தேரில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பரிதாப பலி: 8 பேர் படுகாயம்

திருமலை: விழா முடிந்து தேரை ஷெட்டில் நிறுத்துவதற்காக இழுத்து சென்றபோது உயரழுத்த மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 8க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலங்கானா மாநிலம் நல்ெகாண்டா மாவட்டம் கேதேபள்ளியில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கென கடந்த ஆண்டு இரும்பால் ஆன புதிய தேர் உருவாக்கப்பட்டது.

கடந்த மாதம் நடந்த ராமநவமியின்போது இந்த தேரில் சுவாமி வீதி உலா நடந்தது. அதன்பின்னர் கோயில் அருகே தேரை நிறுத்தியிருந்தினர். தேரை நிறுத்துவதற்காக சுமார் அரைகிலோ மீட்டர் தொலைவில் ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. விழா முடிந்து சில வாரங்களாகியும் தேர் வெளியே நிறுத்தப்பட்டு மழை, வெயிலில் இருப்பதால் அதனை மீண்டும் ஷெட்டில் நிறுத்த கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று மாலை 10க்கும் மேற்பட்டோர் தேரை இழுத்துச்சென்றனர். ஷெட் பகுதியை அடைந்தபோது அங்கு வெளியே தாழ்வாக செல்லும் மின் கம்பியின் மீது இரும்புத்தேர் உரசியது. இதில் தேரில் மின்சாரம் பாய்ந்ததோடு, அதனை இழுத்துவந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜபோயினயாதையா (35), போகு மோகனையா (40), தாசரி ஆஞ்சநேயலு (30) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். 8க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கண்ணிமைக்கும் ேநரத்தில் நடந்த சம்பவத்தால் அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் உட்பட பலர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு தேவரகொண்டா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: