ஃபுட் டெக்ரேஷன்!

நன்றி குங்குமம் தோழி

காய்கறிகள் மற்றும் பழங்களை அப்படியே சாப்பிடக் கொடுத்தால், வேண்டாம் என்று குழந்தைகள் ஒதுக்கி விடுகிறார்கள். உடலுக்கு கெடுதலான ஜங்க் உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுகிறார்கள். காரணம் அவற்றில் வரும் அலங்கார பேக்கிங் கிற்காகத்தான் குழந்தைகள் அதன் மேல் ஈர்க்கப்பட்டு சாப்பிட காரணம். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவையும் இவ்வாறு அலங்காரம் செய்து தந்தால், குழந்தைகள் சந்தான உணவையும் விருப்பி சாப்பிடுவார்கள் என்கிறார் சமையல் கலைஞர் சுதா செல்வகுமார். இவர் குழந்தைகளுக்கு பிடிக்கும் படி எவ்வாறு உணவினை அலங்கரிக்கலாம் என்று விவரிக்கிறார்.

ஆங்கிரி பேர்ட் இட்லி

மொறுமொறு தோசை என்றால் குழந்தைகள்

சாப்பிட்டு விடுவார்கள். அதே ஆவியில் வேக வைத்த இட்லி என்றால் தூர ஓடுவார்கள். அவர்களுக்கு  சிறந்த ஆங்கிரி பேர்ட் வடிவில் இட்லி செய்து வைத்தால் விரும்பி சாப்பிட்டு விடுவார்கள்.

தேவையான பொருட்கள்

இட்லி மாவு - 1 கப்,

மாம்பழக்கூழ் - 1/4 கப்,

ஃபுட் கலர் மஞ்சள் (லிக்விட்) - 1 துளி (வேண்டுமெனில்),

உருக்கின டார்க் சாக்லேட் - சிறிது,

கேரட் துண்டுகள் - சிறிது, (அலங்கரித்து சாப்பிட),

தக்காளி சாஸ் அல்லது மிக்ஸட் ஃபுரூட் ஜாம் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

இட்லி மாவில் மாம்பழக்கூழ், ஃபுட் கலர் சேர்த்து கலந்து இட்லித்தட்டில் ஊற்றி வேக விட்டு எடுத்துக்கொள்ளவும். உருக்கின சாக்லேட்டை கொஞ்சம் உருட்டும் பதம் வந்ததும் கண், புருவம் உருட்டி படத்தில் உள்ளபடி இட்லி மேல் அலங்கரிக்கவும். வாய், மூக்கிற்கு கேரட் துண்டுகளும், மீதி பகுதிக்கு தக்காளி சாஸ் அல்லது ஜாம் தடவவும். இட்லியின் கீழ்பகுதியை விட்டு விடவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஸ்னோமேன் சாண்ட்விச்

தேவையான பொருட்கள்

பிரெட் துண்டுகள் - 4,

வாழைப்பழம் - 1 (வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்),

வெண்ணெய்,

நெய் - சிறிது,

பாதாம்,

வேர்க்கடலை,

பிஸ்தா,

முந்திரி சேர்ந்த துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

அலங்கரித்து சாப்பிட கேரட் துண்டுகள்,

பீட்ரூட் துண்டுகள்,

சாக்கோ சிப்ஸ்.

செய்முறை

2 பிரெட் துண்டுகளை எடுத்து சிறிய வட்ட மூடி, பெரிய வட்ட மூடி ஒவ்வொன்றிலும் வைத்து அழுத்தி வட்டமாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். இரண்டு சிறிய வட்டம் ஸ்னோமேன் தலைப்பகுதி, பெரிய வட்டம் உடல் பகுதி என இரண்டு வட்டமும் செய்துகொள்ளவும். நறுக்கிய வாழைப் பழத் துண்டுகளை, நட்ஸ் துருவலோடு வெண்ணெய் சேர்த்து கலக்கிய நட்ஸ் பட்டரையும் பிரெட்டின் பெரிய ஒரு வட்டத்தில் தடவவும். சிறிய வட்டத்தில் இதே மாதிரி செய்து மற்றொரு வெட்டி வைத்துள்ள பிரெட்  துண்டால் மூடி படத்தில் காட்டியுள்ளபடி அலங்கரித்து பரிமாறவும்.

அதாவது கேரட் கூம்பு தொப்பி, கையாகவும், முகத்திற்கு கண்கள் சாக்கோ சிப்ஸ், உடலில் செர்ரி பழம் மற்றும் வாய் பகுதிக்கு பீட்ரூட் என அலங்கரித்து பரிமாறலாம். சீசனுக்குத் தகுந்த மாதிரி வாழைப்பழத்திற்கு பதில் மற்ற பழங்களும் வைத்து பரிமாறலாம். காய்கறி, கேரட், பீட்ரூட்டுடன் வெள்ளரிக்காயும் அரிந்து அலங்கரித்து பரிமாறலாம். சாதா பிரெட்டுக்கு பதில் கோதுமை பிரெட் பயன்படுத்தலாம். பிரெட்டை நெய்யில் டோஸ்ட் செய்தபிறகும் அலங்கரிக்கலாம். அலங்காரத்தோடு சுவையும், ஆரோக்கியமும் முக்கியம். அலங்கரித்து பரிமாறுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள்

வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

ஃபிளவர் ரைஸ்

சாதாரணமா பீட்ரூட், குடைமிளகாய் கறி செய்தாலோ, சாதம் செய்தாலோ குழந்தைகள் ஒதுக்கி விடுவார்கள். இப்படி அலங்கரித்து பரிமாறினால் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

வடித்த சாதம் - 1 கப்,

பீட்ரூட் துருவல் - 1/2 கப்,

குடை மிளகாய் பொடியாக நறுக்கியது - 1/4 கப்,

உப்பு - தேவைக்கு,

நெய் - சிறிது,

மல்லி விழுது - 1/4 கப்,

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,

நிலக்கடலை வறுத்து பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன்,

கடுகு - 1 டீஸ்பூன்,

அலங்கரித்து சாப்பிட வெள்ளரித்துண்டு - 6 துண்டுகள்,

இஞ்சி,

பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,

வெள்ளை எள்ளு பொடி - 1 டீஸ்பூன்.

செய்முறை

பீட்ரூட் சாதம்-வாணலியில் நெய்விட்டு சூடானதும், கடுகு தாளித்து, பீட்ரூட் துருவல், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், நிலக்கடலை வறுத்தது போட்டு உப்பு சேர்த்து பிரட்டி வடித்த சாதம் கொட்டிக் கிளறி நிறுத்தவும். இது பூவின் இதழ்கள் போல் அலங்கரிக்க. குடை மிளகாய் சாதத்திற்கு வாணலியில் நெய் விட்டு சூடானதும் பொடியாக அரிந்த குடைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கி, மல்லி விழுது, எள்ளு பொடி சேர்த்து கிளறி நிறுத்தவும். இது காம்பு பகுதி அலங்கரிக்க பயன்படுத்தவும். பரிமாறும் தட்டில் நடுவில் வட்ட வெள்ளரித்துண்டு வைத்து படத்தில் காட்டியுள்ளபடி பூ மாதிரி அலங்கரித்து பரிமாறவும்.

மஷ்ரூம் தோசை

தேவையான பொருட்கள்

தோசை மாவு - 1 கப்,  

வேக வைத்து உதிர்த்த சோள முத்துக்கள் - 1/4 கப்,

சீஸ் - 1 துண்டு,

வெள்ளரிக்காய் - சிறியது 1,

பொடியாக நறுக்கிய குடை மிளகாய் - 1/4 கப்,

உருளை,

பட்டாணி வேக வைத்து மசித்தது - 1/4 கப்,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய் - தேவையான அளவு,  

தக்காளி சாஸ் - சிறிதளவு,

பாவ்பாஜி மசாலா - 1 டீஸ்பூன்.

செய்முறை

தோசைக்கல்லில் தோசை வார்த்து குறைந்த தணலில் வைத்து சோள முத்துக்கள், குடைமிளகாயை அதன் மேல் தூவி, மசித்த காய்கறி கலவையை தோசை நடுவில் வைத்து பரப்பி, தக்காளி சாஸ், சிறிது உப்பு, பாவ்பாஜி மசால் பவுடர் சுற்றிலும் போட்டு தோசையை வேக விட்டு இரண்டாக மடித்துக் கொள்ளவும். இதுதான் காளான் வடிவ மேற்புறம். அதில் சீஸை வட்ட வட்டமாக மேலே வெட்டி படத்தில் காட்டியுள்ளபடி வைக்கவும். கீழ்புறம் வெள்ளரித்துண்டை வைக்கவும். இப்பொழுது பார்ப்பதற்கு காளான் மாதிரி அழகாக இருக்கும். சுவைப்பதற்கு இந்த தோசை அருமையாக இருக்கும். புற்கள் மாதிரி தெரிய அங்கங்கே வெள்ளரித்துண்டை நறுக்கி அலங்கரிக்கலாம்.

சுதா செல்வகுமார்

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: