×

என்ன செய்வது தோழி? - நான் இல்லாமல் அவளில்லை

நன்றி குங்குமம் தோழி

அன்புள்ள தோழிக்கு,

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் பட்டணம்தான். எனக்கு வயது 35. தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக வேலை செய்கிறேன். திருமணமாகி 2 குழந்தைகள். கணவர் அரசுக் கல்லூரியில் உதவி பேராசிரியர். சொந்த வீடு,வசதியாக இருக்கிறோம். எனது திருமணம் பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம். இருவரும் படித்தவர்கள் என்பதால் எங்களுக்குள் எந்த பிரச்னையும் வந்ததில்லை. அவர் எல்லாவற்றிலும் ஒத்துப் போகும் குணம் உடையவர். இருவரும் வேலைக்கு செல்பவர்கள் என்பதால் வீட்டு வேலைகளிலும் எனக்கு உதவியாக இருப்பார்.

எனக்கு எப்போதும் உடலை பராமரிப்பதில் ஆர்வம் அதிகம். உணவு கட்டுப்பாடு, உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள வீட்டிலேயே உடற் பயிற்சி என்று எப்போதும் கவனமாக இருப்பேன். அதை என் தோழிகள் பலரும் ஆச்சர்யமாக பார்ப்பார்கள். சிலர் வாய்விட்டே, ‘எப்படி அப்படியே இருக்கே’ என்று கேட்கவும் செய்வார்கள்.

அதற்காகவே அடிக்கடி உடல் எடை எவ்வளவு என்று ‘செக்’ பண்ணுவேன். அதற்காக வீட்டில் எடை மெஷின் கூட வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால் யார் கண் பட்டதோ, திடீரென உடல் எடை கொஞ்சம் கூடி விட்டது. எனக்கு பொறுக்கவில்லை. எடையை குறைக்க, தெரிந்த வித்தை, வேலைகளை எல்லாம் செய்து பார்த்தேன். பலனில்லை.

ஆனால் வீட்டுக்காரரோ, ‘எனக்கு ஒண்ணும் எடை கூடுனா மாதிரி தெரியல.... சொல்லப்போனா முன்ப விட இப்போதான் ரொம்ப அழகாக இருக்குற’ என்று சொன்னார். ஆனாலும் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.எனக்கு தெரிந்தவர்கள், தோழிகள் என பலரிடமும் ஆலோசனைகள் கேட்டேன். அவர்களில் சிலர் சொன்ன சில ேயாசனைகள் பலன் தரவில்லை. இறுதியில் பலர் சொன்னபடி உடற்பயிற்சி கூடத்துக்கு போக முடிவு செய்தேன். அதற்காக எங்கள் ஏரியாவில் இருந்த உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்தேன். அங்கே ஒரு ஆண் தான் பயிற்சியாளர்.

பெண்களுக்கு தனி நேரம் இருந்தாலும், வேலைக்கு செல்வதால் எனக்கு அது வசதிப்படவில்லை. எனவே மாலை நேரத்தை தேர்வு செய்தேன். கல்லூரி முடிந்ததும் நேராக பயிற்சிக்கூடம் சென்று விடுவேன். கவலைகள் மறந்து உடற்பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்தேன். பயிற்சி செய்பவர்களில் பெரும்பாலும் ஆண்கள் என்றாலும், சில பெண்களும் இருந்தனர். அவர்களுடன் அவ்வப்போது பேசுவேன். அதில் ஒரு பெண் என்னுடன் அடிக்கடி பேச ஆரம்பித்தாள். கலகலப்பாக பேசும் அவளது சுபாவம் எனக்கு பிடித்திருந்தது. அதனால் தினமும் சிறிது நேரம் பேசும் அளவுக்கு எங்கள் நட்பு வளர்ந்தது.

