தர்மபுரி அருகே இன்று காலை பயங்கரம்: செங்கல் சூளை அதிபர் வெட்டிக்கொலை

தர்மபுரி: பென்னாகரம் அருகே வழித்தட பிரச்னையில் பஞ்சாயத்து பேசிய செங்கல் சூளை அதிபரை வெட்டிக்கொலை செய்த லாரி டிரை வரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே சடலத்துடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த சின்னம்பள்ளி கோவிலிகோம்பை பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (53). செங்கல் சூளை வைத்து நடத்தி வந்த இவர், மாடுகள் வைத்து பால் விற்பனையும் செய்து வந்தார்.

இதே பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன் (30). லாரி டிரைவர். இவருக்கும் உறவினர்களுக்கும் இடையே வழித்தட பிரச்னை இருந்து வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஊர் பிரமுகர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். செங்கல்சூளை அதிபரான கந்தசாமியும் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார். அவர் எதிர்தரப்பினருக்கு சாதகமாக பேசியதால் அவர் மீது குபேந்திரன் கடும்கோபத்தில் இருந்தார்.

இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை 6 மணிக்கு பால் கறந்து விற்பனை நிலையத்திற்கு பைக்கில் கந்தசாமி எடுத்துச்சென்று கொண்டிருந்தார். கோவிலிகோப்பை பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே சென்றபோது குபேந்திரன் டூவீலரில் வந்து வழிமறித்து நிலப்பிரச்னையில் பஞ்சாயத்து பேசியது தொடர்பாக கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குபேந்திரன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் கந்தசாமியின் கழுத்தில் வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து குபேந்திரன் டூவீலரில் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பெரும்பாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். இதனிடையே கந்தசாமியின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கொலையை கண்டித்தும், கொலையாளியை உடனே கைது செய்யக்கோரியும் பென்னாகரம்-மேச்சேரி சாலையில் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதனிடையே கொலை செய்து விட்டு தப்பிய குபேந்திரன், போலீசில் சரண் அடைவதற்காக அதியமான்கோட்டை அருகே உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக குடியிருப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கந்தசாமியை கடந்த சில நாட்களாக குபேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் காரில் பின்தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும்,

திட்டமிட்டு கந்தசாமியை கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்த உறவினர்கள், கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் 4 பேரையும் கைது செய்ய வேண்டும் என 2 மணி நேரத்திற்கும் மேலாக சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர். தொடர்ந்து கந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து குபேந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: