அக்கா கடை - கடனை அடைச்சிட்டோம்... நிம்மதியா இருக்கோம்!

நன்றி குங்குமம் தோழி

சென்னை மயிலாப்பூர் என்றால், முதலில் நினைவுக்கு வருவது கபாலி மற்றும் கற்பகாம்பாள் கோயில். இரண்டாவதாக நினைவுக்கு வருவது முருகன் சுண்டல் கடை. இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு மரப்பலகை கட்டிக் கொண்டு அதில் நான்கு விதமான சுண்டல் மற்றும் உப்புக்கொழுக்கட்டை, போளி என தன் மனைவியுடன் விற்பனை செய்து வருகிறார் முருகன். ஐந்து மணிக்கு இவர் கடையினை திறந்தாலும், நாலரை மணிக்கெல்லாம் இவரின் சுடச் சுடச் சுண்டலுக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள்.

‘‘என் கணவரின் சொந்த ஊர் திருநெல்வேலியில் உள்ள பொட்டல் புதூர் என்ற கிராமம்’’ என்று பேசத் துவங்கினார் முருகனின் மனைவி சாந்தி. இவர் எனக்கு தாய்மாமன். எங்களுடையது பெரிய குடும்பம். என் தாத்தா எண்ணெய் தொழில் செய்து வந்தார். அம்மாவின் கூட பிறந்தவங்க என் கணவரையும் சேர்த்து பத்து பேர். பெரியம்மா, சித்திக்கள் மட்டுமே எனக்கு ஐந்து பேர். மாமாக்கள் நான்கு பேர். அதில் இவர் தான் கடைசி மாமா. தாத்தா தொழிலில் கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டது.

அதனால அவங்க எல்லாரும் அம்பாசமுத்திரத்திற்கு போயிட்டாங்க. நாங்களும் அங்க தான் இருந்ததால், மேலும் உறவு விட்டுப் போகக்கூடாதுன்னு என் மாமனையே எனக்கு திருமணம் செய்து வச்சாங்க. திருமணத்திற்கு பிறகு அம்பாசமுத்திரத்தில் ஸ்னாக்ஸ் வியாபாரம் செய்து வந்தோம். ஆனால் அது சரியா போகல. நஷ்டம் ஏற்பட்டது. அதனால் வேறு ஊருக்கு போய் பிழைக்கலாம்ன்னு நானும் என் கணவர் மற்றும் மகளுடன் சென்னைக்கு வந்திட்டோம். இங்க வந்து 20 வருஷமாச்சு’’ என்றவரை தொடர்ந்தார் முருகன்.

‘‘சென்னையில் எங்களுக்கு யாரும் தெரியாது. ஊரும் புதுசு. கையில் இருந்த காசில் முதலில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். அதன் பிறகு நான் வேலையை தேட ஆரம்பிச்சேன். நான் பெருசா படிக்கல. எஸ்.எஸ்.எல்.சி வரை தான் படிச்சிருக்கேன். என் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடினேன். ஒரு ஒயின் ஷாப்பில், சப்ளையர் வேலை கிடைச்சது.

எந்த வேலையாக இருந்தால் என்ன, நாம நியாயமா இருக்கணும். அவ்வளவு தான். மேலும் என் குடும்பத்தை காப்பாற்றுவது என் பொறுப்பு என்பதால், கூச்சப்படாமல் வேலையில் சேர்ந்தேன். சில காலம் அங்கு வேலைப் பார்த்தேன். ஆரம்ப காலத்தில் இருந்தே சொந்தமாக தொழில் செய்து வந்ததால், என்னால் இந்த வேலையில் அதிக நாட்கள் ஈடுபட முடியவில்லை. மறுபடியும் ஸ்னாக்ஸ் தொழிலை செய்ய ஆரம்பிச்சேன்.

மிக்சர், முறுக்கு, சிப்ஸ் போன்ற ஸ்னாக்ஸ் வகைகளை மொத்தமாக வாங்கி, அதை நான் பேக்கெட் செய்து, மளிகை மற்றும் டீக் கடைகளில் விற்பனை செய்தேன். ஆரம்பத்தில் நன்றாகத்தான் போனது. கொஞ்சம் கூடுதலாக முதலீடு செய்தேன். அது தான் தவறாக போனது. லாபம் பார்க்க முடியவில்லை. அந்த தொழிலும் நஷ்டமானது. கடன் வாங்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்தில் கடனை அடைக்க முடியாமலும், சரியான வருமானம் இல்லாமலும் தவித்தேன்’’ என்றவர் தற்போது செய்து வரும் சுண்டல் தொழிலுக்கு மூலக்காரணம் இவரின் மனைவியாம்.

‘‘நாங்க ரொம்பவே ெநாடிஞ்சு போயிட்டோம். என்ன செய்றதுன்னே தெரியல. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத சூழல். அப்பதான் என் அம்மா மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ேகாயிலுக்கு போய் இரண்டு பேரும் தங்கிட்டு வாங்கன்னு சொன்னாங்க. நானும் இவரை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு போனேன். அங்க போயிட்டு வந்த பிறகு தான் எங்க வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. என் மனதில் சுண்டல் விற்பனை ஏன் செய்யக்கூடாதுன்னு தோன்றியது. இவரிடம் ஆலோசனை சொன்னேன்.

முதலில் தயங்கியவர் பிறகு சம்மதித்தார். எங்கு விற்பனை செய்யலாம்ன்னு யோசித்த போது, மீண்டும் அம்பாள் தான் நினைவுக்கு வந்தாள். அதனால் கபாலி கோயில் அருகில் விற்பனை செய்யலாம்ன்னு நினைச்சோம். கோயிலுக்கு வருபவர்கள் மற்றும் அந்த வழியாக செல்பவர்கள், அலுவலகத்தில் வேலைப் பார்ப்பவர்கள், இல்லத்தரசிகள்ன்னு பலர் தயங்காமல் வாங்கிச் செல்ல ஆரம்பித்தனர்’’ என்ற சாந்தி இந்த கடையினை இரண்டு வருடத்திற்கு முன் துவங்கினாராம்.

‘‘என் மனைவி சொன்ன யோசனை எனக்கு நல்லதாக பட்டது. கடை போடும் அளவுக்கு வசதி கிடையாது. அதனால் சுண்டல் பாத்திரங்கள் வைக்கும்படி என் இரண்டு சக்கர வாகனத்தை தயார் செய்தேன். முதல் நாள்  மூன்று கிலோ கருப்பு மற்றும் வெள்ளை சுண்டல் செய்து வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். எங்கே போய் வண்டியை நிறுத்துவதுன்னு தெரியல. கபாலி மற்றும் கற்பகாம்பாளை வணங்கிவிட்டு அதே தெருவில் உள்ள லலிதா ஆயுர்வேத கடை வாசலில் ஒன்னும் புரியாமல் நின்றேன். அந்த கடையின் உரிமையாளர் டாக்டர் கண்ணன் அவர்கள்... நான் தயங்கி நிற்பதை பார்த்துவிட்டு என்னிடம் என்ன என்று கேட்க...

சுண்டல்  என்று நான் வார்த்தையை மெல்ல சொல்வதற்குள், அவர், ‘என்ன சுண்டல் விற்க போறியா... இங்க வண்டியை நிறுத்தணும்... அப்படித்தானே’ன்னு கேட்டார். நான் தலையசைக்க... நிறுத்திக்கோன்னு பர்மிஷன் கொடுத்தார். அவர் கொடுத்த அந்த இடம் எனக்கான ஒரு அடையாளமாக மாறிவிட்டது. இரண்டு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல. இப்ப காராமணி சுண்டல், வேர்க்கடலை சுண்டல், நவதானிய சுண்டல், உப்புக் கொழுக்கட்டை, போளி என எல்லாம் விற்கிறேன்.

மயிலாப்பூர், பிராமணர்கள் அதிகம் வசிக்கும் இடம் என்பதால், அவர்கள் சாப்பிடுவதற்கு ஏற்ப சுண்டலில் இஞ்சி, பூண்டு சேர்ப்பதில்லை. தரமான நெய் மற்றும் எண்ணெய் தான் பயன்படுத்துகிறேன். வாழை இலையில் தான் சுண்டலை மடித்து தருகிறேன். தரமான உணவாக இருந்தாலும், சுகாதாரமாக கொடுக்கணும்’’ என்றவர் தன் மனைவியின் கைப்பக்குவத்தில் தான் அனைத்து உணவுகளும் தயாரிப்பதாக தெரிவித்தார்.

‘‘சமையல் பொறுத்தவரை நான் பார்த்துக் கொள்கிறேன். அதற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது அவரின் வேலை. காலை ஆறு மணிக்கு முதல் வேலையாக சுண்டலை ஊறப்போட்டுவிடுவேன். சுமார் நான்கு மணி நேரமாவது நன்கு ஊற வேண்டும். அதன் பிறகு மண், கல் இல்லாமல் நன்றாக அலசி, ஒவ்வொரு சுண்டலாக வேகவைப்பேன். அது ஒரு பக்கம் வெந்து கொண்டு இருக்கும் போது, மறுபக்கம் உப்புக் கொழுக்கட்டையை தயார் செய்வேன். அனைத்தும் செய்து முடிக்க நான்கு மணியாயிடும்.

அதன் பிறகு பாத்திரத்தில் தயாராக எடுத்து வைத்திடுவேன். நான் சமையல் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் இவர் இலை மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்திடுவார். மாலை ஐந்து மணிக்கு இவர் வண்டியை நிறுத்தினா, ஏழரை மணிக்கெல்லாம் எல்லாம் தீர்ந்திடும். சிலர் இந்த சுண்டலை வாங்கிக் கொண்டு போய் அதில் கொஞ்சம் மசாலா சேர்த்து இரவு சப்பாத்தி மற்றும் தோசைக்கு சைட்டிஷாக வைத்துக் கொள்கிறார்கள். சிலர் மாலை நேர ஸ்னேக்சாக சாப்பிடுகிறார்கள். குழந்தைகளும் விரும்பி வாங்கி செல்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கின் போது இரண்டு மாதம் மட்டும் கடையை போடமுடியல. பிறகு அரசு நிர்ணயித்த நேரத்தில் கடையை போட்டோம். ஆவியில் வேகவைத்த உணவு, உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாது என்பதால், மக்கள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். குறிப்பாக கொரோனா காலத்திற்கு ஏற்ற சத்தான உணவு, விலையும் குறைவு’’ என்ற சாந்தி தற்போது மிகவும் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்தார்.

‘‘எங்களுக்கு ஒரே மகள். அவளையும் எங்க சொந்த ஊரான அம்பாசமுத்திரத்தில் கல்யாணம் செய்து கொடுத்திட்டோம். இந்த இரண்டு வருஷத்தில் சுண்டல் விற்று வந்த வருமானத்தில் எல்லா கடனையும் கொஞ்சம் கொஞ்சமாக அடைச்சிட்டோம். வாடகை வீடு தான் என்றாலும், கடன் இல்லை, நிம்மதியா இருக்கிறோம்’’ என்றார் சாந்தி.

செய்தி: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட்பால்

Related Stories: