ராமேஸ்வரத்தில் இன்று 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்: நீராட முடியாமல் பக்தர்கள் சிரமம்

ராமேஸ்வரம்: வைகாசி அமாவாசையான இன்று ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடல் திடீரென உள்வாங்கியது. இதனால் பக்தர்கள் நீராட முடியாமல் சிரமப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடல் பகுதியில் பருவகால சீதோஷ்ணநிலை மாற்றத்தினால் குறிப்பிட்ட மாதங்களில் இரவு நேரத்தில் கரைப்பகுதியில் இருந்து உள்வாங்கி காணப்படும் கடல் பகல் நேரத்தில் மீண்டும் வழக்கமான நிலைக்கு வந்து விடும்.

இதனை கடல்நீர் உள்வாங்குதல் என்று கூறுவர். இரவு நேரத்தில் கடல்நீர் வற்றி பகல் 11 மணிக்கு மேல் வழக்கமான நிலைக்கு திரும்புவதால் கடல் வற்றுக்காலம் என மீனவர்கள் அழைப்பார்கள். கரையிலிருந்து கடல் உள்வாங்கி கொள்வதால் கரையோரத்தில் இருக்கும் பாறைகள் வெளியில் தெரிவதுடன் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருக்கும் படகுகளும் தரைதட்டி நிற்கும். நடப்பு சீசனில் கடல் உள்வாங்கும் நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுவது இயல்பான ஒன்றாக உள்ளது.

ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் இன்று காலை கடல் உள்வாங்கி காணப்பட்டது. கரையிலிருந்து சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்கியதால் பக்தர்கள் நீராடும் பகுதியில் கற்பாறைகள் வெளியே தெரிந்தன. இருப்பினும் கரையிலிருந்து சிறிது தூரம் நடந்து சென்று ஆழமான கடல் பகுதியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பொதுவாக பக்தர்கள் தீர்த்தமாடும் பகுதியில் கடலடிக்கு அடியில் கற்பாறைகள் நிலத்திற்குள் புதைந்து காணப்படும்.

ஒரு சில இடங்களில் பாறைகள் நிலத்திற்கு மேல் இருப்பதால் கடலில் தீர்த்தமாடும் பக்தர்களின் கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டு காயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் கை, கால்கள் உடைந்த நிலையில் பூஜை செய்யமுடியாத சுவாமி சிலைகளை தீர்த்த கடல், ஆறு போன்றவற்றில் போடும் வழக்கத்தை இந்துக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இது போன்ற சேதமடைந்த ஏராளமான சிலைகளை அக்னிதீர்த்த கடலில் போட்டு செல்கின்றனர்.

பெரும்பாலும் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் இந்த சிலைகள் போடப்படுவதால் சேதமடைந்த கற்சிலைகளும் தீர்த்தமாடும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. இதனால் தீர்த்தமாடும் பகுதியில் கடலடி நிலத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் கற்பாறைகளையும், கடலுக்குள் கிடக்கும் சேதமடைந்த கல் மற்றும் சிமென்ட் சிலைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: