கட்ட பஞ்சாயத்தை ஏற்க மறுத்தார்; காதல் கணவருடன் செல்ல அடம்பிடித்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை

திருமலை: கட்ட பஞ்சாயத்தை ஏற்க மறுத்து காதல் கணவருடன்தான் செல்வேன் என அடம்பிடித்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். தெலங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டம் நர்னூரைச் சேர்ந்தவர் தேவிதாஸ்-சாவித்திரிபாய் தம்பதி. இவர்களது மகள் ராஜேஸ்வரி (25). இவரும் அதேகிராமத்தை சேர்ந்த ஷேக்அலிம் என்பவரும் காதலித்துள்ளனர்.

இதையறிந்த ராஜேஸ்வரியின் பெற்றோர், மகளை கண்டித்துள்ளனர். இதனிடையே காதலர்கள் இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் அவர்கள் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மகாராஷ்டிராவில் வாடகை வீட்டில் வசித்தனர். இதற்கிடையில் தேவிதாஸ், தனது மகளை காணவில்லை என அதிலாபாத் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்த வந்தனர்.

இதையறிந்த ராஜேஸ்வரியும், ஷேக்அலிமும் தங்கள் கிராமமான நார்னூருக்கு கடந்த வாரம் வந்தனர். அந்த கிராமத்தில் ஊர் பெரியவர்கள் தலைமையில் பஞ்சாயத்து நடந்தது. அப்போது, காதலர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். எனவே இருவரும் பிரிந்து விட வேண்டும் என கூறி ராஜேஸ்வரியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜேஸ்வரி தனது கணவருடன் செல்வதாக கூறி வீட்டில் பெற்றோருடன் சண்டையிட்டுள்ளார்.

நீண்ட நேரம் நடந்த கடும் வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த தேவிதாஸ், வீட்டில் இருந்த கத்தியால் மகள் ராஜேஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அதிலாபாத் போலீசார் சம்பவ இடம் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தந்தை தேவிதாசை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: