25 ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்தார்: மீன் சுத்தம் செய்யும் தொழில் செய்து மகளை டாக்டராக்கிய தாய்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை டவுன் விஸ்தரிப்பு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ராஜாரமணி(46). இவர்களுக்கு ரவிச்சந்திரன்(25) என்ற மகன், விஜயலட்சுமி(24) என்ற மகள் உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன் ராஜேந்திரன் இறந்து விட்டார். இதனால் தாய் ராஜாரமணி, மயிலாடுதுறை நகராட்சி மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தம் செய்து கொடுக்கும் தொழில் செய்து குழந்தைகளை காப்பாற்றி வந்தார்.

சிறுவயதிலேயே ரவிச்சந்திரனுக்கு நோய் தாக்கப்பட்டதால் பள்ளிக்கு செல்லவில்லை. விஜயலட்சுமி மட்டும் படித்து வந்தார். தனது மகள் ஐஏஎஸ் ஆக வேண்டுமென தாய் நினைத்தார். ஆனால் விஜயலட்சுமி, மருத்துவராகி சேவை செய்ய வேண்டுமென எண்ணினார். இதற்கு ராஜாரமணியும் சம்மதம் தெரிவித்து பிளஸ்1 மற்றும் பிளஸ்2 படிப்புக்கு நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் சேர்த்தார்.

பிளஸ் 2வில் விஜயலட்சுமி எடுத்த மதிப்பெண் அடிப்படையில் 2014ம் ஆண்டு மருத்துவக்கல்லூரிக்கான கட்ஆப் மார்க் 180க்கு 170 மட்டுமே இருந்ததால் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் தனது கனவை கலைத்து விட்டு வேறு வழியின்றி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங்கை விஜயலட்சுமி படித்தார். மகளை எப்படியாவது மருத்துவம் படிக்க வைக்க வேண்டுமென நினைத்த ராஜாரமணி, ரஷ்யாவில் உள்ள ஸ்டாவ்ரோபோல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரூ.7 லட்சம் செலவில் மருத்துவ படிப்பில் சேர்த்தார்.

இதனால் இன்ஜினியரிங் படிப்பை விஜயலட்சுமி 3 மாதத்தில் கைவிட்டார். மகள் மருத்துவம் படிக்க ராஜாரமணி தான் வாங்கிய வீட்டையும் விற்று செலவு செய்தார். ஆண்டுக்கு மகள் படிப்புக்காக ரூ.5 லட்சம் வரை செலவானது. மீதமுள்ள தொகையை மார்க்கெட்டில் உள்ளவர்களின் உதவியோடும், வட்டிக்கு வாங்கியும் மகளின் படிப்பை தொடர செய்தார். 6 ஆண்டு மருத்துவ படிப்பை முடித்து தேர்விலும் வெற்றி பெற்று கடந்தாண்டு விஜயலட்சுமி டாக்டராக தமிழகம் திரும்பினார்.

இதுகுறித்து மாணவி விஜயலட்சுமி கூறுகையில், இந்திய மருத்துவ கழகத்தில் பதிவு செய்வதற்காக எக்சிட் என்ற தேர்வை எழுத வேண்டும். இதற்காக இரவு பகல் பாராமல் படித்து வருகிறேன். வரும் ஜூன் மாதம் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக பணியாற்ற உள்ளேன். எனது அண்ணனின் நோய் மற்றும் தாயின் உடல்நிலையை மனதில் கொண்டு இந்த சமூகத்தில் மருத்துவ சேவையை அளிக்கவுள்ளேன். என்னால் இயன்ற அளவுக்கு எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வேன். நான் படிப்பதற்கு பலர் உதவியுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் என் தாய் வியர்வை சிந்தி சம்பாதித்து என்னை படிக்க வைத்துள்ளார் என்றார். தாய் ராஜாரமணி கூறுகையில், கணவனை இழந்ததால் உறவினர்களின் ஆதரவு விலகியது. என் தாயுடன் மீன் சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு மகளை படிக்க வைத்தேன். என் மகள் மருத்துவராக வருவதற்கு இந்த சமூகம் செய்த உதவிக்கு எனது மகள் சேவை செய்ய வந்துள்ளார் என்றார்.

Related Stories: