உலக சாதனை நிகழ்ச்சிக்காக கோபியில் 5 கி.மீ தூரத்திற்கு சிலம்பம் சுழற்றிய வீரர்கள்

கோபி: சிலம்பம் கலையை காக்கவும், நோபல் உலக சாதனைக்காகவும் கோபியில் 5 கி.மீட்டர் தூரத்திற்கு வீரர், வீராங்கனைகள் சிலம்பம் சுழற்றி சென்றனர்.

கோபியில் செயல்பட்டு வரும் தனியார் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் கலையை காக்கவும், நோபல் உலக சாதனைக்காகவும், ஈரோடு மாவட்டம் முழுவதும் இருந்து 5 வயது முதல் 15 வயது வரை உள்ள 120 சிலம்ப வீரர்கள் கோபி வரவழைக்கப்பட்டனர்.

சிலம்பம் வீரர்கள் நாய்க்கன்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து புதுப்பாளையம், பேருந்து நிலையம், அண்ணாபாலம், தினசரி மார்க்கெட், கச்சேரிமேடு, ல.கள்ளிப்பட்டி, நல்லகவுண்டன்பாளையம், லக்கம்பட்டி வழியாக கோபி-சத்தி சாலையில் கரட்டடிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வரை 5 கி.மீ தூரத்துக்கு சிலம்பம் சுழற்றி சென்றனர். இதற்கு முன்பு வரை தனியாக ஒருவர் மட்டுமே 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிலம்பம் சுழற்றி சென்ற நிலையில் 120 வீரர்கள் ஒரே நேரத்தில் கலந்து கொள்வது முதல் முறையாக உள்ளதால் நோபல் உலக சாதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த போட்டியில் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குறிப்பாக அதிகளவில் மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். இவர்களது சாதனையை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

Related Stories: