×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

சிறிது சுக்குப் பொடியை புளியோதரையில் கலந்து வைத்தால், இரு நாட்களுக்கு புளியோதரை கெடாது.தோசை மாவு அளவுக்கு அதிகமாக புளித்து விட்டால், சிறிது சர்க்கரையை கலந்தால், சரியாகி விடும்.எவ்வகை உப்புமா செய்தாலும், அரைக்கீரையைப் பொடியாக நறுக்கி சேர்த்தால், உப்புமா சுவையும், சத்தும் கூடும்.எந்தப் பாயசம் செய்தாலும் 3 மஞ்சள் வாழைப்பழங்களை பிசைந்து சேர்த்துக் கொண்டால், ருசியாக இருக்கும்.

- இல.வள்ளிமயில், மதுரை.

சேப்பங்கிழகை வேகவைத்து, உரித்து, அரிசி மாவில் பிரட்டி, எண்ணெயில் சற்று வதக்கி பின் உப்பு, காரம் போட்டால் மொறு, மொறுவென்றிருக்கும். எண்ணெயும் அதிகம் செலவாகாது.

- ஆர்.பார்வதி, சென்னை.

அப்பளத்தை கட்டோடு வைக்கக் கூடாது. ஒவ்வொரு அப்பளத்தையும் சுத்தமாக துணியால் துடைத்து டப்பாவில் அடுக்கி வைத்தால் வண்டு வராமல் ஃப்ரஷ்ஷாக இருக்கும்.ரவை, மைதா, அரிசி ஆகியவற்றில் பூச்சி, புழுக்கள் வராமல் தடுக்க கொஞ்சம் வசம்பை தட்டி இந்தப் பொருட்கள் உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்தால் பூச்சி, புழுக்கள் தலைகாட்டாது. மாங்காய் தொக்கு போடுவதற்கு மாங்காய்களை சிரமப்பட்டுத் துருவிக் கொண்டிருக்க வேண்டாம். தோல்சீவி அந்த துண்டுகளை மிக்சியில் ஒரு சுற்று சுற்றினால் போதும். தொக்கு செய்ய சுலபமாக இருக்கும்.

- கே.ராஜேஸ்வரி, திருச்சி.

நாட்டுச் சர்க்கரையை ஒரு உலர்ந்த பாட்டிலில் கொட்டி, அதில் ஒரு ரொட்டித் துண்டை போட்டு வைத்தால், சர்க்கரை நன்றாக உதிர்ந்து உலர்ந்துவிடும். வெண்டைக்காய்களின் காம்புகளையும் தலைப்பகுதியையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைக்கும் வரை முற்றிப் போகாமல் இருக்கும்.

- எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

வாழைத்தண்டை நறுக்கி உப்பு, சாம்பார் பொடி, தக்காளி, சிறிதளவு பாசிப் பருப்பு போட்டு குக்கரில் வேக வைத்து, வெந்தவுடன் துருவிய தேங்காய், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு ஒரு கொதி வந்தவுடன் தாளித்து விட்டால் சுவையான புது மாதிரியான கூட்டு தயார்.வாழைப்பூவை தனியாக பொரியல் செய்வதை விட முருங்கைக் கீரையைச் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும். வாழைப்பூவை ஆய்ந்து விட்டு முழுசாய் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால் பூ அழகாக உதிர்ந்து விடும்.வெந்தயத்தை நன்கு வறுத்துப் பொடி செய்து காபித்தூளோடு கலந்து வைத்து காபி குடித்தால் அதிக சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

- ச.லெட்சுமி, செங்கோட்டை.

ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், சிறிது கறிவேப்பிலை இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கிய சாம்பாரில் போட்டு மூடினால் வாசனையுடன் நல்ல ருசியையும் தரும்.பச்சை மிளகாய், பொட்டுக் கடலை ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியபின் அரைத்து தேங்காய் சட்னி செய்தால் அது நீண்ட நேரம் கெடாதிருக்கும்.புடலை, அவரை, சௌசௌ போன்ற காய்களில் கூட்டு செய்யும் போது, சிறிதளவு உளுத்தம் பருப்பு, மிளகு, பெருங்காயம், தேங்காய் துருவல் இவற்றை வறுத்து அரைத்து விட வேண்டும்.

இது கம கம என்று வாசனையாகவும், தனி சுவையுடனும் இருக்கும். மிளகு உடலுக்கும் நல்லது. இதற்கு வர மிளகாய் சேர்க்க வேண்டாம்.நீர் மோரில் இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையுடன் கொஞ்சம் வெள்ளரிக்காய் துண்டுகளையும் போட்டு வைத்து விடுங்கள். வெயில் நேரத்தில் அதைக்குடிக்க உடல் குளிர்ச்சி அடையும்.

- வத்சலா சதாசிவன், சென்னை.

கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.வற்றல் குழம்பு செய்யும் போது கடைசியாக சிறிது மஞ்சள் பொடியும், மிளகுப் பொடியும் கலந்தால் அதன் சுவையே தனி!இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றும் போது சிறிதளவு உப்பைக் கலந்து வைத்தால் காலையில் கூழாக மாறாது.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி மாவில் கலந்து அடை வார்த்தால் மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும் அபாரம்.கேசரி செய்யும் போது கடைசியில் கொஞ்சம் வறுத்த கோதுமை மாவு ஒரு ஸ்பூன் - பயத்தம் பருப்பு மாவு, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கிளறினால் சேர்ந்தாற் போல் இருப்பதுடன் அசோகா அல்வா போல் சுவையாக இருக்கும். மைதா மாவு, சிரோட்டி ரவை இரண்டும் சம அளவு கலந்து சிறிது சர்க்கரைப் பொடி, நெய் சேர்த்து பிசைந்து சப்பாத்திகளாக இட்டு டைமண்ட் வடிவத்தில் கத்தரித்து எண்ணெயில் பொரித்தெடுக்க கரகரப்பாக இருக்கும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

சாலட்டில் தயிர் சேர்ப்பதற்கு பதில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது.எலுமிச்சைப் பழச்சாற்றில் சர்க்கரைப் போட்டு பருகுவதற்குப் பதில் சிறிதளவு உப்பு சேர்ப்பது நல்லது. உப்பு சேர்த்த எலுமிச்சை சாறு உடல் சோர்வை போக்கும்.

- கே.ராகவி, வந்தவாசி.

காய்ந்த ரொட்டியை துண்டுகளாக நறுக்கி நன்றாகக் காய விடவும். இவற்றை புலாவ், பிரியாணி ஆகியவற்றில் வறுத்துப் போட்டால் சுவையாக இருக்கும். முள்ளங்கி, முட்டைக்கோஸ் வேகும் போது வீசும் வாடையைத் தவிர்க்க அத்துடன் ஒரு காய்ந்த ரொட்டித்துண்டைப் போடவும். மீந்த இட்லிகளை சிறிது நல்லெண்ணெய் பிசறி உதிர்த்தால் கட்டிகள் இல்லாமல் இருக்கும்.

- இந்திராணி தங்கவேல், சென்னை.

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!