சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வருடன் அன்புமணி சந்திப்பு: பாமக தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து பெற்றார்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அன்புமணி ராமதாஸ் சந்தித்து, பாமக தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து பெற்றார். பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். ஜி.கே.மணிக்கு கவுரவ தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.

அப்போது பாமக கவுர தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். சந்திப்பின் போது பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.கே.மணி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சந்திப்புக்கு பின்னர் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டியில், பாமக தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களை சந்தித்து அவர்களுடைய வாழ்த்துக்களை பெற வேண்டும் என்று முடிவு செய்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவருடைய வாழ்த்துகளை பெற்றேன்.

அவரும் மனதார வாழ்த்தினார். மேலும் கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாவட்டமாக, கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். முக்கியமாக குடிநீர் பிரச்னைகள், சேலம் உபரி நீர் திட்டம், அத்திக்கடவு திட்டம், பாலாறு-தென்பெண்ணை ஆறு இணைக்கும் திட்டம், அனைத்து ஆறுகளிலும் தடுப்பு அணை கட்டும் திட்டம் உள்ளிட்டவைகளை செயல்படுத்த வேண்டும். பாமக 2.0 செயல் திட்டம் மூலம் மக்களின் அன்றாட பிரச்னைகளை சரி செய்து மக்களின் ஆதரவை பெற போகிறோம். இனி பாமக 2.0 செயல் திட்டத்தை படிப்படியாக தமிழகத்தில் செயல்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடியுடன் சந்திப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் கவுரவ தலைவராக தேர்வாகியுள்ள ஜி.கே.மணியும் எடப்பாடியிடம் வாழ்த்து பெற்றார். முன்னதாக மதிமுக பொது செயலாளர் வைகோவை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் அன்புமணி ராமதாஸ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Related Stories: