மரவள்ளி கிழங்கில் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை; விவசாயிகளுக்கு செய்முறை பயிற்சி

தோகைமலை: தோகைமலை அருகே சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கில் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கரூர் மாவட்டம் தோகைமலை அருகே புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக மரவள்ளியை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் வட்டம் காக்காயம்பட்டி கிராமத்தில் நடந்த இந்த பயிற்சிக்கு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம் தலைமை வகித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் விவசாயிகளுக்கு மரவள்ளியில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்களை ஒருங்கிணைந்த முறையில் சாகுபடி தொழில் நுட்பங்களை கையாள்வதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தனர். குறிப்பாக மரவள்ளியில் பாதிப்பை உண்டாக்க கூடிய மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த ஒட்டுண்ணியை பயன் படுத்தலாம். முதலாவதாக தென் அமெரிக்காவை தாயகமாக கொண்ட (அனாகைரஸ் லோபசி) என்ற ஒட்டுண்ணியை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஏத்தாப்பூரில் செயல்பட்டு வரும் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பெறப்பட்டு உள்ளது.

இந்த ஒட்டுண்ணியை பாதிப்படைந்த செடிகளில் எப்படி இட வேண்டும், மரவள்ளியில் ஒருங்கிணைந்த சாகுபடி தொழில்நுட்பங்கள், உர பரிந்துரை மற்றும் மரவள்ளி பூஸ்டர் பயன்படுத்துவது என்று விவசாயிகளுக்கு செய்முறை விளக்கத்துடன் அளிக்கப்பட்டது. மேலும் மற்ற பூச்சியான வெள்ளை ஈ மற்றும் முக்கிய நோய்களான தேமல் நோய், இலைப்புள்ளி நோய் மற்றும் கிழங்கு அழுகல் நோய்களின் பாதிப்புகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் தொழில்நுட்ப வல்லுநர் (தோட்டக்கலை) கவியரசு, ஆய்வக உதவியாளர் (நோயியல்) தமிழ்செல்வன், தோட்டக்கலை அலுவலர் பிரேமா, உதவி தோட்டக்கலை அலுவலர் பரமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். இதில் போத்துராவத்தன்பட்டி, காக்காயம்பட்டி, செம்பாறைப்பட்டி கிராமத்தில் இருந்து 30 விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Related Stories: