்ணு!

நன்றி குங்குமம் தோழி

நடிகை லதா ஓப்பன் டாக்

‘‘குழந்தையில் நான் இராமநாதபுரம் சென்றால் என்னை சின்ன ராணி சின்ன ராணி  என்றே அழைப்பார்கள்’’ எனப் பேசத் தொடங்கிய நடிகை லதா, இராமநாதபுரம் ராஜா ‘சண்முக ராஜேஸ்வர சேதுபதி’யின் மகள்.  சுதந்திரத்திற்குப்பின் சுதேச சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்ட நிலையில், இவரின் அப்பா, காங்கிரஸ் ஆட்சியில் ராஜாஜி மற்றும் காமராஜர் அமைச்சரவைகளில் பி.டபிள்யூ.டி அமைச்சராக இருந்தவர். இராமநாதபுரத்தில் பிறந்து சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்த ராணி வேலுநாச்சியாரின் வாரிசு வழித் தோன்றலே நடிகை லதா.

உங்கள் ராஜ பரம்பரை குறித்துச் சொல்லுங்கள்?

என் பூர்வீகம் இராமநாதபுரம். என்னோட உண்மையான பெயர் நளினி சேதுபதி. அப்பா இருக்கும்போது சின்ன வயதில் ராமநாதபுரம் அரண்மனைக்குள் சென்றிருக்கிறேன். அங்கு ஒரு கோயில் இருந்தது. சாமி கும்பிடுவதற்காக அங்கு செல்வோம். அப்பாவுடன் பிறந்த அத்தை ஒருவர் அங்குதான் இருந்து, சமீபத்தில் இறந்து விட்டார். அவரின் மகள் இப்போதும் அங்கு இருக்கிறார். இராமநாதபுரம்  அரண்மனை பராமரிப்பின்றி இப்போது சிதிலமடைந்துவிட்டது. திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான என் தம்பி ராஜ்குமார் சேதுபதிதான் அங்கிருக்கும் எங்கள் அம்மன் கோயிலை சமீபத்தில் புதுப்பித்துக் கட்டினார்.

ஆனால் நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். தியாகராயநகர் ஹோலி ஏஞ்சல் பள்ளியில்தான் படித்தேன். அப்பாவுக்கு தவில் வாசிப்பது, பாடுவது என கலை சார்ந்த விசயங்களில் ஈடுபாடு இருந்தது. நன்றாகவும் பாடுவார். எனக்கு அப்போதே நடனத்தில் ஆர்வமிருந்ததால் கேட்கும் பாட்டுக்கெல்லாம் நடனம் ஆடிக்கொண்டே இருப்பேன். நான் ஆடுவது அப்பாவின் உறவினர்களுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. சினிமாவில் நான் நடிப்பதில் அவர்களுக்கு உடன்பாடில்லை. 1967ல் அப்பா இறந்துவிட, என் அம்மா லீலாராணிதான் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டார்.

சினிமாவுக்குள் வந்தது குறித்து?

நான் சினிமாவிற்குள் வந்ததே ஒரு விபத்து. பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடிய புகைப்படம் புகைப்படக் கலைஞர் வழியாக, தவறுதலாக எம்.ஜி.ஆர் கண்களில்பட, திரைத் துறைக்குள் அவர் மூலமாகவே நுழைந்தேன். என் அம்மாவுடன் பிறந்த பெரியம்மா நடிகை கமலா கோட்னீஷ். தேவ் ஆனந்த் போன்ற ஸ்டார்களோடு ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர். அவர் மட்டுமே என் நடிப்புக்கு பக்கபலமாக இருந்தார். சினிமாவுக்கு வந்த பிறகே கேமரா, நடிப்பு, நடனம், டயலாக் பேசக் கற்றுக் கொண்டேன்.

சோபனா, மாஸ்டர் புலியூர் சரோஜா போன்றவர்கள் சினிமாவுக்கான உடல் மொழிகளை கற்றுத் தந்தனர். ஜி.சகுந்தலாம்மா ஏற்ற இறக்கங்களுடன் டயலாக் பேசக் கற்றுத் தந்தார். திரு. தண்டாயுதபாணி பிள்ளையிடம் முறையாக பரதமும் கற்று அரங்கேற்றம் செய்தேன். எனது நாட்டிய நாடகம் பல மேடைகளில் அரங்கேறியது.

எம்.ஜி.ஆர். சாரோடு மட்டும் 14 படங்களில் நடித்திருக்கிறேன். அவருடன் என் முதல் படம் உலகம் சுற்றும் வாலிபன். கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். அவர் நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என மூன்று படங்களை இயக்கினார். அதில் அவரின் இயக்கத்தில் இரண்டு படங்களிலும் நான் கதாநாயகியாக நடித்தேன். அவரோடு மேலும் 10 படங்கள் கமிட்டான நிலையில் அவர் தேர்தலில் வென்று முதலமைச்சரானார். அவர் திரைவாழ்க்கையின் கடைசி நாயகி நானே. அவர் முன்பு நான் எப்போதும் தைரியமாகப் பேசிவிடுவேன். அதனால் நீ வேலுநாச்சியார் பரம்பரையாச்சே என என்னை அவர் கிண்டலடிப்பார்.

நடிகர் திலகம் சிவாஜியுடனான அனுபவம்?

அவர் ஒரு சிறந்த நடிகர் என்றாலும் செட்டில் ரொம்பவே ஜாலியாக இருப்பார். சி.வி. இராஜேந்திரன் சார் இயக்கத்தில் அவருடன் ‘சிவகாமியின் செல்வன்’ என்ற ஒரு  படத்தில் மட்டுமே நடித்தேன். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில், சிவாஜி சார் முன்னிலையில், ‘சங்கரதாஸ் கலை அரங்கம்’ தொடக்க விழாவில், என்னுடைய பாஞ்சாலி சபதம் நாட்டிய நாடகம் இடம்பெற்றது. நாடகத்தில் கர்ணன், அர்ஜுனன், பாஞ்சாலி என அனைத்து பாத்திரங்களையும் மோனாக்டிங்கில் கொண்டு வந்து நடித்தேன்.

என் காலில் ஆணி குத்தியிருந்தது. வெளிக்காட்டாமல் ஒரு மணி நேர நாட்டிய நாடகத்தையும் சிறப்பாக நடித்து முடித்தேன். அப்போது என்னைப் பாராட்டிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நீ எங்க ஊரு ராஜா பொண்ணு என்கிற பெருமையை காப்பாத்தீட்டம்மா என்றார் என்னிடம் சிரித்தவாறே.

மற்ற நடிகர்களுடனும் நடித்தது குறித்து…

5 வருடம் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை. நடிகர் முத்துராமன், சிவக்குமார், விஜயகுமார், ரவிச்சந்திரன், ஜெய் கணேஷ், ஸ்ரீகாந்த் பிறகு கமலஹாசனோடு மலையாளத்தில் ஒரு படமும், தமிழில் நீயா படத்திலும் ஜோடியாக நடித்தேன். ரஜினியோடு ஆயிரம் ஜென்மங்கள், சங்கர் சலீம் சைமன் படங்களில் நடித்திருக்கிறேன்.

நான் கதாநாயகியாக நடித்த பிறகே, நடிகர்கள் கமல், ரஜினி எல்லாம் கதாநாயகர்களாக நடிக்க வந்தனர். கமல்எல்லா டெக்னாலஜியும் தெரிந்த நல்ல நடிகர். ரஜினி எளிமையான மனிதர். ரஜினியின் குடும்பம் எப்போதும் என்னோடு நெருக்கத்தில் இருப்பவர்கள். பிறமொழிப் படங்களான தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களில் என்.டி. ராமாராவ், நாகேஸ்வரராவ், ஷோபன்பாபு, கிருஷ்ணா போன்றவர்களோடும் கதாநாயகியாக நடித்திருக்கிறேன்.

பழைய நடிகைகளுடனான சுவாரஸ்யமான நினைவுகள்…

நடிகை மஞ்சுளா என்னுடைய நெருங்கிய தோழி. எப்போதும் அவர் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பார். சரோஜா தேவி அம்மாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். சென்னை வந்தார் என்றால் எனக்கு போன் செய்து கட்டாயம் பேசிவிடுவார். நானும் அவரை நேரில் சந்தித்து பேசிவிடுவேன். பத்மினி அம்மாவையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய மேக்கப்மேன்தான் எனக்கும் மேக்கப்மேன். அமெரிக்கா சென்றால் அவர் வீட்டுக்கும் சென்று வருவேன். அவரும் சென்னை வந்தால் என் வீட்டுக்கு வராமல் போகவே மாட்டார். ஜெயலலிதா அம்மாவுடனும் நான் பழகி இருக்கிறேன். அவரின் போயஸ் கார்டன் வீட்டுக்கும் சென்று இருக்கிறேன். அவர் என்னிடத்தில் மனசு விட்டு நெருக்கமாகப் பேசியிருக்கிறார். வெளியில் சென்றால் இருவரும் காரில் உட்கார்ந்தே சாப்பிடுவோம்.

