×

தெய்வச் சேக்கிழார் பெருமானுக்கு அரசு விழா எடுப்பதில் பெருமகிழ்ச்சி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

சென்னை: குன்றத்தூர், திருநாகேசுவரம், தொண்டர் சீர்புராணம் தெய்வச் சேக்கிழார் பெருமான் அரசு மூன்றாம் நாள் விழாவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் திருமுறை ஓதுதல் போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பிறகு அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கையில் பெரியபுராணம் கண்ட சேக்கிழார் பிறந்த தலமான குன்றத்தூரில் அவரின் திருநட்சத்திரத்தையொட்டி ஆண்டுதோறும் பத்து நாட்களுக்கு விழா கொண்டாடப்படுகிறது.

அதில் ஒரு நாள் மட்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல், மூன்று நாட்களுக்கு அரசு விழாவாக வெகு சிறப்பாக நடத்தப்படும் என்று சட்டமன்ற அறிவிப்புகளில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 26ல் சேக்கிழார் பெரிதும் வலியுறுத்தவது சமய நெறியே; சமுதாய நெறியே என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும், 27ல் சேக்கிழாரும், தமிழிசையும் சிறப்பு சொற்பொழிவும், நிறைவு விழாவாக 28ல் குன்றத்தூரில் நடைபெற்ற மூன்றாம் நாள் அரசு விழாவில், மங்கள இசை, இறை வணக்கம், பாரதி திருமகன் குழுவினரின் வில்லுப்பாட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தெய்வப்புலவர் சேக்கிழார் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவனடியார், சிவபக்தரான அவர் அறுபத்து மூன்று சைவநாயன்மார்களின் வாழ்க்கை கதைகளை விவரிக்கும் பெரிய புராணத்தை தொகுத்து எழுதினார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்தவர். சோழநாட்டு திருநாகேஸ்வரம் என்னும் ஊரில் எழுந்தருளிய இறைவனிடம் பேரன்பு பூண்டு நாள் தோறும் வழிப்பட்டு வந்தவர். அங்கு நடராஜ சபையையும், மண்டபத்தையும் கட்டி பல திருப்பணிகளையும் செய்தவர். அரசியல் பணியிலிருந்து விடுபட்டு ஊர் திரும்பி தாம் பிறந்த குன்றத்தூரில் திருநாகேஸ்வரம் என்ற பெயரில் திருக்கோயில் அமைத்து வட திருநாகேஸ்வரம் எனப் பெயரிட்டு வழிப்பட்டு வாழ்ந்தவர்.

திருக்கோயிலின் மூலவர் சேக்கிழார் பெருமானுக்கு பிரதி மாதம் பூசம் நட்சத்திரம் அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. மேற்படி திருவிழாவில் 4 வது நாள் திருவிழாவின் போது சேக்கிழார் தான் கட்டிய திருநாகேஸ்வரம் திருக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வதாக ஒரு ஐதீகம். இப்படி பட்ட பெருமகனாருக்கு இந்து சமய அறிநிலையத்துறை  3 நாள் அரசு விழா நடத்துவதில் பெருமிதம் கொள்கிறது. இனி வருங்காலங்களில் ஆண்டு தோறும் சீரும் சிறப்புமாக அரசு விழா நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Sekhashar Peruman ,Minister ,P. K. SegarBabu , Minister BK Sekarbabu's speech on the occasion of the Government Ceremony for the Goddess Cheikh
× RELATED நலத்திட்ட உதவிகள் சேரும் வகையில் நாம்...