ஒருகட்டத்தில் செல்போன் எண்ணையும் பரிமாறிக் கொண்டோம். அடிக்கடி மெசேஜ்கள் அனுப்ப ஆரம்பித்தோம். பின்னர் தனிப்பட்ட விவரங்களையும் பேச ஆரம்பித்தோம். ஒருமுறை அவள் வீட்டுக்கு என்னை அழைத்தாள். பக்கத்தில்தான் என்பதால் அவள் வீட்டுக்கு சென்றேன்.அந்த வீட்டில் அவள் மட்டும்தான் இருந்தாள். விசாரித்ததில் அவள் மட்டும் தனியாக வசிப்பதாக தெரிவித்தாள். அதன் பிறகு ஏதும் கேட்கவில்லை. ஒருநாள் அவளே சொன்னாள். அவளுக்கு ஏறக்குறைய என் வயதுதான். காதலித்து திருமணம் செய்துள்ளாள். இருவரும் வெளிநாட்டில் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்துள்ளனர். திருமணம் ஆன கொஞ்ச நாட்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் கழிந்துள்ளது.

ஆனால் ஒரு ஆண்டில் அவளது கணவனின் சுயரூபம் தெரிந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வந்து ரகளை செய்வானாம். கூடவே பெண்கள் சகவாசம் வேறு. கேட்டால் அடிப்பானாம். ஒருநாள் பிரச்னை பெரிதாகவே, பக்கத்தில் இருந்தவர்கள் போலீசில் புகார் செய்து விட்டார்களாம். அதன் பிறகு வழக்கு, பிரச்னைகள் முடிந்து சென்னைக்கு வந்து விட்டதாக கூறினாள்.

அதனால் ஆண்கள் என்றாலே அவளுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. நாங்கள் பேசும் போது ஆண்களை ‘ஏமாற்றுப் பேர்வழிகள்’ என்று திட்டுவாள். நான் பல முறை ஆறுதல் சொல்வதுடன், ‘இப்படியே எத்தனை நாள் இருப்பாய்... இன்னொரு திருமணம் செய்து கொள் அதுதான் நல்லது’ என்று பலமுறை சொல்லி இருக்கிறேன். அதற்கு அவள், ‘ஒருமுறை பட்டதே போதும் மறுபடியும் யாரிடமும் மாட்டிக் கொள்ள தயாராக இல்லை’ என்பாள். என் வீட்டுக்காரர் குறித்து சொல்லியும், அவளுக்கு ஆண்கள் மீது நம்பிக்ைக வரவில்லை.

அதே நேரத்தில் எங்கள் நட்பு நாளுக்கு நாள் நெருக்கமாகி கொண்டே வந்தது. உடற்பயிற்சிக்கு போகாவிட்டாலும் கட்டாயம் ஒருநாளைக்கு 2, 3மணி நேரமாவது பேசுவோம். அப்படி பேசாவிட்டால், கோபித்துக் கொள்வாள். அதனால் நான் பேசுவதை தவிர்த்ததே இல்லை. விடுமுறை நாட்களில் அவள் வீட்டில் சந்தித்துக் கொள்வோம். பல நாட்கள் அவள் வீட்டிலேயே தங்கி இருக்கிறேன். அப்போதெல்லாம் விடியவிடிய பேசிக் கொண்டே இருப்போம். அப்படி ேபசும் போது என் தோளில் சாய்ந்து கொள்வாள். சில நேரங்களில் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு பேசுவாள்.

அந்த நேரங்களில், ‘என் வாழ்க்கையில் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன். நாம் இப்படியே இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று அடிக்கடி சொல்வாள். அதற்கு நான், ‘என் வீட்டுக்கு வந்து விடு.... என் வீட்டுக்காரர் எவ்வளவு நல்லவர் என்று தெரிந்து  கொள். அதன்பிறகு ஆண்கள் மீது நம்பிக்கை வரும்.... மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் ஆசையும் வரும்’ என்று சொல்வேன்.

அதற்கு அவளோ, ‘நீ வேண்டுமானால் இங்கு வந்துவிடு’ என்று சொல்வாள். அதற்கு நான் ஒருமுறை, ‘அப்போ என்ன என் வீட்டுக்காரரை விவாகரத்து செய்து விடவா’ என்று கிண்டலாக கேட்டேன். அவளோ ஆர்வமாக, ‘அருமையான யோசனை’ என்று சொன்னாள். ஆனால் நான், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஒருமுறை ஊரில் என் மாமனாருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் நாங்கள் அவசரமாக ஊருக்கு சென்று விட்டோம். எனவே 2 நாட்கள் அவளிடம் பேச முடியவில்லை. அவள் முயற்சித்த போதும் சிக்னல் பிரச்னை, மருத்துவமனையில் மாமனார் இருந்த நிலைமை, அதனால் என் கணவர் நொறுங்கி போனது என பல காரணங்களால் என்னால், அவளுடன் பேச முடியவில்லை.

என் மாமனாருக்கு பிரச்னை இல்லை என்றான பிறகுதான் என் கணவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். எனக்கும் பதட்டம் குறைந்து, மற்ற வேலைகளில் ஈடுபட முடிந்தது. அதன் பிறகு தோழிக்கு போன் செய்தால் அவள் போனை எடுக்கவில்லை. சரி ஊருக்கு போய் பேசிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

ஊருக்கு வந்ததும் அவளை பார்க்கச் சென்றேன். அவளோ, ‘என்னிடம் கூட சொல்லாமல் ஏன் ஊருக்கு போனாய்’ என்று சண்டை போட ஆரம்பித்து விட்டாள். நிலைமையை சொல்லியும் அவள் புரிந்து கொள்ளவில்லை. ‘அப்படியென்றால் நான் உனக்கு முக்கியமில்லையா’ என்று அழ ஆரம்பித்து விட்டாள். அவளை சமாதானப்படுத்த, ‘சரி இனி அப்படி செய்ய மாட்டேன். உன்னிடம் சொல்லிவிட்டுதான் எங்கும் போவேன்’ என்று சொன்னேன்.

அதன்பிறகு மீண்டும் விடுமுறை நாட்களை அவளுடனே கழிக்க ஆரம்பித்தேன். என் கணவர், ‘இது சரியில்லை’ என்று முதல்முறையாக குறை சொன்னார். ‘அவள் பாவம்’ என்று அவளின் நிலைமையை சொன்னேன். அதற்கு அவர், ‘நட்பு அவசியம் என்றாலும் குடும்பம், குழந்தைகள் முக்கியம்’ என்று சொன்னார்.

ஆனால் தோழியோ என்னை விட்டு இருக்கமாட்டேன் என்கிறாள். என்னுடனேயே வந்து தங்கிவிடு என்று கட்டாயப் படுத்துகிறாள். நீ இல்லாவிட்டால் நான் செத்து போய்விடுவேன் என்றும் சொல்கிறாள். அவளை பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவள் சொல்வதை தட்ட முடியவில்லை. அதனால் என் வீட்டிலும் இப்போது பிரச்னையாக இருக்கிறது.

என் கணவர், இந்த விஷயத்தை எனது பெற்றோரிடம் சொல்லிவிட்டார். அவர்களும் என்னை திட்டுகிறார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. என் நட்பை முறித்தால் அவள் கட்டாயம் ஏதாவது செய்து கொள்வாள் என பயமாக இருக்கிறது. அதே நேரத்தில் நல்ல கணவரின், குழந்தைகளின் அன்பை இழந்து விடுவோமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. என்ன செய்வதுன்னு புரியவில்லை. நீங்கள் தான் எனக்கு நல்ல வழி காட்ட வேண்டும்.

இப்படிக்கு பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

உங்கள் கடிதம், ‘நீங்கள் இப்போது மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கிறீர்கள்’ என்பதை சொல்கிறது. நாம் யார் என்பதை நமது உறவுகள்தான் தீர்மானிக்கின்றன. நாம் எல்லோருக்கும் வாழ்க்கையில் பல்வேறு உறவுகள் இருக்கின்றன. பெற்றோர், உடன்பிறப்புகள், நண்பர்கள், வாழ்க்கை துணை, குழந்தைகள் என பல்வேறு உறவுகள் சர்வ வல்லமையுடன் நமது வாழ்வுடன் தொடர்கின்றன. அவர்களின் வாழ்விலும் நமது உறவும் ஒரு அங்கம் வகிக்கிறது.

வாழ்வில் யாருடன் அதிகம் இணைந்திருக்கிறோம் என்பதில்தான் நமது சுயமரியாதையும், நிம்மதியும் இருக்கின்றன. சிலருக்கு நல்வாய்ப்பாக நல்ல உறவுகள் கிடைக்கின்றன. அந்த அதிர்ஷ்டம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எப்படி இருந்தாலும் சமூகத்தில் சில உறவுகளை தொடர வேண்டிய சூழலில் இருக்கிறோம். ஆணோ, பெண்ணோ ஒருவர் தனியாக இருக்கும் போது, மற்றவர்களுடன் இணைய முடியாத போது மனச்சோர்வடைவது இயல்பு.

நண்பர்கள் உட்பட மற்றவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. கூடவே இக்கட்டான நேரங்களில் கைகொடுப்பவர்கள் பெரும்பாலும் நமது நண்பர்களாகவே இருக்கின்றனர். அப்படி ஒரு கைகொடுக்கும் தோழியாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் மிகவும் நெருக்கமான தோழியாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதுமட்டுமல்ல நீங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பதும் தெரிகிறது.

இது சற்று கடினமான சூழல்தான். உங்கள் குடும்பம், பிள்ளைகள் என எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நட்புக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பது மனநோயின் தொடக்கமாக இருக்கலாம். இது கட்டாயம் ஆரோக்கியமானதல்ல. நம் வாழ்வில் நாம் சந்திக்கும் உறவுகள் உட்பட எல்லாவற்றையும் சமநிலையில் வைக்க கற்றுக்கொள்ள வேண்டும். எப்போதும் மற்றவருடன் ஆரோக்கியமான இடைவெளியுடன் கூடிய நட்பை, உறவை பராமரிக்க வேண்டும்.

அப்படி செய்வது உங்கள் தோழியுடன் இருந்து கொஞ்ச கொஞ்சமாக விலக உதவியாக இருந்திருக்கும். உங்கள் தோழி முக்கியமானவர்தான். அதை மறுக்கவில்லை. ஆனால் உங்கள் குடும்பத்தை, பிள்ளைகளை விட முக்கியமானவர் அல்ல. உங்கள் தோழியின் வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவம். அதன் காரணமாக, ஆண்கள் மீது அவருக்கு நம்பிக்கை போய்விட்டது. அதுதான் அவரை உங்களிடம் நெருக்கமாக மாற்றியுள்ளது.  ஆனால் அவரது வாழ்க்கையில் இன்னொருவர் வர வேண்டும். அவருக்கு வயது இருக்கிறது. அப்படி வாழ்க்கை துணை வந்தால் அவர் ஆரோக்கியமான, இயல்பான வாழ்க்கையை நடத்த முடியும். அதை அவருக்கு புரிய வையுங்கள்.

கூடவே அவரை விட, உங்கள் பிள்ளைகளுக்கும், கணவருக்கும்தான் உங்கள் தேவை அதிகம் என்பதை உணருங்கள். எனவே, தயவு செய்து உங்கள் தோழியுடன் பேசுங்கள். விரைவாக அவரிடமிருந்து உங்களை சீக்கிரம் விலக்கிக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் வேறு ஒருவரின் உதவியை நாடுங்கள். அவரது உறவினர்கள் மூலமாக பேசுங்கள். உங்கள் முயற்சிக்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கலாம். பயமுறுத்தவும் செய்யலாம். ஆனால் ஒருகட்டத்தில் கட்டாயம் புரிந்து கொள்வார். அதனால் முயற்சி செய்யுங்கள். மனநல மருத்துவரின் உதவியை கூட நாடலாம்.

கூடவே உங்களுக்கு நல்ல, புரிந்து கொள்ளக் கூடிய கணவர் வாய்த்திருக்கிறார். அதனால் அவரிடம் நிலமையை விளக்கிக் சொல்லி... அவரின் உதவியையும் பெறலாம். நீங்கள் மீண்டும் முழுமையாக குடும்பத்துடன் இணைய உங்கள் கணவர் கட்டாயம் உதவுவார். உங்கள் தோழியும் இயல்வு வாழ்க்கைக்கு திரும்புவார். முக்கியமாக, நீங்கள் எடுக்கப்போகும் முயற்சிகள் எல்லாம் உங்கள் குடும்ப நலனுக்காக மட்டுமல்ல, உங்கள் தோழியின் நல்லதுக்காவும்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கட்டாயம் எல்லாம் சரியாகும்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004

வாசகிகள் கவனத்துக்கு,

பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

Tags :
× RELATED முகச்சுருக்கம் மறைந்து இளமையான தோற்றம் பெற!