வீடுபுகுந்து பெற்றோர் முன்னிலையில் சிறுமியை கடத்திச் சென்று தாலிகட்டி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது

அண்ணாநகர்: சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவர், கடந்த 22ம் தேதி கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், ‘எங்கள் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார்(20). இவர் கடந்த 21ம் தேதி எனது வீட்டில் அத்துமீறி புகுந்து எனது மகளை திருமணம் செய்து தரும்படி கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நாங்கள் மறுக்கவே வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு மகளை தனது பைக்கில் கடத்திச்சென்றுவிட்டார்.

எனவே, மகளை கண்டுபிடித்து தர போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார். இதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செல்போன் டவர் மூலமாக விசாரணை நடத்தியதில் மதுராந்தகத்தில் பிரவீன்குமார் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆய்வாளர் குணசேகரன், உதவி ஆய்வாளர் பூபதி ஆகியோர் தலைமையில் போலீசார் மதுராந்தகம் விரைந்தனர். அங்கு அவரது உறவினர் வீட்டில் சிறுமியுடன் இருந்த பிரவீன்குமாரை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை கோயம்பேடு காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

இதில், கோயம்பேடு திருவீதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் என்பதும் கம்பெனி நடத்திவருவதும் தெரியவந்தது. கடந்த இரண்டரை வருடமாக சிறுமியை காதலித்து வந்துள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிந்ததால் திருமணம் செய்துவைக்கும்படி கேட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் மறுத்துவிட்டதால் சிறுமியை கடத்திச் சென்று மதுராந்தகத்தில் உள்ள ஒரு கோயிலில் தாலி கட்டிவிட்டு உறவினர்கள் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இவ்வழக்கு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், ‘’வீடு புகுந்து சிறுமியை பைக்கில் கடத்திச் சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்துள்ளார்’ என்று தெரியவந்தது. இதையடுத்து போக்சோ உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறுமியை குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: