×

வென்றது 41 தங்கம்... 19 சில்வர்... 17 வெண்கலம்... கிடைத்தது காவலாளர் பணி...

நன்றி குங்குமம் தோழி

சட்டப் போராட்டத்தில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்

இது நடந்தது 2003ம் ஆண்டு. அரசு ஊழியர்கள் போராட்டம் மிகப் பெரிய அளவில் வெடிக்க. ஜெயலலிதா அரசு எஸ்மா, டெஸ்மா சட்டத்தை பயன்படுத்தி, வேலை வாய்ப்பை வழங்கிக் கொண்டிருந்தது. அப்போது மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்று 90க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற, மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரரான கோபி கண்ணன் வேலை கேட்டு தலைமைச் செயலகத்திற்கு தொடர்ந்து மனுக்களை அனுப்பிஉள்ளார். அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
 
தொடர்ந்து அவரின் குடும்பம் வறுமையில் தத்தளித்தது. சென்ற நாடுகளில் நமது தேசியக் கொடியைப் பறக்கவிட்டு, தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்து... தான் வாங்கிய மெடல்களை கழுத்தில் அணிந்தவாறு டை மற்றும் பிளேசர் அணிந்தவாறு, தான் பெற்ற கோப்பை மற்றும் சான்றிதழ்களை காட்சிப்படுத்திய நிலையில், நீண்ட விளக்குமாரோடு முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்திற்குள் நுழையும் பாதையை சுத்தம் செய்யத் தொடங்கினார் கோபி கண்ணன். அவரைச் சுற்றிலும் வஜ்ரா வேனைச் சேர்ந்த காவலர்களும், கருப்புப் பூனை படை மற்றும் பத்திரிகையாளர்கள் படை சூழ.. அவரின் போராட்டம் குறித்து கோபி கண்ணனிடம் பேசியதில்…

‘‘அந்நிய நாடுகளில் நம் தேசியக் கொடியை பறக்கவிட மிக நீண்ட தூரம் பயணித்து நாங்கள் வெற்றியைத் தட்டிக் கொண்டு வருகிறோம். ஆனால் நம் நாட்டில் பாராட்டும் வாழ்த்தும் மட்டுமே குவிகிறதே தவிர எங்கள் வறுமையைப் போக்க அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளை அங்கீகரிப்பதே இல்லை.

இரண்டு வயதில் எனக்கு போலியோ அட்டாக். காலிஃபர் அணிந்து பத்தடி நடப்பேன். அதைத்தாண்டி வீல்சேர். வெளியில் போக மூன்று சக்கர வாகனம். எனது அப்பா கூலித் தொழிலாளி. என்னுடன் சேர்த்து வீட்டில் ஐந்து குழந்தைகள். குடும்ப வறுமையால் 7ம் வகுப்பு படித்தபோதே வொர்க் ஷாப் ஒன்றில் கார்களுக்கு அடியில் படுத்து பெயிண்ட் அடிக்கும் வேலை செய்ய ஆரம்பித்து.. அப்படியே பெரியார் பேருந்து நிலைய எஸ்டிடி பூத்தில் இரவு 2 மணி வரை வேலை செய்வேன். ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்கிய காலங்களும் இருந்தது. பத்தாம் வகுப்பில் பெயிலாக படிப்பைத் தொடர முடியாத சூழல்.

சனி, ஞாயிறுக் கிழமைகளில் ரேஸ் கோர்ஸ் மைதானம், மெஜுரா கல்லூரி மைதானம் என மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் (athletics) பங்கேற்று, குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் என தொடர் பயிற்சிகளில் வெறித்தனமாக இறங்கினேன். முதலில் மாவட்ட அளவில் தொடங்கிய எனது வெற்றிப் பயணம் மாநில எல்லைகளைக் கடந்து, சர்வதேசப் போட்டிகளிலும் தடம் பதித்து தொடர் வெற்றிகளாகக் குவிக்கத் தொடங்கினேன்.

தொடர்ந்து 10 வருடங்கள் விளையாடி விட்டு திரும்பிப் பார்த்தபோது, என் குடும்பம் வறுமையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. பாராட்டும் சந்தோசமும் கிடைத்தாலும் வறுமை எங்களை வாட்டியது. நான் பெற்ற மெடல்களையும், சான்றிதழ்களையும் பார்த்து கலெக்டரில் தொடங்கி அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். பாராட்டுவார்கள். வேலை கேட்டால் ஒதுங்குவார்கள். 10வது பெயில் என சிலர் என்னை நிராகரித்தார்கள். வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்பட்டது. இருந்தாலும் அஞ்சல் வழியாக எம்.ஏ. முடித்தேன்.

டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளை சந்திக்க பலமுறை ரயிலின் கழிப்பறை வாயில்களில் படுத்து பயணித்து விளையாடிவிட்டு வெற்றியுடன் திரும்பி இருக்கிறேன். பல நேரங்களில் சாப்பாட்டிற்கே பணம் இருக்காது. ஆனால் ரயில் நிலையத்தில் மாலை மரியாதையுடன் என்னை வரவேற்பார்கள். பத்து நாட்கள் தொடர்ந்து பாராட்டு மழையாய் எனக்கு குவியும். பள்ளி கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்கச் சொல்வார்கள். அதன்பின் ‘நீ சாப்பிட்டியா? என்ன செய்யுற? உன் குடும்பம் எப்படி நடக்குதென’ யாரும் கவலைப்பட்டதில்லை. அரசாங்கமும் என் திறமையை அங்கீகரித்து வேலை தரவில்லை.

என் குடும்ப வறுமையை நீங்கி, மூன்று வேளையும் சாப்பிட எனக்கு அரசு வேலை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தலைமைச் செயலகத்திற்கு மனுக்களைத் தொடர்ந்து அனுப்பியும் பதில் இல்லை என்பதை, என்னை சுற்றி வளைத்த காவலர்களிடத்திலும், பத்திரிகையாளர்களிடத்திலும் காட்டி கலங்கி நின்றேன். என் நிலை உணர்ந்த காவலர்கள் எனது கோரிக்கையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்கு கொண்டு செல்ல, உடனடியாக வேலை கொடுக்கச் சொல்லி அவரும் உத்தரவிட்டார். மறுநாள் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளிலும் என்னைப் பற்றிய செய்தி பரவியது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டி.ஆர்.டி அலுவலகத்தில் காவலாளி பணி கொடுத்தார்கள். சாப்பாட்டிற்கு வழி கிடைத்தால் போதும் என்ற மனநிலையில், பணி ஆணையைப் பெற சென்றால், மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் என்று குறிப்பிடாமலே தினக்கூலி என குறிப்பிட்டு வேலை வந்தது. ஆனால் மறுநாள் எல்லா நாளிதழ்களிலும் எனக்கு அரசு வேலை வழங்கியதாக விளம்பரம் வந்தது. மூன்று மாதத்தில் பணி நிரந்தரம் செய்வதாய் சொல்லியே என்னை அலைக்கழித்து 5 ஆண்டுகளைக் கடத்திவிட்டார்கள்.

பிறகு ஒருகட்டத்தில் நீ தினக் கூலி இல்லை, ஒப்பந்த தொழிலாளர். உனக்கு பணி நிரந்தரம் இல்லை என்றார்கள். தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் மாவட்டக் கலெக்டரை அணுகியும் முறையான பதில் இல்லை. 2008 அரசாணை சட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினால் அவர்களைத் தொகுப்பூதியதாரர்களாக மாற்றலாம் என சட்டம் சொல்ல, அதை மேற்கோள் காட்டியும், தொடர்ந்து என்னை அலட்சியப்படுத்தி தட்டிக் கழித்தார்கள். ஒரு கட்டத்தில் உன் ஒப்பந்தப் பணிக் காலம் முடிந்துவிட்டது.

நீ வீட்டுக்குப் போகலாம் என்றார்கள்.மாற்றுத் திறனாளிகள் சங்க மாநிலத் தலைவர் ப.சிதம்பரம்நாதன் அவர்களை நேரில் சந்தித்து என் நிலையை முறையிட்டேன். அவர் அறிவுறுத்்தலில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரபாகரன் சார் என் வழக்கை எடுத்து நடத்தி வருகிறார். உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் சார் முன்பு வழக்கு விசாரணைக்கு வர, மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் எனக்கு அரசு பணி வழங்க வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை தள்ளிவைத்தார். அதன் பின் எனக்கு ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் பணியான கடைநிலை ஊழியர் பணியே வழங்கினார்கள்’’ என்றார்.

கோபி கண்ணனின் வழக்கை நடத்தி வரும் உச்சநீதி மன்ற வழக்கறிஞர் பிரபாகரனிடம் பேசியபோது..151 அரசு ஆணைப்படி இயல்பாய் உள்ள ஒருவர் விபத்தில் சிக்கி, மாற்றுத் திறனாளியானாலே பணி நீக்கம் செய்தல் கூடாது. அப்படியிருக்க மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் எனத் தெரிந்தும், பணியில் இருந்தவரை எப்படி நீக்கினார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டத்தில் தற்காலிக பணியோ, ஒப்பந்தப் பணியோ 450 நாட்களுக்கு மேல் பணியாற்றினாலே பணி நிரந்தரம் செய்யலாம் என இருக்கும்போது, இவரை பணி நீக்கம் செய்தது எந்த அடிப்படையில் என, கோபி கண்ணன் வழக்கை எடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் பெட்டிஷன் தாக்கல் செய்ததில், வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் வாதத்திற்கு வந்தது.

தொடர்ந்து வாதத்திற்குப் பிறகு மதிப்பிற்குரிய நீதிபதி கிருபாகரன் சார் அவர்கள் கடந்த மாதம் சிறப்புமிக்க கேள்விகள் சிலவற்றை நீதிமன்றத்தில் முன் வைத்தார். 80% மாற்றுத்திறன் கொண்ட ஒருவர் நமது நாட்டிற்காக 42 தங்கம் உட்பட 90க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்று பெருமை சேர்த்திருக்கிறார்.

இதை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், கடைநிலை ஊழியருக்கான அலுவலக உதவியாளர் பணியைக் கொடுத்து அவரை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள். இது எத்தகைய அவகாரகரமான செயல். தமிழக அரசு இதில் தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டது. ஒரு விளையாட்டு வீரரை நாம் எந்த அளவு மதிக்க வேண்டும். அவரை எவ்வளவு கௌரவப்படுத்த வேண்டும். ஒரு மனிதன் தகுதியை நிர்ணயிப்பது படிப்பு மட்டும்தானா? அப்படியென்றால் அவரின் தனிப்பட்ட திறமை?

நமது நாட்டில் கிரிக்கெட் ஸ்டார், பொலிடிக்கல் ஸ்டார், சினிமா ஸ்டார்களுக்கு மட்டுமே மரியாதை உள்ளது. 10வது படித்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அலுவலக உதவியாளர் பணி கொடுப்பீர்களா? அதை அவர் ஏற்பாரா? கிரிக்கெட் வீரர்கள் என்றால் ஒரு நீதி. மற்ற விளையாட்டு வீரர்கள் என்றால் ஒரு நீதியா? எதை வைத்து அளவீடை தீர்மானிக்கிறீர்கள்.

நீதி என்பது எல்லோருக்கும் இங்கு ஒன்றுதான்.பஞ்சாபில் 8வது படித்த விளையாட்டு வீரருக்கு டி.எஸ்.பி. பணி. 7வது படித்தவருக்கு ரிசர்வ் வங்கி மேலாளர் பணி. ஆந்திர மாநில அரசு பிவி சிந்துவுக்கு டெபுடி கலெக்டர் பணி வழங்கி சிறப்பித்துள்ளது. மகேந்திரசிங் டோனிக்கு இராணுவத்தில் மரியாதைக்குரிய லெப்டினென் கர்னல் பணி வழங்கி சிறப்பித்துள்ளார்கள். அப்படியென்றால் அதற்கு சமமான பதவியை தமிழக அரசோ மத்திய அரசோ மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஏன் வழங்கி அவர்களையும் கௌரவிப்பதில்லை.

விளையாட்டுத் துறையில் இத்தனை மெடல்களை வாங்கிக் குவித்த ஒருவரை கௌரவப்படுத்த வேண்டும் என்று ஏன் அரசு நினைக்கவில்லை. கேட்டால் கல்வித் தகுதி இல்லை என்கிறீர்கள். அப்படியென்றால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் அதைத்தானே சொல்ல வேண்டும். கல்வித் தகுதி என்பது ஸ்போர்ட்ஸ் பெர்ஷனாலிட்டிகளுக்கு வராது. விளையாட்டில் சிறப்பு கவனம் வைத்து பயிற்சி எடுக்கும் அவர்களால் எப்படி கல்வியிலும் கவனம் செலுத்த இயலும். மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் தங்களின் உடல் ரீதியான பிரச்சனைகளைத் தாண்டி விளையாட்டிலும் மிளிர்கிறார்கள் என்பதால்தானே பாரா ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்துகிறார்கள்.

மற்ற விளையாட்டுகளில் சர்வதேச தரத்தில் விளையாடும் வீரர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தை மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் கொடுக்க வேண்டும். கௌரவமிக்க உயர் பதவிகளைக் கொடுத்து இவர்களையும் அங்கீகரித்தால்தான் மற்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களும் ஆர்வமாக விளையாட்டுக்களில் சோர்வின்றி பங்கேற்பார்கள்.

வசதியின்றி, எந்தவொரு பின்புலமும் இல்லாமல், சுய உழைப்பில் முன்னேறி, நமது நாட்டுக்காக விளையாடிப் பெருமை சேர்த்த ஒருவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா? கல்வித் தகுதியை கருத்தில் கொள்ளாமல், ஒருவரின் தனித் திறனின் அடிப்படையில் நல்ல பதவியை வழங்குதல் வேண்டும்.

இதுகுறித்து முடிவு செய்துவிட்டு வரும் 10ம் தேதி தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் தலைமைச் செயலாளர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாக எனக்கு பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்’’ என்றவர், ேகாபி கண்ணன் மூலமாக  அனைத்து மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் நல்ல நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் விடைபெற்றார்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.டி.மணிகண்டன், ஆ.வின்சென்ட்பால்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!