சச்சும்மா, கே.ஆர். விஜயா அம்மா எல்லாரும் எப்போதும் என்னுடன் நல்ல நட்பில் இருப்பவர்கள். வெண்ணிறாடை நிர்மலா அம்மாவும் அப்படித்தான். ‘கோல்டன் கேர்ள்ஸ்’ என ஒரு குரூப் வைத்திருக்கிறோம். பழைய நடிகைகள் சிலரும் அந்த குரூப்பில் இருக்கிறார்கள். மூன்று மாதத்திற்கு ஒரு முறை சந்திப்புக்கு ஏற்பாடு செய்வார்கள். நிர்மலா அம்மா வீடு, சச்சும்மா வீடுன்னு எங்காவது ஒரு இடத்தில் சந்திப்போம்.

உங்கள் குடும்பம் குறித்து..

என்னுடையது காதல் திருமணம். கணவர் சிங்கப்பூரில் தொழிலதிபர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து ஒதுங்கி சிங்கப்பூரிலேயே செட்டிலாகிவிட்டேன். எங்களுக்கு இரண்டு மகன்கள். ஒரு மகன் லண்டனிலும், இன்னொரு மகன் சிங்கப்பூரிலும் இருக்கிறார்கள். என் அம்மா இறந்த பிறகே சென்னைக்கு திரும்பினேன். என் சகோதரர் ராஜ்குமார் சேதுபதி. நடிகை ஸ்ரீப்ரியாவை திருமணம் செய்து கொண்டவர். அவரும் சினிமா சார்ந்து சில படங்களிலும் நடித்தும், சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். என்னுடன் பிறந்த அக்கா, தங்கை, தம்பி என அனைவரும் சென்னையில்தான் இருக்கிறார்கள்.

திரைத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து..

டெக்னாலஜியில் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. ஆனால் அடாப்ஷன் ரொம்பவே முக்கியம். இல்லையென்றால் பின் தங்கிவிடுவோம். முன்பெல்லாம் நடிப்பு ரொம்பவே கடினமாக இருந்தது. திறமை இருந்தால் மட்டுமே ஜொலிக்கலாம். பக்காவாக பயிற்சி எடுத்தால் மட்டுமே நடிக்க முடியும். எண்ணிப் பார்த்தால் கதாநாயகன், கதாநாயகி என 10 பேர்தான் திரும்ப திரும்ப நடிப்பார்கள். அப்போதெல்லாம் லைவ் ரெக்கார்டிங் மட்டுமே. நாமேதான் டயலாக் பேச வேண்டும். ஒரு காட்சியை திரும்ப எடுக்க நேர்ந்தால் என்ன ஃபிலிம் சாப்புடுறீயா எனக் கேட்பார்கள். சரியான நேரத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் இருப்போம். ஒரு சீன் முடிந்து அடுத்த சீன் வருவதற்குள் கடகடன்னு உடைகளை மாற்றி ரெடியாகி விடுவோம். அந்த அளவுக்கு எங்களுக்கு பயிற்சிகள் இருந்தது.

இப்போதிருக்கும் தலைமுறைக்கு திறமைகள் அதிகம். நிறையவே நடிக்க வருகிறார்கள். சீக்கிரம் டெவலப் ஆகிறார்கள். பாடல்களும் அவர்களுக்கேற்ப ஃபாஸ்ட்டாக வார்த்தைகள் புரியாமலே வருகிறது. இன்ஸ்ட்ருமென்ட் டாமினேஷன் பாடல்களில் அதிகமாக உள்ளது. தமிழ் தெரியாத மாதிரியே பலரும் பாடுகிறார்கள்.

(சிரிக்கிறார்)

பழைய படங்களில் இடம்பெற்ற காதல் பாடல்களும், சமுதாய சீர்திருத்தப் பாடல்களும் இப்போது கேட்டாலும் அப்படியே மனதில் நிற்கும். உரிமைக்குரல் படத்தில் ‘விழியே கதை எழுது...’ பாடலுக்காகவே 20 தடவைக்கு மேல் படத்தைப் பார்த்தவர்கள் இருந்தார்கள். ஒரு படத்தை தியேட்டருக்குச் சென்று 20 தடவை பார்த்தேன், 30 தடவை பார்த்தேன் எனச் சொன்னவர்களும் இருந்தார்கள். இப்போது, டெக்னாலஜி டெவலப்மென்டால் கோடிக்கணக்கில் தயாரிப்பாளர்கள் பணம் போட்டு படம் எடுத்தாலும், இணைய தளங்களிலும், ஓ.டி.டி தளங்களிலும் படங்கள் உடனுக்குடன் வெளியாகி, தியேட்டருக்குச் சென்று படத்தைப் பார்த்த அந்த கிரேஸ் குறைந்துவிட்டது. ஒரு வருடத்திற்கு 500 படம் வெளியானால் அதில் 50 படம் மட்டுமே தேருகிறது.

மீண்டும் நடிக்க வந்தது குறித்து?

திரைத்துறையில் என்னுடைய ரீ என்ட்ரி மீண்டும் 14 வருடம் கழித்தே நடந்தது. பாக்யராஜ் என்னை ‘அவசர போலீஸ் 100’ படத்திலே நடிக்கச் சொல்லி கேட்டார். அப்போது நான் மறுத்துவிட்டேன். நடிகர் ராஜ்கிரண்தான் என்னை கட்டாயப்படுத்தி ‘பொன்விளையும் பூமி’ படத்தில் குஷ்புவோடு மீண்டும் நடிக்க அழைத்தார். முதலில் மறுத்தேன். நடிகை மஞ்சுளா போன்றவர்கள் என்னை மீண்டும் நடிக்கச் சொல்லி வற்புறுத்தவே சினிமாவில் என் மறுபிரவேசம் நிகழ்ந்தது.

சின்னத் திரையிலும் நடிப்பது குறித்து?

சின்னத்திரை என்றாலும் தெரிந்த அதே தொழில்தானே. வளர்ச்சியும், மாற்றமும் எனக்கும் பிடிக்கும். டெக்னாலஜிகளை நானும் விரும்பி அடாப்ட் பண்ணுவேன். இப்போதும் சூட்டிங் ஸ்பாட்டில் நான்தான் முதல் அட்டென்டென்ஸ் போடுகிறேன்.ஜெயகாந்தனின் ‘அன்னப் பறவை’ நாவல் படமானபோது, நடிகை ராதிகாவோடு அதில் நடித்துள்ளேன்.

அப்போதிருந்தே ராதிகாவும், அவரின் குடும்பமும் எனக்கு ரொம்பவும் நெருக்கமானார்கள். ராதிகாவின் அம்மா என்னை சீரியலில் நடிக்கச் சொல்லி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். ‘இதிகத்தா காது’ என்ற தெலுங்கு சீரியலுக்கு ராதிகாதான் தயாரிப்பாளர். அதுதான் என் சின்னத்திரை என்ட்ரி. அதன் பிறகே சித்தி, செல்வி, அரசி, வள்ளி என்று, அப்படியே இன்றைய தலைமுறைகளோடு ‘அபியும் நானும்’ என என் பயணம் தொடர்கிறது.

சரோஜாதேவி அம்மா இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு போன் செய்து சீரியலில், உன் டிரஸ்ஸிங் சென்ஸ் ரொம்பவே நல்லா இருக்கும்மா. உனக்காகத்தான் அந்த சீரியலை நான் தினமும் பார்க்கிறேன். உன் நடிப்பு ரொம்ப நல்லாவே இருக்கு எனப் பாராட்டினார். சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ‘அபியும் நானும்’ தொடரில் என்னோடு ஆதேஷ், ரியா, நிதிஷ் என மூன்று குழந்தைகளுமே மிகவும் சிறப்பாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் குழந்தைகளுக்கு சாக்லேட் எல்லாம் கொண்டுபோய் கொடுக்கிறேன். என் பொழுது இன்றைய தலைமுறையோடும் ரொம்பவே ஜாலியாகப் போகிறது.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Related Stories: